இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். 210 ரன்களை அடித்தும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுப் போனதே இதற்கு காரணம். இந்த ஐபிஎல் தொடர் தொடங்கிய நாள் முதலாக புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் இருந்த சிஎஸ்கே அணி, இந்த தோல்வியால் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் புள்ளிப் பட்டியலைப் பொறுத்தவரை முதல் 4 இடங்களுக்குள் இருக்கும் அணிகள்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். அதன்படி பார்த்தால் இப்போதைக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை. இதே நிலை தொடருமா? இல்லை சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதுதான் சிஎஸ்கே ரசிகர்களின் மனதில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.
தேவை 4 வெற்றிகள்:
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஒரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் குறைந்தது 16 புள்ளிகளைப் பெறவேண்டும். ஒரு சில வினோதமான சூழ்நிலையில், அனைத்து அணிகளும் வெற்றிக்கு தடுமாறினால் 14 புள்ளிகளைப் பெறும் அணிகூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். ஆனால் அதற்கு நெட் ரன் ரேட் அதிகமாக இருக்க வேண்டும். 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால், மற்ற அணிகள் ஆடும் ஆட்டங்களின் முடிவுகள் நாம் நினைத்ததுபோல் இருக்க வேண்டும்.
ஆனால் அந்த டென்ஷன் எல்லாம் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமானால் சிஎஸ்கே அணி சிக்கலே இல்லாமல் 16 புள்ளிகளை எடுக்க வேண்டும். அதற்கு இனி தாங்கள் ஆடவுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும்.
சிஎஸ்கேவின் அடுத்த போட்டிகள்:
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன. இதில் பஞ்சாப் அணியுடன் 2 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு எதிராக தலா 1 போட்டியிலும் சிஎஸ்கே ஆடவேண்டி உள்ளது.
யாரை டார்கெட் செய்யலாம்?
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் வலுவான நிலையில் உள்ளன. அந்த அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெல்வது கொஞ்சம் கஷ்டம். அதே நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் வலு குறைந்துள்ளன.
அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளைப் பற்றி கவலைப்படுவதை விட்டு, வலு குறைந்த நிலையில் உள்ள அணிகளுடன் மோதும் 4 போட்டிகளிலும் முழு பலத்துடன் மோதி வெற்றி பெறுவதில் சிஎஸ்கே அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ள பஞ்சாப்புக்கு எதிரான 2 போட்டிகளிலும், கடைசி இடத்தில் உள்ள ஆர்சிபி அணிக்கு எதிராகவும் சிஎஸ்கே வீர்ர்கள் ஓங்கி அடிக்க வேண்டும்.
செய்ய வேண்டிய மாற்றங்கள்:
அணிக்கு வெற்றி தேவைப்படும் பட்சத்தில் அதற்கு தேவையான சில மாற்றங்களையும் சிஎஸ்கே செய்ய வேண்டும். சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பலவீனமாக தொடக்க ஜோடி உள்ளது. இந்த ஐபிஎல்லில் பல போட்டிகளில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க சிஎஸ்கேவால் முடியவில்லை. தொடக்க வீர்ர்களில் யாராவது ஒருவர் அவுட் ஆவதும், அதனால் அடுத்த பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழுவதை தடுக்க நிதானமாக ஆடுவதும் இந்த தொடரில் வழக்கமாகி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக மொயின் அலி
இதனால் சிஎஸ்கே அணியில் உள்ள அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான மொயின் அலியை சில போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கிப் பார்க்கலாம். அதிரடி ஆட்டக்காரரான மொயின் அலி, இங்கிலாந்து அணிக்காக சில போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இருக்கிறார். அந்த அணிக்காக 21 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மொயின் அலி எடுத்த மொத்த ரன்கள் 658. அவரது சராசரி ரன்கள் 31.33. அவரது அனுபவம் சிஎஸ்கே அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். மேலும், பந்தை தூக்கி அடித்து ஆடும் அவரது ஸ்டைல் பவர் ப்ளேவில் அணிக்கு கைகொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. மொயின் அலியே ஒரு பேட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது தனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்று கூறியிருக்கிறார். அதனால் கேகேஆர் அணி எப்படி சுனில் நரைனை அதிரடி தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்துகிறதோ, அப்படி மொயின் அலியை சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்தலாம்.
5-வது பேட்ஸ்மேனாக தோனி:
இந்த ஐபிஎல்லில் கடைசி 2 ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்ய வருவது என்பதில் தோனி பிடிவாதமாக இருக்கிறார். அந்த 2 ஓவர்களில் அதிரடியாக ரன்களைக் குவிக்கும் தோனி, சிஎஸ்கே அணிக்காக தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும். 5-வது பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கி, குறைந்தது 5 ஓவர்களாவது பேட்டிங் செய்ய வேண்டும். துபே – தோனி கூட்டணி 4 ஓவர்கள் ஆடினால், அணியின் ஸ்கோர் நிச்சயம் ராக்கெட் வேகத்தில் உயரும்.
பதிரணாவை அதிகம் சார்ந்திருக்க கூடாது:
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை இப்போது பந்துவீச்சில் பதிரணாவையே அதிகம் சார்ந்திருக்கிறது. அவரது ஓவர்களை சமளித்துவிட்டால் மற்ற பந்துவீச்சாளர்களை எளிதில் சமாளித்துவிடலாம் என்ற மனநிலையில் எதிரணி வீர்ர்கள் இருக்கிறார்கள். இது மாறவேண்டும். கடந்த ஐபில்லில் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தீக்ஷணா. முஸ்தபிசுருக்கு பதிலாக அவரை அணியில் சேர்க்க வேண்டும். ராஜஸ்தான் அணிக்காக அஸ்வினும், சாஹலும் எப்படி பந்துவீசுகிறார்களோ, அதேபோல் சிஎஸ்கே அணி ஜடேஜா – தீக்ஷணா கூட்டணியை பயன்படுத்த வேண்டும் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், இந்த கூட்டணி நிச்சயம் கைகொடுக்கும்.
இந்த மாற்றங்களை கொண்டுவந்து பீல்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்லும். ரசிகர்களின் மனமும் குளிரும்.