No menu items!

சேதன் சர்மா ராஜினாமா – குழப்பத்தில் இந்திய கிரிக்கெட்.

சேதன் சர்மா ராஜினாமா – குழப்பத்தில் இந்திய கிரிக்கெட்.

கடைசியில் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. இந்திய கிரிக்கெட் அணிக்குள், வீரர்களுக்குள் இருந்த ரகசியங்களை தனியார் தொலைக்காட்சியின் ரகசிய கேமிராவில் உளறிக் கொட்டிய சேதன் சர்மா, தேர்வுக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். சேதன் ஷர்மா வெளியிட்ட இந்திய கிரிக்கெட் தொடர்பான உள் ரகசியங்கள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. சேதனின் ராஜினாமாவுடன் இதன் விளைவுகள் நிற்குமா அல்லது இன்னும் தொடருமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பந்துவீச்சாளராக இருந்த காலத்திலும் சரி, தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த காலத்திலும் சரி… ஒரு வில்லனாகத்தான் சேதன் சர்மா பார்க்கப்பட்டார். 1987-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை படைத்தவர் சேதன் சர்மா. இருந்தாலும், கபில்தேவ், ஸ்ரீநாத், ஜாஹிர் கான், பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் மீது இருந்த நம்பிக்கையை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இவர் மீது வைக்கவில்லை. என்றைக்கும் ஒரு பலவீனமான பந்துவீச்சாளராகவும், எதிரணிகளுக்கு ரன்களை வாரி வழங்கும் வள்ளலாகவும்தான் அவர் பார்க்கப்பட்டார்.

1986-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் இது கொஞ்சம்கூட சாத்தியமில்லாத விஷயம். சேதன் சர்மாவிடம் சென்ற கேப்டன் கபில்தேவ் யார்க்கர் பந்தை வீசுமாறு ஆலோசனை கூறினார். காலுக்கு அருகில் பிட்ச் ஆகும் யார்க்கர் பந்தை வீசினால் பேட்ஸ்மேனால் சுழற்றி அடிக்க முடியாது என்பதே அதற்கு காரணம். ஆனால் அந்த யோசனையை சேதன் சர்மா ஏற்கவில்லை. யார்க்கருக்கு பதில் தன் இஷ்டப்படி பவுன்ஸர் பந்தை வீசினார். மியாந்தத் அதைச் சுழற்றி அடிக்க, பந்து சிக்சருக்கு பறந்தது. பாகிஸ்தான் கோப்பையை வென்றது.

அந்த சம்பவத்துக்கு பிறகு இந்திய ரசிகர்கள் சேதன் சர்மாவை ஒரு வில்லனாகவே பார்த்தார்கள். ஆனால் கேப்டன் கபில்தேவின் செல்லப் பிள்ளையாக சேதன் சர்மா இருந்ததால், அவர் தயவில் சில காலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஓடியது. ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் போன்ற பந்துவீச்சாளர்கள் வந்த பிறகு காணாமல் போனார்.

பின்னர் எங்கிருந்தோ மீண்டும் இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைந்த சேதன் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரானார். அப்போதும் அவர் மீது விமர்சனங்கள் குவிந்தன. குறிப்பாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லாததற்கு அவரது அணித் தேர்வும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் கிரிக்கெட் வாரியத்தில் யாருடைய சிபாரிசாலோ சில நாட்களுக்குப் பின் மீண்டும் அவரே தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த சூழலில்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சேதன் சர்மா சிக்கினார். கங்குலிக்கும், விராட் கோலிக்கும் மோதல், இந்திய வீரர்கள் சிலர் போட்டிகளுக்கு முன் ஊசி போட்டுக் கொள்கிறார்கள், இந்திய கிரிக்கெட் அணியில் கோஷ்டி மோதல்கள் உண்டு என பல விஷயங்களை இதில் அடுக்கினார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி கேப்டன்களோ, வீரர்களோ தேர்வுக் குழு உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்க கூடாது. ஆனால் ரோஹித் சர்மாவும், ஹர்த்திக் பாண்டியாவும் அடிக்கடி தன்னை வந்து சந்திப்பதாக இந்த ஸ்டிங் ஆபரேஷனில் சேதன் சர்மா கூறியது அவர்களின் இமேஜை பாதித்தது. தங்களுக்கு சாதகமான வீரர்களை அணியில் சேர்க்க அவர்கள் இப்படி செய்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக போட்டிக்கு முன்னர் இந்திய வீரர்கள் சிலர் ஊசி போட்டுக்கொள்கிறார்கள் என்ற சேதன் சர்மாவின் பேச்சு இந்திய கிரிக்கெட் அணியின் இமேஜை பெரிதாக பாதித்தது. ஐசிசி இதை விசாரிக்க வேண்டும் என்றுகூட குரல்கள் எழுந்தன.

சேதன் சர்மாவின் கூற்றுகளால் சர்வதேச அளவில் விழுந்த தன் இமேஜை தூக்கி நிறுத்தவேண்டிய நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டது. சேதன் சர்மா கூறிய விஷயங்களை முழுவதுமாக நிராகரித்த பிசிசிஐ அதிகாரிகள், “சேதன் சர்மாவோடு வீரர்களோ, கேப்டன்களோ எப்போதும் பேசுவதில்லை. அணி வீரர்கள் பயிற்சி பெறும்போது அவர் வந்தால்கூட ஒரு ஓரமாகத்தான் நின்றிருப்பார். யாரும் அவருடன் பேச மாட்டார்கள். வீரர்கள் தன்னை மதிப்பதில்லை என்ற எண்ணத்தால் அவர் இப்படியெல்லாம் பேசியிருக்கலாம். இப்படியெல்லாம் பேசிவிட்டு இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர் தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வார்?” என கேள்வி எழுப்பினர்.

அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பிசிசிஐ யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட வீரர்களை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழு கூடவேண்டிய நிலையில் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் சேதன் சர்மா. இதனால் அவசரமாக தேர்வுக்குழு தலைவரை நியமிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பிசிசிஐ.

சேதன் சர்மா ராஜினாமா செய்தாலும், அவரை பிசிசிஐ சும்மா விட்டுவிடுமா என்ற கேள்வியும் இருக்கிறது. அவரது பேச்சு மிகப்பெரிய அளவில் இந்திய அணியை பாதித்துள்ளது. பிசிசிஐ செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இருப்பதால், பாஜகவுக்கும் இது நெருக்கடியை கொடுக்கிறது. அதனால் குறைந்தபட்சம் அவரை விசாரிக்க ஒரு ஆணையத்தை பிசிசிஐ நியமிக்கலாம். ஆனால் இதனால் எல்லாம் பிசிசிஐ-யின் இழந்துபோன இமேஜை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...