நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. என்ன காரணம்? இதன்பின்னணி என்ன? கார்டுதாரர்கள் செய்ய வேண்டியது என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
நாடு முழுவதுமுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதைத்தவிர, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் 2020ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
அன்று கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்காகவே, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.. பிறகு இத்திட்டத்தின் மூலம் தேசம் முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அதாவது, அரசிடமிருந்து இலவச உணவு தானியங்கள் பெறும் தகுதியற்ற ரேஷன் பயனாளிகளை நீக்க அரசு முடிவு செய்திருக்கிறதாம்.
வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், கம்பெனிகளில் இயக்குநர்களாக இருப்பவர்கள் என பலரும் இந்த லிஸ்ட்டில் உள்ளதாக தெரிகிறது.. எனவே, வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் தகுதியற்றவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்களை மற்ற மாநில அரசு துறைகளின் தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, உணவு மற்றும் பொது விநியோகத் துறை இந்நடவடிக்கையை மேற்கொள்ள போகிறது. இதனால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இனி எளிதாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், நிறுவனங்களில் இயக்குநராக செயல்படும் நபர்கள் போன்றோர், இலவச மற்றும் மானிய ரேஷன் உதவிக்குரிய நபர்கள் அல்ல என்றும், இவர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது.
எனவே, மாநில அரசுகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தகுதியற்ற பயனாளிகளை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, ரேஷன் பொருட்கள் உரிய பயனர்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உணவுத்துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ராவின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பிற அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தகுதியற்ற பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியல், ‘Rightful Targeting Dashboard’ எனும் புதிய கண்காணிப்பு அமைப்பின் மூலம் மாநில அதிகாரிகள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தகுதி மீறி பெயர்கள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.
2021 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் 1.34 கோடி போலியான அல்லது செயல்படாத ரேஷன் கார்டுகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக தற்போது தொடங்கப்பட்டிருக்கும் புதிய பரிசோதனையும், திட்டங்களை நியாயமான பயனாளிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் 50% மக்களுக்கும், கிராமப்புறங்களில் 75% மக்களுக்கும் மானிய உணவுத் தானியங்கள் வழங்கும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 19, 2025 வரை 19.17 கோடி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 76 கோடியே 10 லட்சம் பேர் இதுவரை திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்பதால், தகுதியற்றவர்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால், தகுதியான ஏழைகளுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது தகுதியை சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.