No menu items!

நியாயமற்ற கட்டணங்கள் வசூலிக்கும் ஆம்னி உரிமங்களை ரத்து செய்க – அன்புமணி

நியாயமற்ற கட்டணங்கள் வசூலிக்கும் ஆம்னி உரிமங்களை ரத்து செய்க – அன்புமணி

நியாயமற்ற கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளித் திருநாளையொட்டி வரும் சனிக்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில், அதற்காக ஊருக்கு செல்ல முடியாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டணத்தைக் குறைக்க வேண்டிய அரசு, அதை செய்யாமல் ஆம்னி பேருந்து நிர்வாகங்களிடம் கெஞ்சுவது கண்டிக்கத்தக்கது.

தீபாவளி திருநாளுக்காக சென்னையிலிருந்து வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு செல்ல அதிகபட்சமாக ரூ.4,999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே நாள்களில் சென்னையிலிருந்து கோவை செல்ல ரூ.5000-மும், சேலத்திற்கு ரூ.4110-ம் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணமாக நிர்ணயித்துள்ளன.

அதேபோல், தீபாவளி முடிவடைந்து வரும் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை திரும்புவதற்கும் கிட்டத்தட்ட்ட இதே அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ஆறு முதல் 10 மடங்கு வரை அதிகம் ஆகும். கடந்த ஆண்டு தீபாவளி வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விடவும் ரூ.1000 – ரூ.1800 வரை அதிகம்.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால், அந்தக் கடமையையும், அதிகாரத்தையும் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தான் திமுக அரசு பயன்படுத்தி வருகிறதே தவிர, ஒருமுறை கூட முழுமையாக, கட்டணக் கொள்ளையை தடுக்கும் நோக்குடன் பயன்படுத்தியதில்லை.

ஆண்டுக்கு குறைந்தது 6 முதல் 10 வரை நீண்ட விடுமுறைகள் வரும் போதெல்லாம் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கொள்ளையில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு முறையும் கட்டணக் கொள்ளையை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. உண்மையாகவே அவ்வாறு அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், பேருந்துக் கட்டணக் கொள்ளை இப்போது வரை நீடிக்க வாய்ப்பே இல்லை.

இப்போதும் கூட ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை குறித்து போக்குவரத்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் வினா எழுப்பிய போது, ஆம்னி பேருந்து நிர்வாகங்களுக்கு ஆதரவாகத் தான் பேசுகிறாரே தவிர, கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

“500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதில் சுமார் 10 நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அவர்கள் நாளைக்குள் கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லை என்றால், தீபாவளி பண்டிகைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது தவறு.

ஆம்னி பேருந்துகள் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பது குற்றம். அந்தக் குற்றத்தை அவர்கள் மறைமுகமாகக் கூட செய்வதில்லை. பேருந்து பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான இணையதளங்களில் கட்டண விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான அதிகாரிகளைக் கொண்ட போக்குவரத்துத் துறை, இந்த இணையதளங்களை கண்காணித்தாலே கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால், அதையெல்லாம் செய்யாமல், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்கள் நாளைக்குள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; கட்டணக் குறைப்பு குறித்து ஆம்னி பேருந்து நிர்வாகங்களுடன் பேச்சு நடத்துவது போன்ற செயல்களில் தான் அரசு ஈடுபடுகிறது. நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்தாமல் அரசு கெஞ்சுவது ஏன்?

அதிகக் கட்டணம் வசூலித்தத ஆம்னி பேருந்துகள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அறிந்தால் சிரிப்பு தான் வரும். ஆம்னி பேருந்துகள் மீது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது ரூ.2000 அபராதம் விதிப்பது மட்டும் தான். ஒரு பயணச் சீட்டுக்கு ரூ.5000 வரை கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது தான் நடவடிக்கையா? கடந்த ஆண்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதற்காக 119 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், அவை அனைத்தையும் அரசு உடனடியாக விடுவித்து விட்டது. சட்டத்தை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, இந்த அளவுக்கு கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? இவற்றைப் பார்க்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது அப்பட்டமாகத் தெரியும்.

அண்மையில், தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் திமுக அரசு கருத்துகளைக் கேட்டது. அதில் கட்டணத்தை உயர்த்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதையும் மீறி தனியார் பேருந்துகள் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள திமுக அரசு அனுமதி அளிக்கவுள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டுகின்றனர்.

உண்மையில் உயர்நீதிமன்றம் எந்த இடத்திலும் தனியார் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும்படி ஆணை இடவில்லை. மாறாக, இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு செய்யலாம் என்று தான் கூறியுள்ளது.

தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் விஷயத்தில் எள் என்றால் எண்ணெய்யாக இருக்கும் திமுக அரசு, தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்கும் விஷயத்தில் மட்டும் கடமையை செய்யாமல் பின்வாங்கி வருகிறது.

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டும் கூட, அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசு உடனடியாக நிர்ணயிக்க வேண்டும்; அதையும் மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...