No menu items!

துப்பாக்கி காட்டி மாணவர்களை மிரட்டியதா போலீஸ்? மானாமதுரையில் என்ன நடந்தது?

துப்பாக்கி காட்டி மாணவர்களை மிரட்டியதா போலீஸ்? மானாமதுரையில் என்ன நடந்தது?

மானாமதுரை அருகே பள்ளியில் மாணவர்களை கண்டிப்பதற்காக, ஆசிரியர்கள் காவல்துறையினரை பள்ளிக்குள் வரவழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கம்பால் தாக்கியதுடன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளியில் என்ன நடந்தது?

மாணவர் என்ன சொல்கிறார்கள்?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த வாரம் மாணவர்கள் மோதிக் கொண்டதில் ஒரு மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பள்ளி நுழைவு வாயிலில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், கடந்த புதன்கிழமை மாலை இடைவேளை நேரத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் விசில் அடித்து கூச்சல் போட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, ஆசிரியர்கள் அழைப்பின் பேரில் பள்ளிக்குள் நுழைந்த காவல்துறையினர் மாணவர்களை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து போலீசார் தங்களை தாக்கியதுடன், துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டவும் செய்தனர் என்று 11ஆம் வகுப்பு மாணவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் பேசிய அந்த மாணவர், “புதன்கிழமை மாலை இடைவேளை நேரத்தில் வகுப்பில் இருந்து வெளியே வந்த போது, முன்னால் சென்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை நாங்கள் (ஐந்து பேர்) விசில் அடித்து சத்தமாக கூப்பிட்டோம். அதை கவனித்துக் கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் எங்களை அழைத்து அருகில் வைத்துக் கொண்டு பள்ளி வெளியே நின்ற போலீஸை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர்.

சற்று நேரத்தில் பள்ளிக்குள் வந்த போலீஸ் முதலில் என்னுடன் இருந்த இருவரை ஆசிரியர் ஓய்வு அறைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் என்னையும் என்னுடன் இருந்த மற்றொரு மாணவரையும், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரையும் அறைக்குள் அழைத்துச் சென்று கட்டை மற்றும் கம்பியால் அடித்தனர்.

மாலை 3.30 மணிக்கு அழைத்துச் சென்ற எங்களை 5.30 மணி வரை அறையில் அடைத்து வைத்து, 3 ஆசிரியர்கள் முன்னிலையில் காவல்துறையினர் தனித்தனியாக அடித்தனர். தொடர்ந்து என் தலையிலும், மற்றொரு மாணவர் தலையிலும் போலீஸ் ஒருவர் துப்பாக்கியை வைத்து மிரட்டினர்.

பின்னர், இனிமேல் கூச்சலிட மாட்டோம், விசில் அடிக்க மாட்டோம், ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து நடப்போம் என எங்களிடம் போலீஸ் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனர்” என்று கூறினார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் பேசிய ஒரு மாணவரின் தந்தை, “புதன்கிழமை மாலை மானாமதுரை காவல் நிலைய காவலர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மகன் பள்ளியில் விசில் அடித்து கூச்சல் எழுப்பியதாக பள்ளி தரப்பில் இருந்து புகார் கொடுத்துள்ளனர். அது தொடர்பாக நாளை காலை மானாமதுரை காவல் நிலையம் வர வேண்டும். காவல் நிலையம் வருவதற்கு முன் பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரை பார்த்துவிட்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

மறுநாள் காலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்க சென்ற போது தலைமை ஆசிரியர் என்னிடம் பேச மறுத்து அறையின் கதவை அடைத்துக் கொண்டார். அப்போது பள்ளிக்கு வந்த காவல் ஆய்வாளர் உங்கள் மகன் விசில் அடித்து கூச்சலிட்டு ஆசிரியர்களுடன் பிரச்னை செய்ததால் முந்தைய தினம் போலீஸ் விசாரித்ததாக கூறினார்.

மாணவர்களை காயம் ஏற்படும் அளவுக்கு அடிப்பதற்கு காவல்துறைக்கு யார் அனுமதி அளித்தது என்று போலீசிடம் கேட்டதற்கு அவ்வாறு காவல்துறையினர் அடிக்கவில்லை என்று கூறினார்.

‘போலீஸ் அடிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் அடித்தார்களா, அவர்கள் உடலில் காயம் உள்ளதே; என்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு ‘இதை பெரிதுப்படுத்த வேண்டாம். மாணவர்கள் தொடர்ந்து எங்கள் பள்ளியில் படிக்கட்டும், பிரச்னை ஒன்றும் இல்லை’ என எழுதி கொடுக்குமாறு கூறினார்.

ஆனால், நாங்கள் அவ்வளவு சுலபமாக விடுவதாக இல்லை. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க போகிறோம்” என்றார்.

காவல்துறை என்ன சொல்கிறது?

சிறார் நீதிச் சட்டம் குழந்தைகளை இரண்டு வகையாக பிரிக்கிறது. முதலில் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் குழந்தைகள். மற்றொன்று சட்டத்திற்கு புறம்பான செயல் செய்வதாக கருதப்படும் குழந்தைகள். குழந்தைகளை குற்றவாளியாக கருதாமல், நல்ல வழியில் மடைமாற்றம் செய்வதற்காகவே கூர்நோக்கு இல்லம் உள்ளது. குழந்தைகளை அங்கு வைத்து கவுன்சிலிங் கொடுத்து அவர்களை நல் வழிக்குக் கொண்டு வரவேண்டும். சிறார் தவறு செய்தால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது, காவலர்கள் சீருடையில் சிறார்களை விசாரிக்கக் கூடாது, சிறார் நீதி குழுமம் அதிகாரிகளிடம் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்று சிறார் நீதி சட்டம் கூறுகிறார்.

‘இந்நிலையில், பள்ளிக்குள் நுழைந்து சீருடையில் இருந்த காவலர்கள் மாணவர்கள் பேசியது சட்டப்படி தவறு ஆகும்” என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

மாணவர்களும் அவர்களது பெற்றோரும், போலீசார் மீது வைக்கும் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு ஆய்வாளர் விளக்கமளித்துள்ளார். அதில், “பள்ளியின் நுழைவு வாயிலில் நின்றிருந்த ஆசிரியர்கள் பள்ளி அருகில் ரோந்து பணியில் இருந்த முதல்நிலைக் காவலர் அய்யனார், ஆயுதப்படை காவலர் லிங்கப்பிரபு ஆகியோரை அழைத்து 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஒருவொருக்கொருவர் உள்ளே பிரச்னை செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். அம்மாணவர்களை கண்டிக்குமாறு கூறியதன் அடிப்படையில் காவலர்கள் பள்ளியின் உள்ளே சென்று கண்டித்து இருக்கின்றனர்.

ஆசிரியர்கள் அழைத்ததால் பள்ளிக்குள் போலீசார் சென்று மாணவர்களை எச்சரித்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டவோ பயமுறுத்தவோ இல்லை, பள்ளி மாணவர்களை போலீஸ் ஏன் துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.

மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம்

பள்ளி வளாகத்திற்குள் சென்று போலீசார் மாணவர்களை தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் (உயர்நிலை பள்ளி) வடிவேலுவும் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “போலீசார் மாணவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகனை அழைத்து விளக்கம் கேட்கப்பட்டது. பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பள்ளி அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் விசில் அடித்துக் கூச்சலிட்டதால் யாரும் அழைக்காமலேயே போலீசார் பள்ளிக்குள் வந்து மாணவர்களை கண்டித்துவிட்டு சென்றதாகவும், இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோரை அழைத்து சுமூகமாக பேசி பிரச்னையை சரி செய்ததாகவும் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நான் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளேன். ஆசிரியர்கள் அழைத்ததன் பேரில் பள்ளிக்குள் போலீசார் வந்ததாக உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளேன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...