No menu items!

CSK VS GT – யாருக்கு IPL கோப்பை?

CSK VS GT – யாருக்கு IPL கோப்பை?

இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது ஐபிஎல். 73 போட்டிகள் முடிந்த நிலையில் இந்த தொடரின் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் 28-ம் தேதி (நாளை) மாலை நடக்கிறது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலம் முதல் அதில் ஆதிக்கம் செலுத்திவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு பக்கமும், தாங்கள் ஆடிய முதல் ஐபிஎல்லிலேயே கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி மறு பக்கமுமாக நிற்க, இறுதிப் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இதுவரை 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் ஆடியுள்ளது. ஐபிஎல் தொடரிலேயே மிக அதிக முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியான சிஎஸ்கே, 4 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த முறையும் கோப்பையை வென்றால், அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற மும்பை இந்தியன்ஸின் (5 முறை) சாதனையை சமன்செய்ய முடியும். மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன் செய்வதற்காக இல்லாவிட்டாலும் தல தோனிக்கு கடைசியாக ஒரு கோப்பையை பரிசளித்து வழியனுப்ப தயாராக இருக்கிறார்கள் சிஎஸ்கே சிங்கங்கள்.

சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பலம் அதன் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்டும், டெவான் கான்வாயும்தான். இந்த தொடரில் இதுவரை 14 ஆட்டங்களில் ஒன்றாக களம் இறங்கிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு மொத்தம் 775 ரன்களைக் குவித்துள்ளது. தனிப்பட்ட முறையில் கான்வாய் 625 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 564 ரன்களையும் குவித்திருக்கிறார்கள். அதேபோல் நிதானமான பேட்ஸ்மேனாக இருந்து இந்த தொடரில் ஸ்டிரைக் ரேட்டில் மின்னல் வீரராக பாய்ந்த ரஹானே, சிக்சர் மழை பொழியும் துபே ஆகியோரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்குக்கு பலம் சேர்க்கிறார்கள்.

வேகப்பந்து வீச்சில் ஆரம்பித்தில் சொதப்பிய சிஎஸ்கே அணி, பதிரணாவின் வருகைக்குப் பிறகு வேகம் எடுத்தது. தீபக் சாஹரும், துஷார் தேஷ்பாண்டேவும் அவருக்கு கைகொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருக்கிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை ஜடேஜா, மொயின் அலி, தீக்‌ஷணா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

சாதகமான இத்தனை அம்சங்களைக் கொண்ட சிஎஸ்கே அணிக்கு, சில பாதகங்களும் இருக்கின்றன. சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது இதில் முக்கியமான பலவீனம். ரஷித் கான், நூர் ஆகிய 2 சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். டாடீஸ் ஆர்மியான சிஎஸ்கேவின் மற்றொரு பலவீனம் அதன் பீல்டிங். வயது முதிர்ச்சியாலோ என்னவோ ருதுராஜ், , ஜடேஜா போன்ற ஒருசில வீரர்களைத் தவிர மற்றவர்கள் பந்தை விரட்டிப் பிடிக்க தடுமாறுகிறார்கள். அணியின் பீல்டிங் இப்படி இருந்தால் இறுதி ஆட்டத்தில் வெல்ல 200 ரன்களுக்கு மேல் எடுக்கவேண்டி வரும். இது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சுமையைக் கொடுக்கும்.
தங்கள் முதல் தொடரிலேயே கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, 2-வது முறையாக தொடர்ந்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த இறுதி ஆட்டத்துக்குள் நுழைகிறது. தங்கள் சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் ஆடுவது குஜராத் அணிக்கு கூடுதல் தெம்பை அளிக்கும்.

இந்த ஐபிஎல் தொடரில் மிக அதிக ரன்களை எடுத்த வீரரான சுப்மான் கில் (851 ரன்கள்), அதிக விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி (28 விக்கெட்கள்), ரஷித் கான் (27 விக்கெட்கள்) ஆகிய 3 வீரர்கள் குஜராத் அணியில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். iந்த 3 வீரர்களும் தனிநபராக இருந்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

கில்லைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் இந்த தொடரில் பங்களிக்காமல் இருப்பது அந்த அணியின் பலவீனமாக கருதப்படுகிறது. அந்த பலவீனத்தைப் பயன்படுத்தி சிஎஸ்கே அணி 5-வது முறையாக முடிசூடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...