தீபாவளி என்றதும் பட்டாசுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வரும் விஷயம் போனஸ். அதிலும் தொழிலாளிகளைப் பொறுத்தவரை பட்டாசு, துணிமணிக்கு முன்பே போனஸ்தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். பட்டாசு, துணியை வாங்க போனஸ் தொகைதான் மூலதனம் என்பதே அதற்கு காரணம். அதெல்லாம் சரி… தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கும் முறை எப்படி தொடங்கியது? இந்த முறையை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று தெரியுமா?
இந்தியாவில் போனஸ் முறையை அறிமுகப்படுத்திய பெருமை ஆங்கிலேய அரசுக்குத்தான் உள்ளது. வாரச் சம்பளத்தை மாதச் சம்பளமாக அவர்கள் மாற்றியதைத் தொடர்ந்து போனஸ் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
19-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்தியாவில் தொழிலாளர்களுக்கு வாரச் சம்பளம்தான் வழங்கப்பட்டு வந்தது. இதன்படி ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு சனிக்கிழமை சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. இதன்படி ஒவ்வொரு தொழிலாளர்களும் வருடத்தில் 52 வாரங்களுக்கு சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.
இந்த சூழலில் 1930-களில் வாரச் சம்பளத்துக்கு பதில் மாதச் சம்பளம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவெடுத்த்து. அதன்படி மாதத்துக்கு 4 வாரங்கள் என்று கணக்கிடப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் இதை தொழிலாளர்கள் எதிர்த்தார்கள். வாரச் சம்பளம் என்று வாங்கும்போது தொழிலாளர்களுக்கு 52 வாரங்களுக்கான சம்பளம் கிடைக்கும். ஆனால் மாதச் சம்பளத்தால் அது 48 வாரச் சம்பளமாக குறைந்ததே இதற்கு காரணம். இதைக் கண்டித்து தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து தொழிலாளர்களை சமாதானப்படுத்துவதற்காக எஞ்சியுள்ள 4 வார சம்பளத்தை ஆண்டில் ஏதாவது ஒரு மாதம் வழங்க ஆங்கிலேய அரசு திட்டமிட்ட்து. இந்தியாவில் பெருவாரியான மக்கள் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி இருந்ததால், அந்த பண்டிகையின்போது போனஸை வழங்க அவர்கள் திட்டமிட்டனர்.
இதன்படி 1940-ம் ஆண்டுமுதல் ஒவ்வொரு தீபாவளியன்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. அரசு தொழிலாளர்கள் மட்டுமின்றி ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் தொழிற்சாலைகளிலும் இந்த முறை அமலுக்கு வந்தது. ஆனால் அப்போதும் மாதச் சம்பளம் வழங்கும் பல நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்காமல் ஏமாற்றி வந்தன. இதனால் தொழிலாளர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 4 வார சம்பளத்தை இழந்து வந்தனர்.
இந்த சூழலில் சுதந்திரத்துக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில், 1965-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி போனஸ் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்படி ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 8.33 சதவீத சம்பளத்தை (ஒரு மாத சம்பளம்) போனஸாக வழங்கவேண்டும் என்று இந்த சட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.