No menu items!

முற்றுகையில் டெல்லி – மீண்டும் கொந்தளிக்கும் விவசாயிகள்

முற்றுகையில் டெல்லி – மீண்டும் கொந்தளிக்கும் விவசாயிகள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் புகழ்பெற்ற கோஷமான ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் டில்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். டில்லிக்குள் நுழையும் விவசாயிகள் முயற்சியால் டெல்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதற்கு என்ன காரணம்?

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதுடன் சில கோரிக்கைகளையும் முன்வைத்து கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். அரசின் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்து நீடித்த அந்த விவசாயிகள் போராட்டம் கோடிக்கணக்கான விவசாயிகள் பங்கேற்புடன் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. இறுதியில், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததும், சில கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

ஆனால், மூன்று வேளாண் சட்டங்களை மட்டும் ரத்து செய்த மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்குதல், அனைத்து பயிர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கொள்முதல் விலை, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரத்துறையில் தனியார்மயமாக்கலை நிறுத்துதல், லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலையின் முக்கிய குற்றவாளியான அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்து வழக்கு தொடர்வது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

இதனால், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தனர். கடந்த ஜனவரி 26 அன்று கூட நாடு முழுவதும் மாபெரும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த பேரணியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், மீண்டும் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் திட்டமிட்டனர். தொடர்ந்து வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவரவேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுதா கிஷான் மோச்சா, கிசான் மஸ்டோர் மோச்சா ஆகிய விவசாய அமைப்புகள் பிப்ரவரி 23 அன்று மீண்டும் டில்லியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

2020 விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பு, இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும் ஆதரவு தெரிவித்தது. நாடு முழுவதும் இருந்து 250க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கவுள்ளதாக அறிவித்தன.

மீண்டும் மாபெரும் விவசாயிகள் போராட்டம் நடைபெறுவது உறுதியானதும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, மத்திய உணவு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

ஆனால், மத்திய அரசுடனான 5 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள், தங்களின் நேரத்தை வீணடிக்க மட்டுமே அரசு விரும்புவதாகவும் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்துக்காக பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மூலம் டெல்லி எல்லையை முற்றுகையிட விவசாயிகள் தயாராகி வருவது தெரிந்ததும் போராட்டத்தை ஒடுக்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டது. டில்லி எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. டெல்லி முழுவதும் 144 தடை விதிப்பதாக டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநில எல்லைகளில் கூடுவதற்கும் டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு போட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை நோக்கி வரும் பல முக்கிய சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆணி போன்றவை சாலையில் பதிக்கப்பட்டுள்ளன. போலீசார், எல்லையோர பாதுகாப்பு படையினர், விரைவு அதிரடிப் படையினர் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் தடைகளை மீறி விவசாயிகள் தொடங்கிய ‘டெல்லி சலோ’ பேரணியால் இன்று டெல்லி – நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...