No menu items!

மனிதர்களை விடப் புத்தகங்கள்தாம் இதம் – மாலன்

மனிதர்களை விடப் புத்தகங்கள்தாம் இதம் – மாலன்

வாழ் தமிழா யூடியூப் சேனலில் (Wow Tamizhaa – YouTube) வரும் Book Talk தொடரில் மூத்த பத்திரிகையாளரும், சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான மாலனை சந்தித்தோம்.

உங்கள் வாசிப்பு பழக்கம் எப்படி உருவாகி வளர்ந்தது? உங்களுக்கு புத்தகங்களை முதலில் அறிமுகம் செய்தது யார்?

நான் பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூர். இது என் அம்மாவுடைய ஊர். என் பத்து வயது வரை ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் நான் வளர்ந்தேன். அப்போது என் தந்தை மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். வார இறுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவார்.

எனது தந்தை ஒரு ஒரு தீவிர வாசகர். ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் படிப்பார். ‘ஆனந்த விகடன்’ தேவன், ‘கலைமகள்’ கி.வா.ஜகந்நாதன் போன்ற சில எழுத்தாளர்கள் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் மதுரை பக்கம் வந்தால் அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு வருவார்கள். ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக்கொள்வார்கள். அந்த கடிதங்களை பிற்காலத்தில் நான் பார்த்திருக்கிறேன். தேவன் ‘மிஸ்டர் வேதாந்தம்’ தொடர்கதை எழுதியபோது, அது தொடர்பாக அப்பாவிடம் ஆலோசனை கேட்டு எழுதிய கடிதங்களும் அதில் இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த பிரபலமான பென்னிங்டன் நூலகத்தில் அப்பா உறுப்பினராக இருந்தார். ஒவ்வொரு வாரம் வரும்போதும் பென்னிங்டன் நூலகம் போய் அந்த வாரம் படிப்பதற்கான புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்வார். அப்படி போகும்போது ஒரு வாரம் என்னை சைக்கிளில் முன்னால் உட்கார வைத்து அழைத்து சென்றார். நூலகத்தில் என்னை நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு புத்தகங்கள் பார்க்க சென்றார். அப்போது சுற்றிலும் பார்க்கிறேன். என்னைச் சுற்றி ஆள் உயர அலமாரிகளில் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியே எனக்கு பிரமிப்பாக இருந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டதை கேட்டப்போது புத்தகம் படிப்பவர்களுக்கு பெரிய மரியாதை இருக்கிறது என்ற எண்ணம் என் மனசில் பதிந்தது. புத்தகங்கள் மீதான என் முதல் ஈர்ப்பு அதுதான். அப்போது எனக்கு ஆறு வயது இருக்கும். புத்தகங்கள் மீதான நல்லெண்ணம், புத்தகங்களில் என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதன்பின்னர் ஏற்பட்டது.

எனது அம்மாவும் தீவிர வாசகி. அதிகமும் தமிழ் புத்தகங்கள்தான் படிப்பார். அவர் படித்த புத்தகங்களை விமர்சனம் செய்து அப்பாவுடன் பேசுவார். ஆனால், அப்பா விமர்சிக்கமாட்டார். ஒரு எழுத்தாளரை முழுமையாக படிப்பது வரைக்கும் அவரை விமர்சிப்பது சரியல்ல என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. ஒரு எழுத்தாளன் தன்னை ஒரு படைப்பு மூலம் வெளிப்படுத்துகிறான்; அதே நேரம் அது அந்த படைப்பு ஒரு சூழலுக்கும் உட்பட்டது. எனவே, ஒரு படைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த எழுத்தாளரைப் பற்றி எடை போடுவது நியாயமல்ல என்று அவர் சொல்வார். இப்படி புத்தகம் தொடர்பான இரண்டு விதமான அனுகுமுறைகள் வீட்டுக்குள்ளேயே இருந்தது. இதனால், வீட்டில் சாப்பிடும்போது, சும்மா இருக்கும்போது படித்த புத்தகங்கள் பற்றிய விவாதங்கள் நடக்கும். அதையெல்லாம் கேட்டு வளர்ந்ததும் 10-12 வயதிலேயே புத்தகங்களை நாடி போகும் ஒரு பழக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது.

அம்மா, பாரதியார் படைப்புகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அம்மாதான் எனக்கு பாரதியாரை அறிமுகப்படுத்தினார். அம்மாவால் 10 – 12 வயதிலேயே நான் பாரதியாரை படிக்கத் தொடங்கிவிட்டேன். பாரதியாரை படித்தது என் வாழ்வின் திருப்புமுனையானது. அவரை மாதிரி பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்ற ஆசை உண்டானது. என்னுடைய பார்வைகளை கொடுத்தவர் பாரதியார். அரசியலோ சமூகமோ மொழியோ பத்திரிகையோ எதுவாக இருந்தாலும் இதை பாரதி எப்படி செய்திருப்பார் என்கிற பார்வையில் இருந்துதான் இன்றும் நான் ஒவ்வொன்றையும் அனுகுகிறேன்.

அப்பா சிறு வயதில் நூலகத்துக்கு அழைத்து சென்றதன் தாக்கமோ என்னவோ, இன்றும் நூலகங்கள் மேல் எனக்கு ஒரு ஈடுபாடு, பித்து உண்டு. எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் நூலகம் எங்கே இருக்கிறது என கேட்டு, தேடிப்போய் பார்ப்பேன். வெளிநாடுகள் சென்றாலும் இது தொடரும்.

நான் சென்னைக்கு வந்த புதிதில் சிறிது காலம் வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, திருவல்லிக்கேணியில் என் சகோதரர் தங்கியிருந்த மேன்சனில் அதே அறையில் தங்கியிருந்தேன். காலையில் எல்லோரும் புறப்பட்டு வேலைகளுக்கு சென்றுவிடுவார்கள். நான் மட்டும் தனியாக இருப்பேன். அது எனக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை கொடுத்தது. அதனால், அதன்பிறகு ‘கல்யாணப் பரிசு’ தங்கவேலு மாதிரி, எல்லோரும் வேலைக்கு புறப்பட்டு செல்லும்போது நானும் அவசரமாக குளித்து, சாப்பிட்டு புறப்பட்டுவிடுவேன். முதலில் ‘பிரிட்டீஷ் கவுன்சில் லைப்ரரி’ செல்வேன். அங்கே உட்கார்ந்து படிப்பேன். மதியம் உணவு இடைவேளைக்கு ஒரு மணி நேரம் மூடிவிடுவார்கள். அப்போது ‘ட்ரைவ்-இன்’ சென்று சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் இருந்த அமெரிக்க தூதரகம் நூலகம் செல்வேன். அப்போது அங்கே அசோகமித்திரனும் தினம் வருவார். எதாவது ஒரு டெஸ்கில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்.

புத்தகங்களுடன் இதமாக இருப்பதுபோல் என்னால் மனிதர்களுடன் இருக்க முடிவதில்லை.  புத்தகங்கள் என்னை வேறு வேறு இடங்களுக்கு அழைத்துக்கொண்டு செல்கின்றன. நண்பர்கள் அப்படி கூட்டி செல்வதில்லை.

சமூக வலைதளங்கள் வருகைக்குப் பின்னர், அதில் வாசிக்கிறார்கள் என்றாலும், ஒரு துறை சார்ந்த ஆழமான வாசிப்பு இல்லாமல் ஆகியிருக்கிறது என்றோரு விமர்சனம் உள்ளதே?

பரவலான வாசிப்புகூட இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நாங்கள் படிக்க தொடங்கிய காலகட்டத்தில் எல்லா வகையான எழுத்தாளர்களையும் வாசித்தோம். ஜெயகாந்தனையும் படித்துள்ளோம், லஷ்மியையும் படித்துள்ளோம். லாசராவையும் படிப்போம், விந்தனையும் படிப்போம். அந்த பரவலான வாசிப்பு பரந்த பார்வையை கொடுத்தது. அது, உலகம் பன்முகம் கொண்டது என்பதை சொன்னது. ஆனால், இப்போது அது போன்ற வாசிப்பு இல்லை. தொடர்ந்து வாசிப்பவர்களும்கூட குழு சார்ந்துதான் படிக்கிறார்கள். படிப்பில் உயர்வு, தாழ்வு பார்க்கிறார்கள். பாலகுமாரனை படிப்பவன் சராசரி அறிவு கொண்டவன், ஜெயமோகனை படிப்பவன் உயர்ந்த தளத்தில் இருப்பவன் போன்ற கற்பிதங்களுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். ஒரு அரசியல் இயக்கம் போல் புத்தக வாசிப்பு செயல்பட முடியாது; செயல்பட கூடாது.

புத்தகத்தின் அடிப்படை என்பது வாசிப்பு தரும் அனுபவம்தான். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கும். வெவ்வேறு விதமான புத்தகங்களை படிப்பவர்களுக்குதான் அது கிடைக்கும். ஒரு நூலகத்துக்குள் சென்றால் எல்லாவிதமான புத்தகங்களையும் படிக்கலாம். அதுபோல் ஒவ்வொரு வாசகரும் ஒரு நூலகமாக இருக்க வேண்டும்.

புத்தக வாசிப்பு ஏன் அவசியம்? அது ஒருவருக்கு என்ன தரும் என்று நினைக்கிறீர்கள்?

நான் உலகில் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன்; ரஷ்யாவுக்கோ சோவியத் யூனியனுக்கோ சென்றதில்லை. ஆனால், அந்த மக்களின் வாழ்க்கை, அங்கே இருக்கும் சூழல் பற்றி எனக்கு நான் சென்ற நாடுகளைவிட ஓரளவு அதிகம் தெரியும். உதாரணமாக, நான் தென்னாப்பிரிக்கா சென்றிருக்கிறேன். ஆனாலும், அந்த மக்களின் வாழ்க்கை பற்றி எனக்கு தெரிந்ததைவிட ரஷ்யர்களின் வாழ்க்கை பற்றி அதிகம் தெரியும். இதற்கு காரணம் ரஷ்ய இலக்கியங்கள்தான். இதுபோல் தெரியாத பல விஷயங்களை அறிந்துகொள்வதற்கு, உலகத்துக்கான ஒரு ஜன்னலாக புத்தக வாசிப்பு உள்ளது. மேலும் நம்மை நாமே அறிந்துகொள்வதற்கும் நம் திறமைகளை அதிகப்படுத்தவும் வாசிப்பு உதவும்.

பாரதியார் உங்கள் மீது செலுத்திய பாதிப்புகள் பற்றி சொன்னீர்கள். இதுபோல் உங்களை பாதித்த படைப்பாளிகள் யார், யார்?

தி. ஜானகிராமன். அவர் படைப்புகளில் வருபவர்கள் நிஜமான மனிதர்கள்தானா என்ற வியப்பு அவரை படித்தபோது இருந்தது. ‘மோகமுள்’ படித்துவிட்டு நானும் பாலகுமாரனும் கும்பகோணத்தில் அந்த தெருவை தேடிப் போயிருக்கிறோம். தி.ஜா. சொல்லியிருக்கிற அடையாளங்களை மனதில் வைத்துக்கொண்டு, அளி போட்ட வீடுகளை எல்லாம், இதற்குள் யமுனா இருப்பாளா என பார்த்துக்கொண்டே சென்றோம்.

இதுபோல் ஜெயகாந்தனும் பெரிய தாக்கம் ஏற்படுத்தியவர். அதுவரை எனக்கு அறிமுகமாகியிருந்த சிறுகதை, கதை குறித்த பார்வையையே அவர் மாற்றினார். கதையில் தர்க்கத்துக்கு ஒரு இடம் உண்டு என கற்றுக்கொடுத்தவர் அவர்தான்.

ஆங்கில வாசிப்பில் சாமர்செட் மாம். அவர் ஒரு டாக்டர்; நான் மருத்துவ கல்லூரியில் படித்தேன். அது ஒரு தொடர்பை ஏற்படுத்தியது. அவரது ‘The Razor’s Edge’ எனக்குள் ஒரு பெரிய பாதிப்பை உண்டாக்கிய நாவல். அந்த தலைப்பு உபநிஷத்தில் இருந்து பெறப்பட்டது. ‘தேடல் என்பது கத்தியின் மீது நடப்பதை போன்றது’ என்று  உபநிஷத்தில் ஒரு வரி இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டுதான் ‘Razor’s Edge’ என்று சாமர்செட்  மாம் வைத்தார். மேலும் இங்கே வந்து ரமண மகிரிஷியைப் பார்த்தார்; அவருடன் உரையாடினார். ரமண மகிரிஷியை சுவாமி கணேஷா என்றொரு பாத்திரமாக இந்த நாவலிலும் சித்தரித்துள்ளார். சாமர்செட் மாமும் இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார். இந்த நாவலின் முக்கிய பாத்திரமான லாரியுடன் பேசுகிறார்.

லாரி ஒரு போர் வீரன். உலக யுத்தத்தத்தில் கலந்துகொண்டவன். அவனது நண்பர் யுத்தத்தில் இறந்துபோனது அவனை பெரிதும் பாதிக்கிறது. இதுதான் வாழ்க்கையா, வாழ்வின் உண்மையான அர்த்தம் என்ன என்ற தேடலில் அவன் செல்கிறான். பல்வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு வேலைகள் செய்கிறான். கடைசியில் இந்தியாவுக்கு வருகிறான். ரமண மகிரிஷியை சந்திக்கிறான். இது தொடர்பாகத்தான் சாமர்செட் மாம் அவனுடன் நாவலில் உரையாடுகிறார்.

அப்புறம் ஆண்டன் செகாவ் எழுத்துகள் எனக்கு மனிதர்களின் மனங்களை, மனிதர்கள் எப்படி ஒரு கன நேரத்தில் பிறழ்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருந்தது.

அமெரிக்க எழுத்தாளர்களில் ஜேம்ஸ் பால்வின், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே எனக்கு மிகவும் பிடித்தவர்கள். நான் அமெரிக்காவில் படித்தபோது, ஹெமிங்வே வழக்கமாக ஐஸ்க்ரீம் சாப்பிட செல்லும் இடத்தை தேடிப் போய் பார்த்தேன்.

தொடர்ந்து பேசுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...