No menu items!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது பொருளாதாரம் உயரும்

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது பொருளாதாரம் உயரும்

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 122-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது

ஆபரேஷன் சிந்தூரின்போது நமது எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த ராணுவ நடவடிக்கையால் இந்தியர்களின் தலைநிமிர்ந்தது. நமது வீரர்களின் வீர, தீரத்தைப் பார்த்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் அடைந்தனர். இப்போது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் தீவிரவாத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறது.

ஆபரேஷன் சிந்தூர் என்பது ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. இது நமது நாட்டின் உறுதிப்பாடு ஆகும். நமது நாட்டின் முகம் மாறி வருகிறது என்பதை உலகத்துக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம். ராணுவத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் அனைத்து நகரங்கள், கிராமங்களில் தேசிய கொடி ஏந்தி பேரணிகள் நடைபெற்று வருகின்றன. ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி சமூக ஊடகங்களில் கவிதைகள், புதிய பாடல்கள் வெளியாகி வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பாக ராஜஸ்தானின் பிகானீர் சென்றிருந்தேன். அங்கே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக குழந்தைகள் வரைந்த ஓவியம் எனக்கு பரிசாக வழங்கப்பட்டது. பிஹாரின் கடிஹார், உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

உள்ளூர் பொருட்கள்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் மிக முக்கிய பங்கு வகித்தன. இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதன்மூலமே நமது தேசப்பக்தியை வெளிப்படுத்த வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்.

கல்வி கொடி

சத்தீஸ்கரின் தந்தேவாடாவில் ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் கொடி கட்டி பறந்தது. தற்போது அங்கே கல்வி கொடி கட்டிப் பறக்கிறது. அந்த பகுதி மாணவ, மாணவியர் கல்வியில் சாதனை படைத்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி மாவட்டம், கடேஜ்ஹரி கிராமம் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அங்கு தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு முழு அமைதி திரும்பி உள்ளது. முதல்முறையாக அந்த கிராமத்துக்கு அண்மையில் பயணிகள் பேருந்து இயக்கப்பட்டது. இதை ஒட்டுமொத்த கிராம மக்களும் மிகப்பெரிய விழாவாக கொண்டாடினர்.

சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குஜராத்தின் கிர் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சிங்கங்களின் எண்ணிக்கை குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் 24 மணி நேரமும் இந்த பகுதிகளை தொடர்ந்து கண்காணித்தனர். மிகவும் நுட்பமான முறையில் சிங்கங்களைக் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தின் கிர் வனப் பகுதியில் சிங்கங்களின் எண்ணிக்கை 674-ல் இருந்து 891 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

விவசாயத்தில் புதிய புரட்சி

நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள், ட்ரோன்கள் மூலம் விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் ட்ரோன்கள் வாயிலாக 50 ஏக்கர் நிலத்தில் பயிர்கள் மீது மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பெண்களை பாராட்டுகிறேன்.

சர்வதேச யோகா தினம்

கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாடி வருகிறோம். நீங்கள் இதுவரை யோகாவை கற்கவில்லை என்றால் இப்போதே யோகாவோடு இணையுங்கள். இது உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துவிடும்.

ஆந்திர அரசு சார்பில் யோகாந்திரா என்ற இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஆந்திரா முழுவதும் யோகாவை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் தங்கள் அலுவலகங்களிலேயே யோகாசனம் மேற்கொள்ள இடம் ஒதுக்கி உள்ளன. இதன்மூலம் ஊழியர்களின் உடல்நலனும் மனநலனும் பேணப்படும்.

கடந்த 24-ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் முன்னிலையில் ஆயுர்வேதம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆயுர்வேதம் கொண்டு செல்லப்படும்.

பள்ளிகளில் சர்க்கரை தகவல் பலகை

சிபிஎஸ்இ சார்பில் புதிய விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் சர்க்கரை தகவல் பலகை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் எவ்வளவு சர்க்கரையை சாப்பிடலாம் என்பது குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சிறுவயது முதலே ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பழக்கங்களை பின்பற்றுவது எதிர்காலத்துக்கு பயனுடையதாக இருக்கும். சிபிஎஸ்இ-யின் புதிய இயக்கத்தை பெற்றோர், சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

இதேபோல அலுவலகங்கள், அமைப்புகள், ஓட்டல்களில் சர்க்கரை உட்கொள்ளல் அளவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது ஆரோக்கியமான இந்தியாவுக்கு அடித்தளமிடும்.

36 பதக்கங்கள்

இந்த முறை கேலோ இண்டியா போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. பளுதூக்கும் போட்டியில் மகாராஷ்டிராவின் அஸ்மிதா தோனே, ஒடிசாவின் ஹர்ஷ்வர்தன் சாஹு, உத்தர பிரதேசத்தின் துஷார் சவுத்ரி புதிய சாதனை படைத்தனர்.

தடகள போட்டிகளில் உத்தர பிரதேசத்தின் காதிர் கான், ஷேக் ஜீஷான் ஆகியோரும், ராஜஸ்தானத்தின் ஹன்ஸ்ராஜும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த முறை பிஹார் 36 பதக்கங்களை வென்றது.

உலக தேனீக்கள் தினம்

கடந்த 20-ம் தேதி உலக தேனீக்கள் தினத்தை கொண்டாடினோம். கடந்த 11 ஆண்டுகளில் தேன் உற்பத்தியில் புதிய இனிமை புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு ஓராண்டு தேன் உற்பத்தி 75 ஆயிரம் மெட்ரிக் டன்களாக இருந்தது. இப்போது ஒண்ணேகால் லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

தேனீக்கள் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழலோடு தொடர்புடையது மட்டுமல்ல, நமது வேளாண்மைக்கும் முக்கியமானது. இயற்கையோடு இணைந்திருந்தால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...