ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை கொஞ்சம் கொஞ்சமாக தனது வாரிசுகளுக்கு கைமாற்றி வருகிறார் முகேஷ் அம்பானி. கடந்த ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் தலைவராக தனது மகன் ஆகாஷ் அம்பானியை நியமித்த முகே அம்பானி, இப்போது அடுத்ததாக ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் தலைவராக தனது மகள் இஷா அம்பானியை நியமித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45-வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பா திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு சகோதரன் அனில் அம்பானியுடன் தனக்கு ஏற்பட்ட சொத்து தகராறு தனது வாரிசுகளுக்குள் ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் இப்போதே சொத்துகளை பிரித்து வருகிறார் முகேஷ் அம்பானி.
இஷா அம்பானியும், ஆகாஷ் அம்பானியும் இரட்டைக் குழந்தைகள். முகேஷ் அம்பானி – நிதா அம்பானி ஜோடிக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. பின்னர் செயற்கை கருத்தரிப்பு முறையில் இஷா அம்பானியையும், ஆகாஷ் அம்பானியையும் பிறந்துள்ளனர். 2 மகன்கள் இருந்தாலும் முகேஷ் அம்பானிக்கு தன் மகள் இஷாவைத்தான் மிகவும் பிடிக்கும். அதேபோல் இஷாவுக்கும் முகேஷ் அம்பானியை மிகவும் பிடிக்கும். முகேஷ் அம்பானியை தனது ரோல் மாடலாக அவர் கருதுகிறார். தனது அப்பாவைப் போல் தானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆக விரும்புவதாக பல நிகழ்ச்சிகளில் அவர் தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மனைவியான நிதா அம்பானி, தான் ஒருமுறை அணிந்த உடைகளை மீண்டும் அணிவதில்லை. அந்த அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார். ஆனால் அதற்கு நேர்மாறாக எளிமையான வாழ்க்கை வாழும் மகள் இஷா அம்பானி, ஒரே உடையை பல்வேறு நிகழ்ச்சிகளில் அணிந்து வந்துள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான யேல் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி படித்த இஷா அம்பானி, பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார்.
30 வயதான இஷா அம்பானி, ஆனந்த் பரிமள் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்துக்கு மட்டும் 100 கோடி அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
மகளுக்கு ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தை தந்துள்ள முகேஷ் அம்பானி, தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு துபாயின் பாம் ஜுமேரா செயற்கை தீவில் ஒரு பிரம்மாண்டமான வசந்த மாளிகையை வாங்கிகொடுத்துள்ளார். 10 படுக்கை அறைகள், ஒரு ஸ்பா, உள்ளரங்க நீச்சல்குளம், வெளியரங்க நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட இந்த வசந்த மாணிகையின் விலை 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பகுதியில் ஷாரூக் கான், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ஆகியோரும் வீடுகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.