‘மூட் ஆஃப் தி நேஷன்’ எனும் தலைப்பில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இப்போது மக்கள் மத்தியில எந்த கட்சிக்கு ஆதரவு இருக்கிறது என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது இந்தியா டுடே செய்தி ஊடகம்.
ஜனவரி 2-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் நாடெங்கிலும் உள்ள பல்வேறு மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த 1,25,123 பேரை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டிருக்கிறார்கள். இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இன்றைய சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும், 343 தொகுதிகளை அந்த கூட்டணி கைப்பற்றும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 232 தொகுதிகளை ஜெயித்த இந்தியா கூட்டணி இப்போது தேர்தல் நடந்தால் வெறும் 188 இடங்களைத்தான் ஜெயிக்கும் என்றும் இந்த கருத்து கணிப்பு சொல்கிறது.
ஒட்டு மொத்த இந்தியாவைப் பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்குதான் பலம் அதிகம் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 52 சதவீதம் பேர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகவும், 21 சதவீதம் பேர் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவும், 20 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 47 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அந்த ஆதரவு இப்போது 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதனால் இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும் என்று இந்த கருத்துக் கணிப்பு அடித்துச் சொல்கிறது.
பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை, 2024 நாடாளுமன்ற தேர்தல்ல 18 சதவீத வாக்குகள் கிடைத்தன. அந்த மக்கள் ஆதரவு இப்போது 21 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஆனால் என்னதான் வாக்கு சதவீதம் அதிகரிச்சாலும், தொகுதிகளை ஜெயிக்கற அளவுக்கு பாஜக ஆதரவு கூடலைன்னு இந்த கருத்துக் கணிப்புல தெரிய வந்திருக்கு.
திமுகவுக்கும் பாஜகவுக்கும் ஆதரவு அதிகரிச்ச அதே நேரத்துல அதிமுக ஆதரவு 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமா குறைஞ்சிருக்கறதா இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்லுது. ஆக மொத்தத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைச்சாலும் இப்போதைக்கு திமுகவை வீழ்த்த முடியாதுன்னு இந்த கருத்துக் கணிப்பு சொல்லுது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிற சமயத்துல இந்த கருத்துக் கணிப்பு திமுக கூட்டணிக்கு புது தெம்பை கொடுத்திருக்கு.