ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு முறை சறுக்கும்போதும், அதற்கு அடுத்த ஐபிஎல்லில் அதைவிட வீரியமாக எழுந்து வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழக்கம். அதாவது மற்ற அணிகளுக்கெல்லாம் சாண் ஏறினால் முழம் சறுக்கும். ஆனால் சிஎஸ்கே அணியோ, சாண் சறுக்கினாலே முழம் அளவுக்கு முன்னேறும்.
சூதாட்டப் புகாரால் 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு 2018-ம் ஆண்டு ஆடவந்த சிஎஸ்கே, பழைய வேகத்தை மீண்டும் காட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2020-ம் ஆண்டு ஐபிஎல்லில் கடைசி இடத்தைப் பிடிக்க, அதற்கு பழிவாங்கும் விதமாக அடுத்த ஆண்டிலேயே கோப்பையை வென்றது. அந்த வரிசையில் பார்த்தால் இந்த ஆண்டும் சிஎஸ்கே எழுந்து வரவேண்டிய ஆண்டு. கடந்த ஐபிஎல்லில் புள்ளிப்படியலில் பரிதாபகரமாக 9-வது இடத்தைப் பிடித்ததற்கு பதிலடியாக இந்த ஆண்டு சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றாக வேண்டும்.
அதற்காகவே மார்ச் 31-ல் தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு இன்றில் இருந்தே பயிற்சியைத் தொடங்குகிறார்கள் சிஎஸ்கே வீரர்கள். இம்முறை அவர்கள் கோப்பையை வெல்வதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒரு காரணம் கடந்த ஆண்டில் 9-வது இடத்தைப் பிடித்தது. அதற்கு பாழிவாங்க இம்முறை கோப்பையை வென்றாக வேண்டும். இரண்டாவது காரணம் இது தோனிக்கு கடைசி ஐபிஎல் கோப்பை. சிஎஸ்கேவை ஆரம்பித்த காலத்தில் இருந்து தங்களுக்கு எல்லாமுமாக இருந்த கேப்டன் தோனிக்கு கோப்பையுடன் சிறப்பான செண்ட் ஆஃபைக் கொடுக்க சிஎஸ்கே வீரர்கள் விரும்புகிறார்கள்.
இந்த 2 காரணங்களுக்காகத்தான் முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இப்போது நடக்கும் இந்த முதல்கட்ட பயிற்சியில் இந்திய வீரர்கள் மட்டும் கலந்துகொள்கிறார்கள். 2 வாரங்களுக்குப் பிறகு நடக்கவுள்ள இரண்டாம் கட்ட பயிற்சியில் வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்த பயிற்சிக்காக நேற்று இரவு சென்னை வந்துசேர்ந்த தல தோனிக்கு விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனியும் மற்ற வீரர்களும் பயிற்சி பெற உள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை இதில் ஆடும் மற்ற வீரர்கள் அனைவரும் சர்வதேச போட்டிகளிலோ அல்லது உள்ளூர் போட்டிகளிலோ அடிக்கடி ஆடி வருகிறார்கள். ஆனால் தோனியைப் பொறுத்தவரை கடந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஒரு போட்டியில்கூட ஆடவில்லை. இதனால் குறைந்தது ஒரு மாதமாவது பயிற்சி பெற்று பழைய ஃபார்மை திரும்பவும் பெற தோனி விரும்புகிறார். அதனாலேயே அவரது வேண்டுகோள்படி சில வாரங்கள் முன்னதாகவே பயிற்சிக்கு சிஎஸ்கே ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஐபிஎல்லுக்காக அதிக பணம் கொடுத்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை வாங்கியது சிஎஸ்கே. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கவுள்ள ஆஷஸ் தொடருக்காக ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டங்கள் சிலவற்றில் ஸ்டோக்ஸால் ஆட முடியாது என்று கூறப்படுகிறது. அதுபோலவே ஆல்ரண்டர் என்ற வகையில் வாங்கப்பட்ட ஸ்டோக்ஸ், தனது உடல்நிலை காரணமாக பந்துவீசாமல் பேட்டிங் மற்றும் செய்தால் என்ன யோசித்து வருகிறார். இது சிஎஸ்கே அணியின் திட்டங்களை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் நியூஸிலாந்து வீரரான ஜெமிசன் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும் சிஎஸ்கேவின் பந்துவீச்சை பலவீனப்படுத்தி இருக்கிறது.
தற்போது நடக்கவுள்ள பயிற்சிக் காலத்தில் அணி நிர்வாகத்துடன் பேசி தோனி இதற்கு தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெமிசனுக்கு பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷனகா, தென் ஆப்பிரிக்க வீரர் பார்னல், ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை ஆகியோரில் யாராவது ஒருவரை சிஎஸ்கே வாங்கலாம் என்று கருதப்படுகிறது.