இந்த காலத்தில் ஏஐ துறையில் மிக வேகமாக பல்வேறு வளர்ச்சிகள் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே சாட்ஜிபிடி இப்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கோடிங் ஏஜெண்டான Codexஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஐடி ஊழியர் செய்யும் பணியின் பெரும்பகுதியை இந்த கோடெக்ஸ் மூலமாகவே செய்ய முடியும் என்கிறார்கள்.
ஏஐ இந்த காலத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் யோசிக்கவே முடியாத துறைகளிலும் கூட ஏஐ வளர்ச்சி வேகமாகவே இருக்கிறது. இது நமது வாழ்க்கை முறையையே மொத்தமாக மாற்றுவதாக இருக்கிறது. இதற்கிடையே சாட்ஜிபிடி இப்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கோடிங் ஏஜெண்டான Codexஐ அறிமுகம் செய்துள்ளது.
கோடிங் செய்ய ஏஐ
இந்த ஏஐயை வைத்துக் கொண்டே கோடிங்கை நாம் எளிதாகப் போட்டுவிட முடியும். இது இப்போது சாட்ஜிபிடி ப்ரோ, Enterprise மற்றும் டீம் சந்தா வைத்திருப்போருக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இருக்கிறது. கிளவுட்டில் இயங்கும் இந்த கோடிங் ஏஜெண்ட், ஐடி ஊழியர்களுக்கு ஒரு விர்சுவல் உதவியாளராகச் செயல்படும் என்கிறார்கள். ஐடி ஊழியர்கள் சீக்கிரமாக கோடிங் எழுதவும், பிழைகளைச் சரி செய்யவும் இது உதவும் என்று சொல்லப்படுகிறது.
சாம் அல்ட்மேன்
ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் Codex வெளியிடுவது குறித்த அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இன்று நாங்கள் Codexஐ அறிமுகப்படுத்துகிறோம். இது கிளவுட்டில் இருக்கும் ஒரு விர்சுவல் கோடிங் ஏஜெண்ட். இது உங்களுக்காக பணிகளைச் செய்யும். மேலும், பிழைகளையும் சரி செய்யும். இதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும்” என்றார்.
இந்த கோடெக்ஸில் ஒரே நேரத்தில் பல செக்ஷன்களையும் உருவாக்க முடியும். இதன் மூலம் ஒரே நேரத்தில் பல வேலைகளை ஏஜயிடம் தர முடியும். இது தொடர்பாக ஓபன் ஏஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த கோடெக்ஸ் மூலம் கோப்புகளைப் படித்துத் திருத்த முடியும்.. அதே போல் சோதனை ஹார்னஸ்கள், லிண்டர்கள் மற்றும் டைப் செக்கர்ஸ்களையும் இயக்க முடியும். நீங்கள் இதற்குத் தரும் பணி எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அதை அதிகபட்சம் 30 நிமிடங்களில் முடித்துவிடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடெக்ஸை பயன்படுத்துவது எப்படி?
ஒருவர் இந்த கோடெக்ஸைப் பயன்படுத்த, சாட்ஜிபிடியில் இருக்கும் சைட் பாருக்கு செல்ல வேண்டும்.
அங்கு கோடிங் என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஏஐ உதவியாளருக்கு புதிய கோடிங் வேலையை அசைன் செய்ய முடியும்.
நீங்கள் தந்த பணியைச் செய்யும் போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதன் பிறகே அது உங்கள் டாஸ்க்கை செய்ய தொடங்கும்.
பணியை முடித்த பிறகு, கோடெக்ஸ் உங்களிடம் அதற்கான விடையைத் தரும். கூடவே ஆதாரத்தையும் சமர்ப்பிக்கும்.
அதேநேரம் டெஸ்டிங் நிச்சயமற்றதாக இருக்கும்போது அல்லது தோல்வி அடைந்தால் அதையும் யூசர்களிடம் மிகத் தெளிவாகக் கூறிவிடுமாம்.
ஐடி ஊழியர்கள் அச்சம்
இந்த கோடெக்ஸ் குறித்த தகவல் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. ஒரு பக்கம் இது ஐடி ஊழியர்களின் வேலையை எளிதாக்கும் என்ற போதிலும், இதனால் மிக பெரியளவில் வேலையிழப்பு நடக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அடிப்படை கோடிங் வேலையை எல்லாம் இந்த ஏஐ மூலமாகவே செய்துவிட முடியும் என்பதால் ஐடி துறையிலும் வேலைவாய்ப்பு குறையலாம் என்ற அச்சம் இணையத்தில் எழுந்துள்ளது.