“உதயநிதி அமைச்சராவாரா இல்லையாங்கிற கேள்விக்கு ஒருவழியா விடை கிடைச்சாச்சு. ஆனா எதை நினைச்சு இதை ஸ்டாலின் தள்ளிப் போட்டுட்டு வந்தாரோ அது நடக்குது” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“நீ எதைப்பத்தி சொல்றே?”
“உதயநிதிக்கு பதவி கொடுத்தா மத்த மூத்த அமைச்சர்களும் தங்களோட வாரிசுகளுக்கு பதவி கெட்டுட்டு வருவாங்கன்னு ஸ்டாலின் எதிர்பார்த்தாரு. அதனாலதான் உதயநிதிக்கு பதவி கொடுக்கறதை தள்ளிப் போட்டுட்டே வந்தாரு. ஆனா துர்க்கா ஸ்டாலினோட பிடிவாதத்தால அவருக்கு பதவி கொடுக்க வேண்டியதா போச்சு. இப்ப, ஸ்டாலின் எதிர்பார்த்த மாதிரியே மூத்த தலைவர்கள் பலரும் தங்களோட வாரிசுகளுக்கு பதவியைக் கேட்டுட்டு இருக்காங்க.”
“அப்படி யாரெல்லாம் வாரிசுகளுக்காக வராங்க?”
“உதயநிதியோட சேர்த்து தன் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கணும்கிறது டி.ஆர்.பாலுவோட எதிர்பார்ப்பா இருந்தது. அனா அமைச்சரவையில 34 பேருக்கு மேல இருக்க முடியாதுங்கிறதால அது நடக்கல. அதனால டி.ஆர்.பாலு வருத்தத்துல இருக்காரு. இன்னொரு பக்கம் அமைச்சர் நேரு தன்னோட மகனை வளர்த்து விட்டுட்டு இருக்காரு. எப்பவும் இல்லாதபடி இந்த வருஷம் அவர் மகனோட பிறந்தநாள் ரொம்ப சிறப்பா கொண்டாடப்பட்டிருக்கு. இந்த நாடாளுமன்ற தேர்தல்ல மகனை எப்படியாவது பெரம்பலூர் தொகுதியில நிக்க வைக்கணும்கிறதுல அவர் உறுதியா இருக்காரு. இன்னொரு பக்கம் எ.வ.வேலுவும் தன்னோட மகனுக்கு ஏதாவது முக்கிய பதவி வேணும்னு மோதிட்டு இருக்காரு. இதையெல்லாம் ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போறாருன்னு தெரியலை.”
“நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜக தனித்து போட்டியிடும்னு கட்சிக் கூட்டத்துல அண்ணாமலை சொன்னதா செய்தி வருதே?”
“ஆமா. கமலாலயத்துல நடந்த ஆலோசனைக் கூட்டத்துலதான் அப்படி பேசியிருக்காரு. வரப் போற நாடாளுமன்ற தேர்தல்ல பாஜக கிட்ட 18 தொகுதிகளை அதிமுக கொடுத்திடணும். அதை வைச்சு தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் அணி ஆகியவற்றுக்கு பாஜக தொகுதிகளை பகிர்ந்து கொடுக்கும்னு அண்ணாமலை கேட்டிருக்காரு. ஆனா இதுக்கு எடப்பாடி சம்மதிக்கலை. தினகரனுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் தங்கள் கூட்டணியில இடம் கொடுக்கறதை எடப்பாடி ரசிக்கலை. எடப்பாடியோட இந்த பதிலாலத்தான் இப்படி பேசியிருக்கார். ஆனா கட்சியிலேயே இதற்கு ஆதரவு இல்லை. தனியா நின்னா ஒரு இடத்துல கூட ஜெயிக்க முடியாதுனு முணுமுணுக்கிறாங்க”
“அதை அண்ணாமலைகிட்ட சொல்லலையா?”
“நேரடியா சொல்லல. அண்ணாமலை அவ்வளவு நம்பிக்கையா பேசுனாராம். திமுக பலவீனமா இருக்கு, அதிமுகவும் பலவீனமா இருக்கு. நம்ம தலைமைல கூட்டணி அமைச்சா ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பிருக்குனு புள்ளிவிவரத்தோட பேசியிருக்கிறாரு. அப்படி கூட்டணிக்கு யாரும் வரலனா கூட பரவாயில்லை, உள்ளாட்சித் தேர்தல்ல தனியா நின்னா மாதிரி நின்னு ஜெயிச்சுக் காட்டுவோம்னு பேசியிருக்கிறார்”
“அண்ணாமலை பேச்சுக்கு டெல்லி தலைவர்கள் என்ன சொல்றாங்க?”
“டெல்லியில இதுக்கான ஒப்புதலை வாங்கி இருக்கறதாவும் அவர் சொல்றார். அவர் டெல்லிக்குப் போய்ட்டு வந்தப் பிறகுதான் இப்படி பேசியிருக்கிறார். காந்திகிராமம் பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் வந்தபோது மதுரைக்கு பிரதமரோட காரில் பயணம் செய்யும்போது இந்த யோசனையை அவர்கிட்ட அண்ணாமலை சொன்னாராம். ‘இதுதான் நம்ம கட்சியை வளர்க்க சரியான தருணம். வெற்றி தோல்வியைத் தாண்டி நாம் இந்த முடிவை எடுக்கணும்’ன்னு பிரதமர் கிட்ட சொல்லி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறதா சொல்றாங்க. அதன்பிறகு டெல்லியில் அமித்ஷா, நட்டா இருவரையும் சந்தித்து அவர்களிடமும் பேசி சம்மதம் வாங்கிட்டாராம். தமிழ்நாட்டில் தங்கள் கட்சியின் பலத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்காலத்தில் வியூகம் அமைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்க டெல்லி தலைமை சம்மதம் தெரிவிச்சிருக்கலாம்னு தமிழக பாஜக பிரமுகர்கள் சொல்றாங்க.”
”தமிழ்நாட்டுல பாஜக அந்த அளவு வளர்ந்திருச்சா?”
“இல்லை. பிரச்சினைகள் நிறைய இருக்கு. பல மாவட்ட தலைவர்கள் இன்னும் சரியான பூத் கமிட்டி அமைக்க முடியாமல் திணறுகிறார்கள். மாவட்டத் தலைவர்கள் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. டெல்லியில் நாம் ஆளும் கட்சி. அதை வைத்து மத்தியில் ஏதாவது காரியம் சாதித்துக் கொண்டு பணம் பார்ப்போம் என்ற அளவில்தான் அவர்கள் ஈடுபாடு இருக்கிறது. பூத் கமிட்டி போடுறதுக்கே அதிமுகவைதான் நம்பியிருக்கிற சூழல்தான் இன்னும் இருக்குனு மாவட்டக் கட்சிக்காரங்க சொல்றாங்க.”
“இந்த சூழல் அண்ணாமலைக்கு தெரியாதா?”
“தெரியும். ஆனா, தன் முடிவில இப்போதைக்கு அவர் தீவிராமா இருக்காரு. பாஜக கேட்டபடி அதிமுக 18 தொகுதிகளைக் கொடுக்காட்டி தனிச்சு போட்டிங்கிறதுல உறுதியா இருக்கார். அதேபோல வரப்போற தேர்தல்ல பாஜகவோட முதல் எதிரி திமுகதாங்கிறதுலயும் அவர் உறுதியா இருக்கார். அதனால் திமுகவினரோட யாரும் தொடர்பு வச்சுக்க வேண்டாம். உறவினர்களாக இருந்தால்கூட அவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யக் கூடாது. திமுக உறுப்பினர்களின் வீட்டு விசேஷங்களில் பங்குபெறக் கூடாதுன்னு எச்சரிக்கை செஞ்சிருக்காராம். அப்படி யாராவது பங்கு பெற்றது தெரிஞ்சா அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்னும் சொல்லி இருக்காரு. இது கிட்டத்தட்ட ஜெயலலிதா கடைப்பிடிச்ச ஃபார்முலாதான்.”
“அப்ப அண்ணாமலை ஜெயலலிதா ரூட் எடுக்கிறாரோ?”
“பாஜகவில் மொத்தம் 26 அணிகள் இருக்கு. மாநில அளவில் தலைவர், துணைத் தலைவர்னு பல பொறுப்புகள் இருக்கு. மாநில அளவில் 700-க்கும் அதிகமானவர்கள் நியமிக்கபட்டு இருக்காங்க. அதில் பாதி பேர் மாற்றுக் கட்சியினர். அண்ணாமலை தற்சமயம் மாநில மாவட்ட அளவில் சில மாற்றங்களை ஏற்படுத்த விரும்பறார். புதிதாக மாநில மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து வருகிறார். இதற்கு டெல்லி தலைமை ஒப்புதல் தந்தால் அந்த அதிரடி மாற்றம் நடக்குமாம்.”
“குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுல ஓபிஎஸ் கலந்துக்கிட்டாரே?”
“இந்த விழாவுல கலந்துக்க ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் பாஜக அழைப்பு அனுப்பி இருந்தது. எடப்பாடி வாழ்த்து சொல்லிவிட்டு, நான் கொஞ்சம் பிசி. அதனால வரமுடியாதுன்னு ஒதுங்கிட்டார். ஓபிஎஸ் தனது மகனுடன் பதவி ஏற்பு விழாக்கு போனார்.அவருக்கு நட்டா வணக்கம் சொன்னார். பிரதமர் ஹாய் சொல்லிட்டு நகர்ந்துட்டார். அமித் ஷாவோட ஓட்டல்ல கொஞ்ச நேரம் பேசி இருக்கார் ஓபிஎஸ். ஆனால் இதனால ஓபிஎஸ்ஸுக்கு சாதகமா பாஜக நடக்குமான்னு சொல்ல முடியாது. அதே நேரத்துல ஓபிஎஸ் பாஜகவில் சேரப் போறார்னு ஒரு வதந்தி பரவி இருக்கு. இது பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் கேட்க, ஆம். இல்லைன்னு எதுவும் சொல்லாமல் புன்னகையை மட்டும் பதிலாகச் சொல்லியிருக்கார் ஓபிஎஸ்.”
“சில தமிழ்நாட்டு அமைச்சர்கள் முதல்வர்கிட்ட புலம்பியிருக்காங்கனு செய்தி வந்திருக்கே?”
“ஆமா, சில அமைச்சர்கள் முதல்வரை சந்தித்து பேசியிருக்காங்க. அவங்க துறையில இருக்கிற பிரச்சினைகளை சொல்லியிருக்காங்க. அவங்களையெல்லாம் கூல் பண்ணி அனுப்பியிருக்கிறார் முதல்வர். மூத்த அமைச்சர்கள் இனிமேல் முக்கிய முடிவு எடுப்பதற்கு முன் முதல்வர் அலுவலகத்தை கலந்த ஆலோசிக்க தேவையில்லை. அவர்களே முடிவு எடுக்கலாம்னு முதல்வர் பச்சைக் கொடி காட்டி இருக்காராம். இதனால மூத்த அமைச்சர்கள் மகிழ்ச்சியா இருக்காங்க. இந்த பச்சைக்கொடி மூத்த அமைச்சர்களுக்கு மட்டும்தான் ஜூனியர் அமைச்சர்கள் எப்போதும்போல் முதல்வர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்றுத்தான் முக்கிய முடிவுகளை எடுக்கணு கராறா சொல்லி இருக்காங்க.”
“இதுல உதயநிதி சீனியர் அமைச்சரா… ஜூனியர் அமைச்சரா?”
“இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் வரலை” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.