அரசியல் ஆசை இருக்கும் அத்தனை நடிகர்களும் தாங்கள் நடிக்கும் படங்களில் அதற்கான ட்ரெய்லரை காட்டுவது எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே இருக்கிறது. அதன் பின் பல நடிகர்கள் அதை முயற்சித்து விட்டார்கள். விஜய் கடந்த சில படங்களாக இந்த முயற்சியில் இருக்கிறார். அந்தப் படங்களை ஏற்கனவே முடிந்த அளவுக்கு அலசி ஆராய்ந்து விட்டதால், இப்போது ரிலீசாகியிருக்கும் பீஸ்ட்டுக்கு வருவோம்….
தமிழ்நாட்டில் அழியாத ஒரு பிரச்சனையாக கருதப்படுவது இந்தி மொழித் திணிப்பு. இந்திதான் தேசிய மொழி என்று மத்தியிலிருந்து காலங்காலமாக அழுத்தம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் பீஸ்ட் படத்தில் விஜய்யும் இந்தியை காட்டமாக தொட்டிருக்கிறார். மிக சமீபத்தில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திக்கு எதிர்ப்பு சொல்லும் விதமாக சில சைலண்ட் செயல்களை செய்தார்.
இதையே விஜய்யும் பீஸ்ட்டில் வசனமாக வெளிப்படையாக செய்திருக்கிறார்.
”ஒவ்வொரு தடவையும் உனக்காக இந்தில ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டு இருக்க முடியாது… உனக்கு வேணும்னா போய் தமிழ் கத்துகிட்டு வா…” என்று ஒரு வசனத்தை பேசுகிறார். அந்த வசனம் சொல்லும் அரசியல் அனைவருக்கும் புரிவதால் அரங்கம் கைத்தட்டல்களால் அதிருகிறது.
தனது அரசியல் ஆசையையும் மறைமுகமாக தெரிவித்திருக்கிறார். அரசியலுக்கு வந்தால் மக்கள் ஆதரவு இருக்குமா என்பது குறித்து அவருக்கு லேசான சந்தேகம் இருக்கும் போல். ஒரு காட்சியில் ”உங்கள நம்பிதான் இதுல எறங்குறேன்… ஏமாத்த மாட்டீங்கன்னு தெரியும்.. இருந்தாலும் சொல்றேன்…” என்று டயலாக் ஒன்றை தூவியிருக்கிறார் விஜய். அந்தத் தூவலில் உள்ள அரசியல் நெடி ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. மீண்டும் அரங்கில் கைத் தட்டல்.
விஜய்யின் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இந்தப் படத்தில் விஜய் அரசியல் பஞ்ச்களை அதிகம் பேசவில்லை. அரசியலுக்கு காலமிருக்கிறது என்று விஜய் கருதுகிறார் என்பது தெரிகிறது.
வழக்கமாய் விஜய் படங்களுக்கு பாஜகவினரிடமிருந்து விமர்சனங்கள் வரும். பீஸ்ட் படத்துக்கு இதுவரை பாஜகவினரிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. படத்தை விமர்சித்தால் அது விளம்பரமாக மாறி படத்தை மேலும் ஹிட்டடிக்க வைக்கிறது என்ற முன் அனுபவங்களினால் பாஜகவினர் அமைதி காக்கிறார்கள் போல.