சென்னையில் ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி யாருக்கெல்லாம் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை மாவட்டத்தில் கடந்த 3, 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். ஆனால், 6000 நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது தொடர்பாக குழப்பமான நிலையே இருந்து வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
யாருக்கெல்லாம் ரூ. 6000 கிடைக்கும்?
இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில், “‘மிக்ஜாம்’ புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட வருவாய் வட்டங்கள், கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன் வழங்கி, ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்த மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு மற்றும் மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்கள் வங்கிக்கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
அதேநேரம், குடும்ப அட்டை இல்லாமல் சென்னையில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் உண்டா என்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. சென்னையை பொருத்தவரை, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களில், பலருக்கும் குடும்ப அட்டை தங்களின் சொந்த ஊர்களில் இருக்கும். பலர் இங்கு வந்து புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருப்பார்கள். எனவே, குடும்ப அட்டை இல்லாத நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வந்து வசிப்போர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்தப் பகுதியினருக்கு நிவாரணம் கிடைக்கும்?
சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண தொகை ஏன் ரொக்கமாக வழங்கப்படுகிறது?
புயல் நிவாரண தொகையை ரொக்கமாக வழங்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரொக்கமாக வழங்குவது ஊழலுக்கு வழி வகுக்கும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், நிவாரண தொகை ஏன் ரொக்கமாக வழங்கப்படுகிறது என்பது தொடர்பாக அரசு விளக்கமளித்துள்ளது. அதில், “புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சில பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், பாதிக்கப்பட்ட பலர் தங்களது ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

                                    

