தாமஸ் செபஸ்டியான் இயக்கத்தில் தேவதர்ஷினி, திலீஷ் போத்தன், மீராவாசுதேவன், ஜாபர் இடுக்கி, முத்துமணி நடித்த படம்
‘அம்ஆ’. மலையாளத்தில் உருவான இந்த படம் தமிழிலும் வெளியாகி உள்ளது. வாடகை தாய் விவகாரம்தான் கரு என்றாலும், அதை அழுத்தமான திரில்லர் கதையாக, பாசப்போராட்டத்தை விவரிக்கும் கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்
கேரளாவில் இருக்கும் ஒரு மலைப்பகுதிக்கு ரோடு போட வருகிறார் அரசு அதிகாரியான திலீஷ்போத்தன். அங்கே ஒரு சின்ன குழந்தையுடன் வசிக்கும் தேவதர்ஷினி குறித்து ஊரில் விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் திலீஷ் போத்தன் அரசு அதிகாரி அல்ல, போலீஸ் என தெரிய வருகிறது.அந்த குழந்தைக்கும், தேவதர்ஷினிக்கும் என்ன தொடர்பு? அந்த குழந்தையை தேவதர்ஷினி வளர்ப்பது ஏன்? கடைசியில் அந்த குழந்தை யாரிடம் போய் சேர்ந்தது. வாடகை தாய் விவகாரத்தால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதை எளிமையாக, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக கொடுத்து இருக்கிறார்கள்
பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த தேவதர்ஷினி இதில் ஒரு குழந்தைக்காக பாசத்துடன் போராடும் அம்மிணி அம்மாள் என்ற மாறுபட்ட கேரக்டரில் நடித்து இருக்கிறார். அந்த குழந்யை தத்தெடுத்து வளர்ப்பது, அதை வளர்க்க போராடுவது, குழந்தை மீதான பாசம் ஆகியவற்றில் நடிப்பை கொட்டியிருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்சில் கண்களில் நீரை வரவழைக்கிறது தேவதர்ஷினி கேரக்டர். கடைசியில் குழந்தை யாரிடம் செல்கிறது என்ற விஷயத்திலும் செம டிவிஸ்ட்
படம் குறித்து பேசிய தேவதர்ஷினி ‘ஆரம்பத்தில் நான் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தேன். பின்னர், காமெடிக்கு மாறுவிட்டேன். அம் ஆ படத்தில் ஒரு வித்தியாசமான, பாசத்தை பொழியும் வேடத்தில் நடித்தது மகிழ்ச்சி. எந்த படத்துக்கும் எனக்கு இப்படியொரு பாராட்டு கிடைக்கவில்லை. படம் பார்த்தவர்கள், என் கேரக்டரை, நடிப்பை பற்றி அவ்வளவு நேரம் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட கதையில் என்னால் நடிக்க முடியும் என்று நம்பிய இயக்குனருக்கு நன்றி.
கடந்த 15 ஆண்டுகளாக ஏகப்பட்ட காமெடி பண்ணுறேன். அந்த படங்களை பார்த்தவர்கள் பாராட்டுவார்கள். ஆனால், அம்ஆ வை பார்த்துவிட்டு பலரும் நான் அழுதுவிட்டேன் என்று சொன்னார்கள், அதெல்லாம் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அதுதான் அம்மா பாசத்துக்கு கிடைத்த வெற்றி. அந்த உணர்வை பலரும் உணர்ந்து இருப்பார்கள். அதனால், ஆண்கள், பெண்கள் என அனைவரும் அழுகிறார்கள். நல்ல அழுத்தமான எமோஷனை, இயல்பாக சொன்னது படத்தின் வெற்றிக்கு காரணம். படத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கிற சீன், அந்த குழந்தை எனக்கு முத்தம் கொடுக்கிற சீன், எனக்கு ரொம்பவே டச்சிங். இப்படிப்பட்ட அழுத்தமான படங்களில் நடித்தாலும், வழக்கம்போல் காமெடி படங்களிலும் நடிப்பேன்’ என்கிறார்.