மாணவர்களின் இரண்டாம் பெற்றோராக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். இதனால், ஆசிரியர்களை மாணவர்கள் மட்டுமல்லாமல் மொத்த சமூகமும் பக்தி, மரியாதையுடன் பார்த்த ஒரு காலம் இருந்தது. இன்று ஆசிரியர்கள் தினம். ஆசிரியர்களின் இன்றைய நிலை என்ன? ‘அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்’ ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரியிடம் கேட்டோம்.
“ஆசிரியர்கள் பற்றி நிறைய தவறான கற்பிதங்கள் சமூகத்தில் உள்ளது. அதில் ஒன்று, ஆசிரியர்கள் அதிகம் ஊதியம் வாங்குகிறார்கள் என்ற எண்ணம். இது சமூக ஊடகம் மூலம் உருவாக்கப்பட்டதுதான். ஆனால், உண்மை நிலை என்ன? ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை தொட ஒரு ஆசிரியர் 20 வருடங்களை கடந்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குறைவாகத்தான் வாங்குகிறார்கள். இந்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் அதிகம் ஊதியம் வாங்குவதாக சொல்பவர்கள் விலைவாசி, வீட்டு வாடகை போன்ற இன்றை விலைவாசி ஏற்றத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் என்று பேசுவதற்கு பதிலாக குறைவாக சம்பளம் பெறும் மற்ற துறை பணியாளர்களுக்கும், குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நிறைவான சம்பளம் கொடுக்க குரல் கொடுக்க வேண்டும்.
இன்னொரு தவறான கற்பிதம்… ஒரு காலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு இருந்த பக்தி, மரியாதை, பயம் இப்போது இல்லை; ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலமும் தற்போது மாறிவிட்டது. அதற்கு மாறாக மாணவ-மாணவிகளைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சும் நிலைதான் உள்ளது என்பது போன்ற ஒரு பிம்பம் தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆங்காங்கே நடைபெற்ற ஒன்றிரண்டு சம்பவங்களை பூதாகரமாக்கி இந்த எண்ணத்தை உருவாக்கி உள்ளார்கள். ஆனால், உண்மையில் கள நிலவரம் அப்படி இல்லை.
எப்போதும்போல் மாணவர்கள் குழந்தை மனநிலையுடன்தான் உள்ளார்கள். “நாங்க தப்பு செய்தோம்; அதனாலதான மிஸ் கோபப்பட்டீங்க. நாங்க நால்லா இருக்கணும்னுதான அப்படி செய்றீங்க” என அடுத்த நாள் அவ்வளவு இயல்பாக இருக்கிறார்கள். ஆசிரியர்களை எதிரியாக பார்ப்பதில்லை.
மாணவர்களை நேசிப்பதில் ஆசிரியர்களிடமும் ஆசிரியர்களை நேசிப்பதில் மாணவர்களிடமும் எந்த மாறுதலும் இல்லை. எக்காலமும் போல்தான் இக்காலமும் உள்ளது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. ஆசிரியர் பணி அல்லாத பணிகளால் ஏற்படும் சுமை, சமூக ஊடகங்களில் ஆசிரியர்கள் பற்றி பரப்பப்படும் அவதூறுகள் எல்லாம் பார்த்து ஆசிரியர்களிடையே ஒரு மனச் சோர்வு இருந்தது. எங்கள் மாணவர்கள் இன்று அதை போக்கிவிட்டார்கள்.