ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த வினாயகன், நிஜ வாழ்க்கையில் போலீஸுக்கு வில்லனாகி இருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து போலீஸாரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த வினாயகனை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். பின்னர் சொந்த ஜாமீனில் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து வினாயகன் சண்டை போட்டதுதான் இப்போது மல்லுவுட்டின் ஹாட் டாபிக்.
நடந்தது இதுதான்…
கடந்த 24-ம் தேதியன்று மதியம் எர்ணாகுளம் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. நடிகர் வினாயகன்தான் பேசியுள்ளார். தனது வீட்டில் மனைவிக்கும் தனக்கும் இடையே சிறு தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள வினாயகன், போலீஸாரை உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார் வினாயகன். அழைப்பது ஒரு பெரிய நடிகர் என்றதும் போலீஸார் உடனடியாக அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர். வீட்டுப் பிரச்ச்சினை என்று வினாயகன் சொன்னதால், பெண் போலீஸாரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் வீட்டுக்கு வந்த போலீஸார், சில விஷயங்களில் மத்தியஸ்தம் செய்ய முயல, இது வினாயகனுக்கு பிடிக்கவில்லை. அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது பெரிதாக, போலீஸார் அவரது வீட்டில் இருந்து திரும்பி வந்திருக்கிறார்கள்.
இது நடந்து சில மணி நேரங்களில் எர்ணாகுளம் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு மது போதையில் வந்திருக்கிறார் வினாயகன். தனது வீட்டுக்கு வந்த ஒரு பெண் போலீஸ் அத்துமீறி சில விஷயங்களைச் செய்ததாக கூறி அங்கு கத்தியிருக்கிறார். அந்த பெண் போலீஸ் யாரென்று தனக்கு தெரிய வேண்டும் என்றும் சத்தம் போட்டிருக்கிறார். போலீஸார் செய்த சமரசங்களை ஏற்காமல், தொடர்ந்து அவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். மோசமான வார்த்தைகளாலும் திட்டியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் வினாயகனின் செயல்கள் எல்லை மீறிப் போக, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர் மது அருந்தியிருக்கிறாரா என்று சோதித்துப் பார்த்துள்ளனர்.
போலீஸாரை வேலை செய்ய விடாமல் தடுத்தது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியது ஆகிய இரு பிரிவுகளில் வினாயகன் மீது வழக்கு பதிந்துள்ளனர். பின்னர் வினாயகனை அவரது சொந்த ஜாமீனில் போலீஸார் விடுதலை செய்தனர்.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த வினாயகன் செய்தியாளர்கலிடம் பேசும்போது, காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்பதைப் பற்றி பின்னர் விரிவாக பேசுவதாக கூறினார். “குடிபோதையில் நீங்கள் கலாட்டா செய்ததாக போலீஸார் கூறுகிறார்களே” என்று செய்தியாளர்கள் கேட்ட்தற்கு, “நான் பெண்களிடம் தவறாக நடந்ததாக அவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்.
போலீஸ் நிலையத்தில் நுழ்ழைந்து போலீஸாரை திட்டிய வினாயகனை சொந்த ஜாமீனில் விடுவித்த்தற்கு கேரளாவில் உள்ள சில சமூக செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரைப் பிரபலம் அல்லாத ஒரு சாதாரண குடிமகன் இதுபோல் நடந்துகொண்டால், அவரை போலீஸார் இப்படி விடுவிப்பார்களா? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல் போலீஸ் ஸ்டேஷனில் அத்துமீறி நடந்துகொண்ட வினாயகன் மீது மிகச் சாதாரண பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிந்த்து பற்றி கேரள சட்டமன்ற உறுப்பினரான உமா தாமஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.