சென்னையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை வீட்டில் வளர்க்கும் நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதாஷாவுடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார். தனது உறவினர் ஒருவர் இறந்ததால் ரகு விழுப்புரம் சென்றிருந்தார். இதனால் வீட்டில் சோனியாவும் அவரது மகள் சுதாஷாவும் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.
இந்த சூழலில் நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் 2 நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார். நாய்களை கயிற்றால் கட்டாமலும், அதன் வாயைக் கட்டாமலும் அவர் கொண்டு வந்திருந்தார். பூங்காவுக்கு வந்த புகழேந்தி, நாய்களை சுதந்திரமாக விட்டு அவர் பூங்காவில் ஓய்வெடுத்துள்ளார். அப்போது அவரது நாய்கள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சுதக்ஷா மீது பாய்ந்து அவரைக் கடித்துள்ளன.
குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் நாய்கள் கடித்துள்ளன. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நாய்காளை விரட்டி அவர்களை மீட்டுள்ளனர். பலத்த காயமடைந்த குழந்தையை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார், நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை கடித்த நாய்கள் ராட்வில்லர் வகை நாய்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நாய்களை வளர்க்க இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவருடைய மனைவி வரலட்சுமி மற்றும் மகன் வெங்கடேஷன் ஆகிய மூன்று பேரின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.