பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோகிராம் பிரிவு மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் இந்தியாவின் அமன் ஷெராவத். வெண்கலத்துக்கான போட்டியில் பியூர்டோ ரிகோ வீரரான டேரியன் டாய் க்ரூஸை 13 – 5 என்ற புள்ளிக்கணக்கில் அமன் வென்றிருக்கிறார்.
இந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், மிகக் குறைந்த வயதில் (21 வயது 24 நாட்கள்) ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அமன் ஷெராவத் படைத்துள்ளார்.
யார் இந்த அமன் ஷெராவத்?
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பீரோஹர் என்ற ஊரில் 2003-ம் ஆண்டு பிறந்தவர் அமன் ஷெராவத். 11 வயதிலேயே பெற்றோரை இழந்த அவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். பெற்றோர் இல்லாத கவலையைத் தீர்க்க, அமனின் கவனத்தை மல்யுத்தம் பக்கம் திருப்பியுள்ளார் அவரது தாத்தா மங்கேராம் ஷெராவத்.
ஒலிம்பிக் நாயகன் சுஷில்குமாரால் ஈர்க்கப்பட்ட அமன், அவர் மீதான ஆர்வத்தால் மல்யுத்தத்தில் ஆசை கொண்டார். பின்னர் ரவிகுமார் தஹியாவை கண்டு அவரை போலவே மாற ஆசைப்பட்டு மல்யுத்தத்தில் பயிற்சி பெற்றார். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்த அமன் ஷெராவத், ஒரு கட்டத்தில் தனது கனவு நாயகனான ரவி தஹியாவையே வீழ்த்தினார். 2022-ல் 23 வயதுக்கு உட்பட்ட வீர்ர்களுக்கான போட்டியிலும், 2023-ல் ஆசிய மல்யுத்த போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றார். இப்போது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
எடையால் வந்த தடை
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தைப் பெற, வினேஷ் போகட்டைப் போலவே இவருக்கும் எடை ஒரு தடையாக இருந்துள்ளது. நேற்று முன்தினம் காலை 57 கிலோவாக இருந்துள்ள அமன் ஷேராவத்தின் எடை, அன்று இரவுக்குள் 4.6 கிலோ அதிகரித்து 61.6 கிலோவாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த நாள் காலை இவரும் கூடுதல் எடையால் தகுதி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இரவு முழுக்க கடுமையான பயிற்சிகளை செய்துள்ளார் அமன் ஷெராவத். மூத்த பயிற்சியாளர்கள் இருவருடன் தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் மல்யுத்தம் செய்தும், ஒரு மணிநேரம் வெந்நீரில் குளித்தும், ஒரு மணிநேரம் ட்ரெட்மில்லில் ஓடியும் தனது எடையைக் குறைக்க கடுமையாக போராடி இருக்கிறார் அமன் ஷெராவத். ஒவ்வொரு பயிற்சிக்கு இடையிலும் சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே அவர் ஓய்வெடுத்து உள்ளார்.
அப்படி கடும் பயிற்சி செய்தும் அவரது எடை 3.6 கிலோ மட்டுமே குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அமனுக்கு பயிற்சியாளர்கள் மசாஜ் செய்துள்ளனர். பின்னர் அவரை 15 நிமிடங்களுக்கு வேகமாக ஓட விட்டுள்ளனர். இந்த கடும் பயிற்சிகளின் விளைவாக அவரது எடை ஒரு கிலோவுக்கு மேல் குறைந்துள்ளது. ஒலிம்பிக் அமைப்பாளர்கள் நேற்று காலை பார்க்கும்போது அவரது எடை 56.9 கிலோவாக இருந்துள்ளதுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட 57 கிலோ எடையைவிட 100 கிராம் குறைவு என்பதால் நிம்மதியாக மூச்சு விட்டுள்ளார் அமன் ஷெராவத். அதன் பிறகே அவர் போட்டியில் பங்கேற்றுள்ளார்.