அரவிந்த் என்ற 32 வயது ஐடி துறை பொறியாளர் தனது மனைவி சுஜிதாவையும் 7 வயது மகள் ஐஸ்வர்யாவையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் கொடுமை. மனைவியும் மகளும் இறந்த நிலையில் அரவிந்த் பிழைத்துக் கொண்டார். இப்போது மருத்துவமனையில் இருக்கிறார், மனைவி, மகளை கொன்ற குற்றச்சாட்டுடன். இந்த கொடூர சம்பவத்துக்கு காரணம் கடன்.
அரவிந்தும் சுஜிதாவும் காதலித்து இருவர் வீட்டு எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்திருக்கிறார்கள். இருவருமே ஐடி படிப்பு படித்தவர்கள். இருவருமே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் குழந்தைப் பிறந்த பிறகு குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேலையை விட்டிருக்கிறார் சுஜிதா.
அரவிந்த் வேலை மாறியிருக்கிறார். அவர் வேலைக்கு செல்ல வசதியாக அலுவலகம் அருகே தாழம்பூரில் அபார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கியிருக்கிறார். அத்தனையும் மாத தவணையில். மனைவியும் வேலை பார்க்காததால் கடனையும் அடைத்து வீட்டுச் செலவுகளையும் நிர்வகிக்க அரவிந்த் கஷ்டப்பட்டிருக்கிறார். சுமார் 17 லட்ச ரூபாய் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. கடன்காரர்கள் நெருக்கியிருக்கிறார்கள். காதல் திருமணம் செய்ததால் இருவர் குடும்பத்திலிருந்தும் எந்த உதவியும் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மன உளைச்சல் அதிரித்த அரவிந்த், தனது மனைவிக்கும் மகளுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்திருக்கிறார். அவர் மயங்கிய பிறகு அவர்களது ரத்த நாளங்களை வெட்டியிருக்கிறார். அவர்கள் இறந்ததும் இவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டிருக்கிறார். ஆனால் இறக்கவில்லை.
அதன் பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து இருவித செய்திகள் இருக்கின்றன. ஒன்று, அவரது நண்பர்கள் அவருக்கு தொலைபேசியில் அழைத்தபோது எடுக்கவில்லை என்பதால் வீட்டை உடைத்து பார்த்து மயங்கிக் கிடந்த அரவிந்ததையும் இறந்த மனைவி, மகள் உடல்களை மீட்டனர் என்பது. அரவிந்தே போலீசுக்கு போன் செய்து தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் மனைவி மகளை கொன்று விட்டதாக சொல்லியதாகவும் செய்திகள் வருகின்றன. எதுவும் ஊர்ஜிதமாகவில்லை.
இந்த சம்பவத்தில் கணவன் – மனைவி இருவருமே படித்தவர்கள் நல்ல வேலையில் இருந்தவர்கள். அரவிந்துக்கு 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் 17 லட்ச ரூபாய் கடனை அடைக்க இயலாமல் இந்த படு பயங்கர செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
17 லட்ச ரூபாய் கடனை கணவன் – மனைவி இருவரும் இணைந்து எளிதில் அடைத்திருக்க முடியும். ஆனால் அரவிந்த் அப்படி செய்யவில்லை. செய்ய முடியாத அளவு ஏதோ ஒன்று தடுத்திருக்கிறது. அதனால் இந்த விபரீத முடிவு.
கடன். ஒரு குடும்பத்தை நாசப்படுத்தியிருக்கிறது. இது போன்று பல துயரச் சம்பவங்களை தினந்தோறும் செய்திகளில் பார்க்கிறோம்.