மைக்கேல் தங்கதுரை – கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள். ஆதரவற்ற கவிப்பிரியா காதலனை உயிராக நினைக்கிறாள். காதலனின் தொழில் தொடங்க 6 மாதங்களுக்கு மட்டும் ஒரு வீட்டில் வேலைக்கு சேருகிறாள். அது ஒரு மலை பகுதியில் தனிமையில் இருக்கும் அந்த வீட்டில் வயதான நிலையில் கவனிப்பார் இல்லாமல் ஸ்ரீரஞ்சனி வசித்து வருகிறார். அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவே கவிப்பிரியா செல்கிறார். ஆனால் அங்கு சென்ற பிறகுதான் அந்த வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன. அதன் பிறகுதான் காதலன் மைக்கேலை பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகளை தெரிந்து கொள்கிறார்.
வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த ஒரு முனிவர் ஒருவர் தன்னுடைய சிஷ்யன் ஒருவருக்கு எப்போதும் இளமையாக இருக்கும் ஒரு ரகசியத்தை சொல்லிவிட்டு செல்கிறார். அவர் சொன்ன ரகசியத்தின்படி தன்னை இளமையாக வைத்திருக்கும் வரலாற்றுக்கால மனிதர்தான் என்பதை தெரிந்து திகைக்கிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண் கே.ஆர்.
மைக்கேல் தங்கதுரை கதாபாத்திரத்திற்கு ஏற்றவகையில் இருக்கிறார். இயல்பாக நடித்திருக்கிறார். அமானுஷ்ய காட்சிகளிலும் கலைராணியிடம் காட்டும் வில்லத்தனத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். கவிப்பிரியா வெகுளித்தனத்தை காட்டும் முகம். வயதாகி முகம் மாறும் போது காட்டும் அதிர்ச்சியும் நம்மையும் தாக்குகிறது.
கலைராணி, ஸ்ரீ ரஞ்சனி இருவரும் மிக சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். பார்வையாளர்களை பயமுறுத்தும் விதத்தில் நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். காதலனால் ஏமாற்றப்பட்டு பல ஆண்டுகளாக அடிமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலைராணி தனது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்தை மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார். இவர்கள் தவிர சில முகங்கள் சில காட்சிகளில் எட்டிப்பார்த்து திரைக்கதையோட்டத்திற்கு உதவியிருக்கிறது.
இரண்டு கதாபாத்திரங்களின் தனிமையையும், நாயகியின் எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றத்தையும் தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர்கள் விவேக் – ஜெஷ்வந்த், பாடலில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தொகுப்பாளர் சாய் தக்ஷா, வித்தியாசமான கதைக்களம் மற்றும் அதில் இருக்கும் திருப்பங்களை தொகுத்த விதம் படத்தை விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைக்கிறது. கலை இயக்குநர் காகி ஜெயசீலனின் இளமையை கொண்டுவரும் அந்த வேர் அழகான வடிவமைப்பு.
திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம். வித்தியாசமான கதைக்களத்தை கண்டுபிடித்த இயக்குனர் அதை சொல்லும் விதத்தில் பலவீனப்பட்டிருக்கிறார்.