’இந்தி தெரியாது போடா’ என்பதற்கு பதிலாக அந்த மொழியைக் கற்றுக்கொள்வது பல வகைகளிலும் உதவியாக இருக்கும். இந்தி தெரியாததால் என்னை 15 ஆண்டுகள் ஒதுக்கினார்கள் என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 744 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் ‘ஐ ஹேவ் தி ஸ்டிரீட்ஸ் – எ குட்டி கிரிக்கெட் ஸ்டோரி’ ( I Have the Streets – A Kutti Cricket Story) என்ற பெயரில் தன் கிரிக்கெட் அனுபவங்கள் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் தொடர்பாக அளித்துள்ள ஒரு பேட்டியில் இந்தி படிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அஸ்வின் கூறியிருப்பதாவது:
சிறுவயதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்காக எங்கள் அணியுடன் திருநெல்வேலிக்கு சென்றிருந்தேன். இருட்டு என்றால் எனக்கு பயம். தனித்தனி அறைகளில் படுப்பதற்கு பயந்து, அணி வீர்ர்கள் அனைவரும் ஒரே அறையில் படுத்திருந்தோம். அப்போது ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை கதைகளை சொல்லிக்கொண்டு இருந்தோம். அந்த காலகட்ட்த்தில் எனக்கு இந்தி தெரியாது. எனக்குத் தெரிந்த அதிகபட்ச இந்தி வார்த்தை, பாக்யராஜ் படத்தில் வரும் ‘ரகு தாத்தா’தான்.
அந்த அறையில் இருந்த ஒருவர் சச்சின் டெண்டுல்கரைப் பற்றிய ஒரு சம்பவத்தை உணர்ச்சிபூர்வமாக இந்தியில் சொல்லிக்கொண்டு இருந்தார். சிறுவயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இம்ரான் கான் வீசிய பந்து சச்சினின் மூக்கில் பட்டு ரத்தம் வழிந்த்து. மைதானத்தில் ரத்தம் வழிய நின்ற சச்சினிடம் ஸ்ரீகாஅந்த், சித்து உள்ளிட்ட மற்ற வீர்ர்கள் மைதானத்தை விட்டு வெளியேறுமாறு சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சச்சின் டெண்டுல்கர் அதைக் கேட்கவில்லை. தைரியமாக ‘மே கேலுங்கா’ (நான் ஆடுவேன்) என்று சொல்லி உறுதியாக நின்றார் ன்று அறையில் தங்கியிருந்த ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு சொல்லிக்கொண்டு இருந்தார்.
எனக்கு அவர் சொன்னது எதுவும் புரியவில்லை. அவரியம் போய் ‘மேகேலுங்கா’ என்றால் அது என்ன மெக்டொனால்ட் போல் பர்கரா என்று கேட்டேன். நான் அவரை கிண்டல் அடிப்பதற்காக அப்படி கேட்கவில்லை. ஆனால் அவர்கள் நான் கிண்டல் செய்வதாக அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள். ஸ்ரீகாந்த்தின் மகன் அனிரூத்தான் அப்போது எனக்கு துணையாக இருந்தார்.
இந்தியாவுக்கான 17 வயதுக்கு உட்பட்ட வீர்ர்களுக்கான கேம்புக்கு சென்றபோதும், இந்தி தெரியாததால் எனக்கு பிரச்சினை ஏற்பட்டது. அங்கிருந்த எல்லோருக்கும் இந்தி தெரியும். ஆனால் எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். அதனால் மற்ற மாநிலத்தை சேர்ந்த வீர்ர்கள் என்னை ‘ஐன்ஸ்டீன்’ போல பார்த்து ஒதுக்கினார்கள். நம்மூரில் அதிகம் ஆங்கிலத்தில் பேசுபவர்களை பீட்டர் என்று கூறி ஒதுக்குவதுபோல் என்னை ஒதுக்கினார்கள். என்னை அவர்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. இந்தி தெரியாத்தால்தான் அவர்கள் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை என்று தெரியவே எனக்கு 15 ஆண்டுகள் ஆனது.
மற்றவர்களுக்கும் என்னைப் போன்ற நிலை வரக்கூடாது. அவர்கள் இந்தி படிக்க வேண்டும் என்பதர்காகத்தான் இந்தியின் அவசியத்தைப் பற்றி இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.
இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.