நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாம்புக் கடி சம்பவங்களால் பல ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். பாம்புக்கடிக்கு விஷமுறிவு மருந்துகள் இருந்தாலும் அவை விலை உயர்ந்தவையாகும் உற்பத்தி செய்யச் சிக்கலாகவும் இருக்கிறது. இதற்கிடையே ஒட்டகங்களின் கண்ணீர் சிறந்த விஷமுறிவு மருந்தாகச் செயல்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் பொதுவாக ஒட்டகங்களைப் போக்குவரத்திற்குப் பயன்படுத்துவார்கள். ராஜஸ்தான் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள பாலைவனங்களில் ஒட்டகங்களே பிரதானப் போக்குவரத்தாக இருக்கிறது. ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஓட்டங்களால் போக்குவரத்து மட்டுமின்றி மற்றொரு மிக பெரிய பலன் இருப்பது தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் உள்ள ஒட்டகங்களுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (NRCC) நடத்திய இந்த ஆய்வில், ஒட்டகங்களின் கண்ணீர் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு அமைப்பிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகள் பாம்பு விஷத்தை முறியடிக்க உதவுவது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாம்புக்கடிக்குச் சிகிச்சை அளிக்க ஒரு புதிய வழி உருவாகியுள்ளது. இது வெற்றிகரமாக இருந்தால் ஒட்டகம் வளர்க்கும் விவசாயிகளின் வருமானத்தையும் இது கணிசமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் மிகவும் கொடிய பாம்பான “எகிஸ் கரீனடஸ் சோசுரேகி” பாம்பின் விஷத்தை என்ஆர்சிசி ஆய்வாளர்கள் ஒட்டகங்களுக்குச் செலுத்தி பரிசோதனைகள் நடத்தினர். அந்த ஒட்டகங்களின் ரத்தம் மற்றும் கண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட ஆன்டிபாடிகளை ஆய்வு செய்தபோது அது பாம்பின் விஷத்தை எதிர்த்துப் போராடுவது கண்டறியப்பட்டது.
அதேநேரம் குதிரை இம்யூனோகுளோபுலின் மூலம் தயாரிக்கப்படும் பாம்பு விஷ முறிவு மருந்துகள் வழக்கமான விஷ முறிவு மருந்துகளை விடக் குறைந்த அலர்ஜியை தான் ஏற்படுத்துகிறதாம். வழக்கமான விஷ முறிவு மருந்துகளை விடச் செலவு குறைவு.. எளிதாக உற்பத்தியும் செய்யலாம். மேலும், சாதாரண முறிவு மருந்துகளை விடச் செயல் திறனும் அதிகமாக இருக்கிறதாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 58,000 பாம்புக்கடி இறப்புகள் ஏற்படுகின்றன. மேலும் 1.4 லட்சம் பேருக்கு மோசமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாகக் கிராமப்புறங்களில், பாம்புக்கடி சம்பவங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் மருத்துவச் சிகிச்சை தாமதமாகும். அதுபோன்ற பகுதிகளில் குறைந்த செலவில், பாதுகாப்பான சிகிச்சையைக் கிடைப்பதை இந்த வகை மருந்துகள் உறுதி செய்யும்.
மேலும் இது பிகானேர், ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் போன்ற பகுதிகளில் ஒட்டகம் வளர்க்கும் மக்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் மிகப் பெரியளவில் உதவும்.. உள்ளூர் விவசாயிகள் தங்கள் ஒட்டகங்களை அளித்தால் அதன் கண்ணீர் மற்றும் ரத்த மாதிரிகளை என்ஆர்சிசி எடுத்துக் கொள்கிறது. அதற்குப் பதிலாக விவசாயிகளுக்கு நல்ல பணத்தை என்ஆர்சிசி ஆய்வாளர்கள் வழங்குகிறார்கள்.
சீரம் உள்ளிட்ட பிற தனியார் நிறுவனங்களும் இப்போது ஒட்டகத்திலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளில் ஆய்வுகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு ஒட்டகத்திற்கு மாதாமாதம் கூடுதலாக ₹5,000 முதல் ₹10,000 வரை வருமானம் கிடைக்கிறது. இது நிலையான ஒரு வருவாயை அவர்களுக்கு வழங்குகிறது.