சங்ககிரி ராஜ்குமார் வெங்காயம் என்ற படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கி வெளியிட்டிருந்தார். அது பலரது கவனத்தையும் கவர்ந்தது. நடிகர் சத்யராஜ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது.
மீண்டும் ராஜ்குமார் எடுத்திருக்கும் படம்தான் பயாஸ்கோப். இதில் வெங்காயம் படம் எடுத்தபோது தனது குடும்பத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் தொகுத்து அதையே படமாக எடுத்திருக்கிறார். படத்திற்காக பணம் தயார்செய்தது, அதற்கு வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் விற்று பணமாக்கியது அந்த போராட்டத்தில் உறவினர்கள் உயிரிழந்தது. அதையும் மீறி படம் எடுத்தது என்று குடும்பத்தின் சம்பவங்களையே படமாக்கியிருக்கிறார். அதுவும் கிராமத்தில் இருக்கும் தனது உறவினர்களையே நடிக்க வைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வயதான பெண்கள் தங்கள் பாணியில் வசனம் பேசியிருப்பதும், தங்களுக்கு புரியும் வகையில் பெயர் வைத்துக்கொண்டு படப்பிடிப்பு தளங்களில் வலம் வருவதும் நகைச்சுவையாக இருக்கிறது. இயல்பான சம்பவங்களும், வசன உச்சரிப்புகளும் சலிப்பு இல்லாமல் பார்க்க வைக்கிறது.
பெரிய பட்ஜெட் பிரமாண்டமான துறை என்கிற சின்மாவை போகிற போக்கில் தன் கட்டுப்பாட்டில் வைத்து எடுத்திருப்பது ராஜ்குமாரின் நம்பிக்கையை காட்டுகிறது. அந்த நம்பிக்கை படம் பார்க்கும் நம்மிடமும் ஏற்படுத்தியிருப்பதுதான் படத்தின் வெற்றி.
ராஜ்குமார்,வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, மோகனபிரியா, தங்கராசு, தர்மசெல்வன், குவாரி ஒனர்-நமச்சிவாயம், ராஜேஷ்கிருஷ்ணன், ரஞ்சித், நிலா என்று படம் முழுவதிலும் கிராமத்து முகங்கள் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நடிகர் சத்யராஜ் ஒரு பாடலுக்கு வந்து படத்திற்கு கைகொடுத்திருக்கிறார்.
படம் எடுக்கும் போது ஜோசியக்காரர் எப்படி எதிரியாக மாறி ஹிரோவுக்கு வில்லனாகிறார். என்பதை சொல்வதிலும் நாத்திக உணர்வை காட்டியிருப்பது கவனிக்க வைக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சி கலங்க வைத்து விடுகிறது. படம் நெடுகிலும் ஆங்காங்கே கைதட்ட வைக்கிறார் ராஜ்குமார்.
பலருக்கும் கனவாக இருக்கும் சினிமாவை எப்படி எளிதாக கையாண்டு எல்லோரும் படம் எடுக்கலாம் என்று சொல்வதன் மூலமாக சினிமாவையும் சோசலிஷமாக்கியிருக்கிறார். முரளி கணேஷ் ஒளிப்பதிவு இசை தாஜ்நூர் தேவைக்கேற்ப இசைக்க வைத்திருப்பதே சிறப்பு.