’லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், விஜய்யுடன் தான் போட்டி போடுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “சிவப்புக்கு நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. கம்யூனிஸ்ட், வன்முறை, புரட்சி என்று பலவற்றுக்கும் இதை பயன்படுத்துவார்கள். ஐஸ்வர்யா இதை புரட்சிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் கதைக்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஐஸ்வர்யா கூறினார். நான் விருதுக்காக இந்தக் கதையை கேட்க மாட்டேன் என்று கூறினேன். பிறகு இது உண்மை கதை என்று சொன்னார். பிறகுதான் கதை கேட்டேன்.
தயாரிப்பு எனக்கு ராசியில்லை!
“மத நல்லிணக்கத்தைப் பற்றி இந்தப் படம் பேசியிருக்கிறது. மனிதர்கள் சந்தோஷமாக இருப்பதற்காகத்தான் மதங்கள் உருவாகின. ஆனால் இப்போது யாருடைய மதம் பெரியது என்று அடித்துக் கொள்கிறார்கள். எந்த மதத்தில் உண்மை, நியாயம் இருக்கோ அதுதான் சரியாக இருக்கும். ‘ரஜினிகாந்தே இந்தப் படத்தை தயாரிக்கலாமே… அவரிடம் இல்லாத பணமா, கோடி கோடியா வச்சிருப்பார்’ என்று நிறைய பேர் பேசுகிறார்கள். பாபா படத்துக்கு பிறகு தயாரிப்பு எனக்கு ராசியில்லை என்று நிறுத்திவிட்டேன்.
விஜய்க்கும் எனக்கும் போட்டியா?
தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நடிகர் விஜய் எனக்கு முன்னால் வளர்ந்த பையன். அவரை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின் போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்கலாம் என என்னை சொல்லும்படி சொன்னார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து, தனது திறமையால், உழைப்பால் உயர்ந்து உள்ளார். நன்றாக நடித்து வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் ‘எனக்கு போட்டி நான் தான்’ என கூறியுள்ளார். நானும் அதையே தான் சொல்கிறேன். அதனால் நடிகர் விஜய், எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. நானும் விஜய்க்கு போட்டி நினைத்தால் அது அவருக்கும் மரியாதை இல்லை.
காக்கா கழுகு கதை
தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள், ‘காக்கா, கழுகு’ கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது அன்பார்ந்த வேண்டுகோள்” என்று பேசினார்.
மகன்கள் எனக்கு வரம்
ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா பேசும்போது, “என்னோட மகன்கள் எனக்கு கிடைச்ச பெரிய வரம். இந்தப் படத்தோட ஷூட்டிங் சமயத்துல நான் அவங்ககூட குறைவான நேரம்தான் செலவு பண்ணினேன். அவங்களும் அதைப் புரிஞ்சுக்கிட்டாங்க. பெரியவர் பொறுப்பா பேசுவார். சின்னவர் ஒரு கிரிட்டிக். பொண்ணுக்கு ஒரு கஷ்டம்னா அப்பாவாக வந்து பணம் கொடுக்கலாம். ஆனா, என் அப்பா படம் கொடுத்திருக்கார். வாழ்க்கை கொடுத்திருக்கார். எப்பவும் எனக்கு அவர்தான் முதன்மை. இந்தப் படம் பேசுற தத்துவங்களுக்குதான் அப்பா வந்தாங்க. எங்க குழு சோசியல் மீடியா பதிவுகளை காமிப்பாங்க. அதுல என் காதுல அடிக்கடி ஒரு வார்த்தை விழுகுது. எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை சங்கின்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க.
ரஜினிகாந்த் சங்கி இல்லை
அவர் சங்கி இல்ல. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. இந்தப் படத்தைப் பார்த்தா உங்களுக்கு அது புரியும். இதுக்கு பிறகு இந்த படம் உங்க லிஸ்ட்ல இருக்கும். ஒரு சங்கி இந்தப் படத்தைப் பண்ண முடியாது. ஒரு மனிதநேயவாதிதான் இந்தப் படத்தை பண்ண முடியும். அந்த தைரியம் அவருக்குமட்டும் தான் இருக்கு. நான் கர்வமாகச் சொல்றேன். யாரும் அதை பண்ணமாட்டாங்க. நீங்க இந்து, கிறிஸ்டியனா இருக்கலாம். ஆனால், ரஜினிகாந்த் ரசிகராகத்தான் இந்த படத்தை பார்ப்பீங்க.” என்றார்.