No menu items!

இந்தியா Vs கனடா – என்ன நடக்கிறது? Full Story

இந்தியா Vs கனடா – என்ன நடக்கிறது? Full Story

இந்தியாவுக்கும், கனடா நாட்டுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்தியாவில், சீக்கிய மக்களின் அளவு ஏறத்தாழ 2 சதவிகிதம். கனடா நாட்டிலும்கூட சீக்கிய மக்களின் அளவு 2 சதவிகிதம்தான். 7 லட்சத்து 70 ஆயிரம் சீக்கியர்கள் கனடாவில் வசிக்கிறார்கள். அவர்களில் கணிசமான பேர் கனடா நாட்டின் குடிமக்கள். கனடா நாட்டு அரசியலில் சீக்கியர்களின் தாக்கம் அதிகம்.

வந்தாரை வாழவைக்கும் நாடு கனடா. இலங்கைத் தமிழர்களுக்கு நார்வே நாடு எப்படியோ, அந்தமாதிரிதான் சீக்கியர்களுக்குக் கனடா நாடு என்றும் சொல்லலாம்.

சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலோ என்னவோ, கடந்த சில மாதங்களில் கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களுக்கு முன்னால் ஏகப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அத்தனையும் சீக்கியர்களின் கைங்கர்யம்.

கனடா நாட்டை ‘உலகத்தின் வாசல் மிதியடி’ அதாவது டோர்மேட் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். காரணம் இல்லாமல் இல்லை.

1997-ம் ஆண்டு, இஸ்ரேல் நாட்டு உளவுப்படை, கனடா நாட்டில் வாங்கிய கடவுச் சீட்டுகளின் உதவியுடன், கனடா நாட்டு மருத்துவர்களைப் போல நடித்து, ஜோர்டான் நாட்டுக்கு வந்து ஹமாஸ் அமைப்பின் தலைவருக்கு விஷம் வைத்த சம்பவம் ஒன்று உண்டு. அதாவது கனடா நாட்டை யாரும் எளிதாக, எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது மாதிரியான நிலை.

இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தைத் தனிநாடாக மாற்றக் கோரும் காலிஸ்தான் கோரிக்கை எப்போதோ புகைந்து அணைந்து போய்விட்டது. ஆனாலும் கனடாவில் காலிஸ்தான் புலிப்படை, பப்பர் கால்சா போன்ற 9 வகையான சீக்கிய தீவிரவாத அமைப்புகள் இப்போதும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த 9,10 தேதிகளில், 18ஆவது ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது. கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

‘கனடாவில் சீக்கிய தீவிரவாதிகளின் ஆட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதே. அவர்களை கட்டுக்குள் வைக்கக் கூடாதா?’ என்று ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்தியா வேண்ட, ஜஸ்டின் ட்ரூடோவின் முகம் அந்தக் கணம் மாறிப்போனது.

இந்த இடத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக்.

கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி. கனடாவின் வான்கூவர் நகரின் சர்ரே புறநகர்ப்பகுதி யில், ஒரு குருத்வாரா அருகே, ஹர்தீப்சிங் நிஜ்ஜார் என்பவர், முகமூடி அணிந்த இரு மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
‘ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சாதாரண நபர் இல்லை. அவர் காலிஸ்தான் புலிப்படையைச் சேர்ந்தவர். அவர் தேடப்படும் பயங்கரவாதி’ என்பது இந்தியத் தரப்பு வாதம். ‘ஹர்தீப்சிங் நிஜ்ஜார் ஒரு வழக்கறிஞர். அவர் ஒரு மனித உரிமை போராளி’ என்பது கனடா தரப்பு வாதம்.

ஹர்தீப்சிங் நிஜ்ஜார் பன்னாட்டு காவல்துறை அமைப்பான இண்டர்போலால் ரெட்கார்னர் நோட்டீஸ் விடப்பட்ட ‘பெருமைக்குரிய’ ஒருவர். ‘அவரைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசு’ என, இந்திய அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ‘விலைமதிப்புள்ள’ நபர் அவர்.

அந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார்தான் கனடாவில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை தொடர்பான விசாரணை கனடாவில் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாடு முடிந்து கனடா திரும்பிய ட்ரூடோ என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியாது. ‘நிஜ்ஜாரின் கொலையில் இந்திய உளவு அமைப்புகளின், இந்திய ஏஜெண்டுகளின் தலையீடு இருப்பதாகத் தெரிகிறது’ என கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் ட்ரூடோ அறிவிக்க, அவ்வளவுதான் அதிரடியாக ஆரம்பமாகிவிட்டது பிரச்சினை.

‘இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே? இது காரணமற்ற, உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு’ என்று இந்தியா கூற…


‘எங்கள் நாட்டில் குடியுரிமை பெற்ற ஒருவரை எங்கள் மண்ணில் கொல்வதா? அது கனடா நாட்டின் இறையாண்மையை மீறும் செயல்’ என்று கனடா சொல்ல, ‘அவர் கனடா நாட்டு குடிமகனாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அவர் தேடப் படும் பயங்கரவாதி’ என்று இந்தியா பதில் சொல்ல…


இந்திய தூதரக உயர் அலுவலர் ஒருவரை கனடா வெளியேற்ற, பதிலுக்கு கனடா நாட்டு தூதரக உயர் அலுவலர் ஒருவரை இந்தியா வெளியேற்ற…


‘கனடா நாட்டில் உள்ள இந்தியர்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று இந்தியா அறிவிக்க…

‘உலகத்திலேயே பாதுகாப்பான நாடு கனடாதான். இந்தியர்கள் எதற்காக இங்கே பாதுகாப்பு பற்றி பயப்பட வேண்டும்?’ என்று கனடா நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் சொல்ல…

கனடா நாட்டுடனான விசா நடைமுறையை இந்தியா நிறுத்திவைக்க, அடுத்த மாதம் இந்தியா வருவதாக இருந்த வணிகத் தூதுக்குழுவை கனடா நிறுத்தி வைக்க.. ஆம். இரு நாட்டு உறவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றிகரமாக ஒரு விரிசல் விழுந்து விட்டது.

இதற்கிடையே, ‘கனடாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்’ என்ற சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு மிரட்ட, கனடா நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள இந்திய தூதரங்களை மூடக்கோரி பேரணி நடத்தப்போவதாக சில சீக்கிய அமைப்புகள் அறிவிக்க, இந்த அமளிதுமளியின் இடையே கனடாவின் வின்னிபெக் நகரில், சுக்தோல்சிங் கில் என்ற மற்றொரு சீக்கியத் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட, பரபரப்புக்கே பஞ்சமே இல்லாமல் பலப்பல சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.

கனடா நாடு, அமெரிக்க ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து, ‘ஃபைவ் ஐஸ்’ என்ற ஓர் அமைப்பிலும் கனடா அங்கம் வகிக்கிறது. எந்த ஓர் உளவுத் தகவலையும் இந்த ஐந்து நாடுகளும் தங்களுக்குள் பகிர்ந்து பங்கிட்டுக் கொள்வது வழக்கம்.

ஆனால், இந்த ‘ஃபைவ் ஐஸ்’ என்ற ஐந்து கண்கள் அமைப்பு, ட்ரூடோவின் இந்திய எதிர்ப்பை ரசிக்கவில்லை. ட்ரூடோவுக்கு போதுமான ஆதரவையும் அது வழங்க வில்லை.

கனடா பிரதமர் ட்ரூடோ அரசியல் ரீதியாக இப்போது இறங்கு முகத்தில் இருக்கிறார். தனது செல்வாக்கை சீர்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் இப்போது இந்திய எதிர்ப்பில் அவர் இறங்கியிருக்கிறார் என்ற முடிவுக்கு ‘ஃபைவ் ஐஸ்’ அமைப்பு வந்திருக்க வேண்டும்.

ஆகவே, ‘கனடாவில் கொல்லப்பட்ட தீவிரவாதி தொடர்பான விசாரணையில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றுகூறி அமெரிக்க வெள்ளை மாளிகை மெல்ல நழுவிவிட்டது. ‘ஃபைவ் ஐஸ்’ அமைப்பின் மற்ற மூன்று நாடுகளின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.

உலக அளவில் 1.4 பில்லியன் மக்களையும், உலகத்தின் மிகப்பெரிய ராணுவத்தை யும் கொண்ட நாடு இந்தியா. 2030-ம் ஆண்டில் ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை வீழ்த்தி, உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார ஆற்றல் மிக்க நாடாக இந்தியா உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அரசியலில் சீனாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், சீனாவுக்கு எதிர்சக்தியாக நிறுத்த மேற்கு நாடுகளுக்கு இந்தியா மிகமிகத் தேவை. இந்தநிலையில் இந்தியாவை இப்போது பகைத்துக் கொள்ள அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் தயாராக இல்லை.

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு எதுவும் கிடைகாமல் போனதன் சூட்சுமம் இதுதான். இது இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

உலக அரசியல் சதுரங்கத்தில் தங்களுக்கு எதிராகச் செயல்படும் தனிநபரையோ, குழுக்களையோ நாடுகள் ஒழித்துக் கட்டுவது ஒன்றும் புதிது அல்ல. ‘ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும், புதுவது அன்று’ என்பது சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் செயல்தான்.

அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ, ரஷிய உளவுப்படையான கே.ஜி.பி, இஸ்ரேலிய உளவுப்படையான மொசாத் போன்ற அமைப்புகள், கடந்த காலங்களில், கடல் கடந்து சென்று அந்நிய நாடுகளில் பல அழித்தொழிப்பு வேலைகளைச் செய்ததாகக் குற்றச் சாட்டுகள் உண்டு.

இந்தியாவின் ரா உளவுப்பிரிவு மீது அப்படியான வெளிப்படையான குற்றச்சாட்டு எதுவும் இதுவரை இருந்ததில்லை. இந்தநிலையில் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான பரபரப்பு நிலவிக் கொண்டிருந்த வேளையிலே, அடுத்த இலக்காக சுக்தோல்சிங் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது உலக அரங்கில் பலரது புருவங்களை உயரச் செய்துள்ளது.

இந்திய உளவுப்பிரிவான ரா, ஐ.பி., மிலிடெரி இண்டலிஜென்ஸ் எனப்படும் எம்.ஐ. போன்ற ஐந்து அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீது முதன்முறையாக உலகின் பார்வை அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

இந்தியா- கனடா இடையே ஏற்பட்டுள்ள விரிசல், இருநாட்டு வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. உலக அளவில் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களில் 40 சதவிகிதம் பேர் கனடாவில்தான் தங்கிப் படிக்கிறார்கள். இந்தநிலையில் கனடா விசா தடை விதித்ததால், அது இந்திய மாணவர்களையும், இருதரப்பு வணிகத்தையும் பாதிக்கும்.

தவிர, கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மூலம் பல மில்லியன் டாலர் வருவாய் கனடாவுக்குக் கிடைக்கிறது. இது நின்றுபோனால் இழப்பு கனடாவுக்குத் தான். இந்தியாவுக்கு அல்ல.

சந்திரயான்-3 போன்ற விண்வெளி வெற்றிகளைத் தொடர்ந்து, அண்மை காலமாக உலக அரங்கில் இந்தியாவின் கை ஓங்கி வருகிறது. கனடா-இந்தியா இடையே ஏற்பட்டிருக்கும் இந்த கசப்பான மோதலில் கூட தற்போது இந்தியாவின் கையே ஓங்கி உயர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

ஆனாலும், இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்பட்டால் அது இரு நாட்டு அரசுகளை விட மக்களுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

‘இரண்டு யானைகள் சண்டையிட்டுக் கொண்டால் மிதிபடப் போவது புல்தரைதான்’ என்று ஒரு பழமொழி உண்டு.

அந்த பழமொழியுடன் இந்தப் பதிவை முடித்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...