நோயல் நடேசன்
ஆஸ்திரேலியர்களின் இந்தோனிசியப் பயணம், பெரும்பாலும் பாலித் தீவோடு முடிந்துவிடும். அவர்களுக்கு இந்தோனேசியாவின் மற்றைய பகுதிகள் முக்கியமற்றது. ஆனால், எனது சிந்தனையில் இம்முறை கோமடோ தீவுகளுக்கும் ஜகர்த்தாவுக்கும் செல்வதாக உத்தேசம் இருந்தது.
இதையிட்டு எனது ஒரு நண்பனிடம் கூறியபோது, “மத்திய யாவாவில் அமைந்திருந்த இந்து – பவுத்த அரசுகள் கட்டிய கோவில்களையும் பவுத்த விகாரைகளையும் பார்க்காது வரவேண்டாம். ஜகர்த்தாவில் பார்ப்பதற்கு எதுவுமில்லை. அத்துடன் ஜன நெருக்கமான இடம்’‘ என்றார். எனது நண்பன் கூறியதற்கிணங்க எனது பயணத் திட்டத்தை மாற்றினேன்.
பதினெட்டாயிரத்துக்கு மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனிசியாவில் பல தீவுகளில் எவருமில்லை. ஆனால், யாவா தீவில் இந்தோனிசியர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். யாவாவில் வசிக்கும் யாவனியர், இந்தோனிசியாவின் அரசியல், கலை, கலாச்சாரம், பொருளாதாரம் என்பனவற்றை முன்னெடுப்பவர்கள்.
இங்கு ஆரம்பத்தில் புத்த அரசு, பின்பு இந்து அரசுகள் பல தோன்றி மறைந்துள்ளது. இறுதியில் இஸ்லாமியச் சுல்தான்கள் அரசாண்டார்கள். இவர்களை 300 வருடங்கள் நெதர்லாந்து எனப்படும் டச்சுக்காரர்- ஆரம்பத்தில் டச்சு கிழக்கு இந்தியா கொம்பனி என்ற பெயரிலும் பின்பு நேரடியாகவும் ஆண்டார்கள். காலனி ஆதிக்க காலத்தில் நடத்திய கொடுமைகளை படிக்கும்போது மனதை வலிக்கும்.
ஜாலியன்வாலா பாக் கொலையைச் செய்த ஓ’டயர் ( O’Dwyer) போல் பலர் இங்கு டச்சு காலனிய அரசின் பெயரில் பல அப்பாவிகளை கொலை செய்துள்ளார்கள். அதன்பின்பு இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஜப்பானியர்களது ஆதிக்கத்திலும் இருந்து இறுதியில் சுதந்திரமடைந்த நாடானது இந்தோனிசியா.
நாங்கள் நான்கு நாட்கள் இருந்த யோகியாகர்தா விடுதியில், பொறுப்பாக இருந்து உதவி செய்த இளைஞனிடம் பெயரைக் கேட்டபோது, விஷ்ணு என்றான். மிகவும் குறைந்த அளவில் இந்துக்கள் யாவாவில் இருந்ததால் அவன் இந்துவாக இருக்கலாம் என நினைத்தபடி இருந்தபோது ‘நான் ஒரு முஸ்லீம்’ என்றான். இதுபோல இந்துப் பெயருடன் பல இஸ்லாமியரை இந்தோனேசியாவில் கண்டேன்.
ஜகர்த்தாவில் அருங்காட்சியகம் பார்க்கச் சென்றபோது ஒரு இளைஞன் தன் பெயர் அபிமன்யு என்றான். நான் சிரித்தபோது, தனது தகப்பன் அருச்சுனனா என்பார்கள் என்றான். அவனும் ஒரு முஸ்லீமே. மத்திய காலத்தில் இந்து மதத்தை அகஸ்திய முனிவர் அங்கு பரப்பியதாக நம்புகிறார்கள். உண்மையில் வர்த்தகர்களே பரப்பினார்கள். அதேபோல் மகாயான புத்த மதம் இந்திய யாத்திரிகர்களால் பரப்பப்பட்டுள்ளது.
இந்து, புத்த மதங்களின் ஆரம்பம் சுமாத்திரா என்ற தீவாகும். இங்குதான் ஶ்ரீ விஜயம் என்ற புத்த இராச்சியம் உருவாகியிருந்தது; பின்பு இராஜேந்திர சோழனின் கடற்படையால் (1025) அது தாக்கி அழிக்கப்பட்டது என்கிறார்கள்.
‘சோழப் படை எடுப்பின் காரணம் கடல் வியாபாரத்தை விரிவடையச் செய்வதே’ என்கிறார் வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரி. இந்திய அரசர்களில் கடல்வழி வணிகத்தைப் பற்றிய நிரந்தரமான ஒரு கொள்கை வைத்து செயல்பட்டவர்கள் சோழர்களே. அக்காலத்தில் சீனர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்களின் கப்பல் சுமாத்திராவுக்கும் மலேயா தீபகற்பத்திற்கும் இடையான சிறிய கடலூடாக நடப்பதால் அதை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம் எனச் சோழப் பேரசு சிந்தித்திருப்பது, 1000 வருடங்கள் பின்பாக அமரிக்கா, சீனா போன்ற நாடுகள் சிந்தனைக்கு ஒத்ததாக உள்ளது. சோழர்களின் ஶ்ரீ விஜயத்திற்கு எதிரான படை எடுப்பை இந்தோனேசியா வரலாற்றாசிரியர்கள் சோழர்களின் கடற்கொள்ளை என வர்ணிக்கிறார்கள்.
யாவாவில் 8ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியமயமான ராச்சியங்கள் உருவாகின்றன. (அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிராமணர்களும் இந்திய வர்த்தகர்களும் இருந்ததாக சீனர்களது குறிப்புகள் சொல்கின்றன.) அவற்றில் முக்கியமானது சைலேந்திர அரசாகும். அவர்களே கோவில்களைக் கட்டுகிறார்கள். 13-15 நூற்றாண்டுகளில் இந்து – புத்த மதம் சார்ந்த மாஜாபாகிர் சாம்ராச்சியம் (Majaphahit Empire) யாவாவைத் தலைநகராக்கியதுடன், தற்போதைய மலேசியா, இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ் என்பவற்றை உள்ளடக்கியது. இதனது நலிவைத் தொடர்ந்து பல பகுதிகளில் உருவாகிய இஸ்லாமியச் சுல்தான்களால் இப்பிரதேசங்கள் ஆட்சி செய்யப்பட்டது
இந்தோனேசியா உட்பட பல தென் கிழக்காசிய நாடுகளில் இந்து மதம், எப்படி மக்களாலும் அரசாலும் விரும்பி ஏற்கப்பட்டது என்பது எனது அடிமனதின் எப்போதும் ஒரு கேள்வியாக இருந்தது. அதற்குக் கீழ்க்கண்ட பதிலே என்னுள் விடையாக இருந்தது
விவசாயத்தில் உபரியான தானியங்கள் உருவாகும்போது அரசு உருவாக்கம் நடக்கிறது. அரசு நடைபெற அதற்கு வரி தேவை. வரி வசூலிக்க மொழி தேவை. இங்கே அரசு நிலையாக நடக்க மக்களிடம் நன்மதிப்பு பெறவேண்டும். வன்முறையால் ஆட்சி நடத்த முடியும். ஆனால், அதைவிட மக்கள் எல்லோரும் நம்பும் மதத்தைக் கொண்டு அரசை நடத்துவது எங்வளவு இலகுவானது?
இந்து மதத்தில் மட்டுமே அரசர் இறைவனுக்கு நிகரானவர் என்ற நிலை உள்ளது. மற்றைய ஆபிரகாமிய மதங்களில் இறைவனுக்குச் சமனாக எவருமில்லை. மனிதர்கள் எல்லோரும் இறைவனின் சேவகர்கள் (The Suzerain/Vassal Covenants) புத்த மதத்தில் இறைவனில்லை. நில உடைமை அதிகாரம் பண்பாட்டிற்கு ஏதுவாக இந்து மதம் உள்ளது. அத்துடன் கடவுளுக்கு நெருங்கிய மொழியாகச் சமஸ்கிருதம் உள்ளது. தற்போதும் தென் ஆசியநாட்டு மொழிகளில் சமஸ்கிருதம் நிறைந்து உள்ளது. தற்போது லத்தீன் எழுத்துகளால் எழுதப்படும் பாஷா இந்தோனேசியாவில் ஏராளம் சமஸ்கிருதச் சொற்கள் உள்ளது.
இதை விட இந்து மதத்தில் உள்ள தொழில், குலம், ஜாதி சார்ந்த பிரிவுகள் தொடர்ச்சியாக சமூகத்தில் பொருளாதார உற்பத்திக்கு உதவுகிறது. கடல் வழி வாணிபம், விவசாயம், போர் என்பவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க உதவுகிறது. இத்துடன் ஏற்கனவே உள்ள மூதாதையர், மலைகள் கடல்கள் என்பவற்றை வழிபடும் பழைமையான வழிபாட்டு முறைகளை இந்து மதத்துடன் இலகுவாகச் சேர்க்க முடிந்தது. இந்த தன்மையாலே பல தென்கிழக்காசிய நாடுகளில் இந்தியக் கலாச்சாரம் விரைவாகப் பரவ முடிந்தது. இந்திய மொழி, மதம், கலாச்சாரம் என்பன பெரும்பகுதி தமிழகத்திலிருந்தும் (பல்லவர்கள் காலம்), ஓரளவு கலிங்கத்திலிருந்தும் சென்றதாகப் பதிவாகி உள்ளது.
இந்தோனேசியாவில் இஸ்லாமிய மதம் கடைப்பிடிக்கப்பட்டபோதும், கலாச்சாரம் இன்னமும் அரபிக் கலாச்சாரமாக மாறவில்லை என நான் நினைத்தேன். இந்தோனேசியா தனது இந்தியமயமான வரலாற்றைத் தக்க வைத்துள்ளதோடு 8 வீதமான கிறிஸ்துவர்கள், 2 வீதமான இந்துக்கள், புத்த மதத்தவர்களோடு நல்லெண்ணத்துடன் வாழும், கயிற்றில் நடக்கும் வித்தையை மிகவும் திறமையாகச் செய்கிறார்கள்.
மத்திய யாவாவின் தலைநகரம் யோகியாகர்தா. இந்தப் பகுதி இந்தோனேசியா குடியரசின் உள்ளே சுல்தான் அரசாட்சி செய்யும் பிரதேசம்; இந்தியாவில் பிரித்தானியர்கள் காலத்தில் குறு நில மன்னர்களது நிலை அல்லது சமஸ்தானங்களது நிலை போன்றது. இந்தோனேசியர்களது டச்சுக்காரருக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பு அளித்ததற்கான வெகுமதி இந்த விசேட நிலை. சுல்த்தான் யோகியாகர்தா மாகாணத்தின் கவர்னர் போல் செயல்படுகிறார்.
கிட்டத்தட்ட நான்கு லட்சம் மக்கள் கொண்ட இந்த நகரத்தை ஆளும் சுல்தானின் மாளிகையை நாங்கள் சென்று பார்த்தபோது, அவரது மகள், அடுத்த வாரிசாக வருவதற்கான சாத்தியமுள்ளதாகக் கூறினார்கள்.
யோகியாகர்தா என்ற இந்த நகரம் கல்வி மையமாகவும் பற்றிக் (Batik) துணித் தயாரிப்பு, நடனம், நாடகம், இசை, கவிதை, பொம்மலாட்டக் கலைகள் போன்ற செவ்வியல் நுண்கலை, பண்பாடுகளின் மையமாகவும் இன்றும் விளங்குகின்றது.
சைலேந்திர அரச வம்சத்தால் யோகியாகர்தாவில் கட்டப்பட்ட போரபொடோர் என்ற மகாயான பவுத்தம் விகாரை (Borobudor) உள்ளது; உலகத்திலே பெரியது என்ற பெருமையைப் பெற்றது. ஒரு விகாரையாகச் சொல்லிய போதிலும் சுற்றி இருந்த அழகிய பூங்காவுடன் பெரிய வளாகமாகத் தெரிந்தது. பார்ப்பதற்கு பல கிலோமீட்டர்கள் சுற்றவேண்டும். பார்க்கும்போது மகோன்னதமான ஒரு அமைப்பைப் பார்க்கிறோம் என்ற எண்ணம் மனதில் ஏற்படும். தற்போது உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது
12-14 நாற்றாண்டுகளில் நடந்த பூகம்பத்தால் அழிந்த விகாரையை தற்பொழுது மறுசீரமைத்திருக்கிறார்கள். 9ஆவது நூற்றாண்டில் சைலேந்திரா அரசு காலத்தில் 504 புத்தர் சிலைகளை வைத்து ஒன்பது தளத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தின் அடி அத்திவாரம் தவிர்த்த மற்றைய பகுதிகள் அழிந்துவிட்டது. அந்த அத்திவாரத்தில் சமஸ்கிருதத்தில் எப்படிக் கட்டப்பட்டது என்ற சில குறிப்புகளை வைத்துக் கட்டப்பட்டது; ஆனாலும் இன்னமும் முடியவில்லை.
போரபொடோர் நாலு வாசல்கள் கொண்ட மண்டலம் ஆகும். டச்சுக்காரர்களின் காலனி அரசு காலத்தில (1911) ஆரம்பிக்கப்பட்டு தற்போது யுனெஸ்கோ உதவியுடன் பாதுகாக்கப்படுகிறது. புத்தரின் பல முத்திரைகள் உள்ள பல சிலைகள் இங்குள்ளன. இந்த இடம் சோலைகள் சூழ்ந்த அழகான பிரதேசமாகும்.
இந்த இடத்தை நான் சுற்றிப் பார்த்தபோது, பாடசாலை பிள்ளைகள் பலர் வந்திருந்ததுடன் என்னை ஆங்கிலத்தில் பேட்டி எடுத்தனர். சமூகத்தின் வரலாறு பாடசாலை மாணவர்களுக்குத் தெரிந்திருப்பது முக்கியம்.
யோகியகர்தாவில் பதினேழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிரம்பனன் (Prambanan) இந்து கோயிலும் கம்போடிய அங்கோர் கோயிலுக்கு அடுத்த பெரிய கோயிலாகும். ஒரு பெரிய வளாகத்தின் நடுவே பீடத்தில் அமைந்துள்ளது. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவ ஆலயமாகும். இந்தக் கோயில் முதன்முதலில் கிபி 850இல் ராகாய் பிகாடனால் (Rakal Pikatan) கட்டப்பட்டது., சஞ்சய வம்சத்தின் மன்னர் லோகபாலனால் (Lokapala) விரிவுபடுத்தப்பட்டது. போரபொடோர் புத்த விகாரை, சைலேந்திரா வம்சத்தால் கட்டப்பட்டது. அதற்குச் சவாலாக இந்தக் கோயில் சஞ்சய வம்சத்தால் கட்டுப்பட்டது. இது ஒரு கோயிலல்ல, பல கோயில்களின் கூட்டமாகும். சிவனைத் தவிர விஷ்ணு, பிரம்மனுக்கும் கோவில் உள்ளது. ஆரம்பத்தில் 204 கோயில்கள் இருந்ததாம். இந்தக் கோயில் அரச கோயிலாகவும் இதைச் சுற்றி ஏராளமான பிராமணர்கள் வாழ்ந்ததாகவும் வரலாறு சொல்கிறது. 80 வருடங்கள் பின்பாக பிற்காலத்தில் யாவா தீவில் அமைந்த இந்து அரசாட்சியின் கீழ் கைவிடப்பட்டது. அத்துடன் பூகம்பத்தால் உடைந்தது.
தற்பொழுது 16ஆம் நூற்றாண்டில் பூகம்பத்தால் உடைந்த பகுதிகள் மீளுருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவும் பூகம்பத்தில் அழிந்து பின் ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டு டச்சுக்காரர்களால் புதுப்பிக்கப்பட்டது. இன்னமும் கற்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன. அதைவிட இந்தக் கோயிலின் சுற்றுப்பகுதி எங்கும் செங்கல்லால் வீடுகள் கட்டி மக்கள் குடியிருந்த அடையாளங்கள் உள்ளது.
இந்தோனிசியா முழுவதும் 130இற்கும் மேற்பட்ட உயிர்ப்பான எரிமலைகள் உள்ளன. அதைவிடக் கடலுக்குள் பல உள்ளன. நில நடுக்கம் என்பது ஒவ்வொரு நாளும் நடக்கும் இடம் இந்தோனிசியா. அவற்றின் அளவுகள் சிறிதாகவும் பெரிதாகவும் இருக்கும். ஒரு விதத்தில் இந்தோனிசிய மக்கள் தினமும் நிலநடுக்கம், எரிமலை என அபாயங்களோடு வாழ்வதுடன், அவற்றை மற்றவர்களுக்குக் காட்சிப் பொருளாக்கி வருகிறாரகள். உல்லாசப் பிரயாணிகள் பார்ப்பதற்கு வருகிறார்கள். இங்குள்ள கோவில்கள், விகாரைகள் எல்லாம் எரிமலைப் பாறைகளால் ஆனது. எரிமலையின் தாக்கத்தால் வெளியேறிய கற்கள் ஆற்று நீரால் அள்ளப்பட்டு கீழே வருகிறது.
யாவா தீவின் மத்தியில் உள்ளது மெறப்பி (Merapi) என்ற எரிமலை 2 ஆயிரத்து 911 மீட்டர்கள் உயரமானது. பல தடவை (1786, 1822, 1872, 1930, 1976) எரிமலை சீறி ஆயிரக்கணக்கானோரை அழித்துள்ளது. இந்த எரி மலையைப் பார்ப்பதற்கு அந்த உயரத்திற்கு எங்களை ஜீப்பில் கொண்டு சென்றார்கள். எரிமலையைச் சுற்றி ஏராளமானவர்கள் வாழ்கிறார்கள்.
நாங்கள் சென்றபோது எரிமலையின் வாயை மேகம் மூடியபடியிருந்தது. ஆனாலும், கந்தக மணம் அங்கிருந்த காற்றில் உணர முடிந்தது. எந்த நேரத்திலும் எரிமலை குழம்புகள் பெருகி வெளியே வரலாம் என்பதற்காக பாதுகாப்பாக ஒழிவதற்குக் கீழே ஒரு குகை போன்று கட்டியிருந்தார்கள்.
அந்த எரிமலை உச்சியில் ஏராளமானவர்கள் கடைகள் வைத்திருந்தார்கள். எரிமலைக் கற்களில் செய்த பல பொருட்களை விற்றார்கள். சிறிது கீழே விவசாயம் நடைபெறுகிறது.
எதற்காக இவ்வளவு அருகில் வாழ்கிறார்கள் எனக் கேட்டபோது, எரி மலை மண் மிகவும் செழிப்பானது என்று சொல்வதிலும் பார்க்க உலகத்திலே தாவர வளர்ச்சிக்குச் சிறந்த மண் யாவா எனலாம். இங்குள்ள மெறப்பி எரிமலையே மழை பெய்வதற்கு முக்கிய காரணம். வருடத்தில் பல தடவை விவசாயம் செய்யமுடியும் என்றார் எமது வழிகாட்டி.
நான் நின்ற பகுதியில் இருளடைந்து குளிரத் தொடங்கியது. மீண்டும் ஜீப்பில் ஏறி கீழே வரத் தொடங்கினோம்
சில நாட்களின் முன்பாக அந்த மெறப்பி மீண்டும் பொங்கி வழிந்தது எனக் கேள்விப்பட்டேன்.