ஒருவரின் சம்பளத்தை நிர்ணயிப்பது எது?
இந்த கேள்வியை யாரிடமாவது கேட்டால் ‘திறமை’ என்றுதான் பொதுவாக பலரும் பதிலளிப்பார்கள். ஆனால் இந்தியாவில் திறமைக்கு ஏற்ற சம்பளத்தை வழங்காமல் ஆண், பெண் பாகுபாட்டின்படியும், ஜாதி ஏற்றத்தாழ்வுகளின்படியும் சம்பளம் நிர்ணயிக்கப்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு தரப்பினருக்கும் வழங்கப்படும் சம்பளம் பற்றி ஆக்ஸ்பாம் இந்தியா (Oxfam India) என்ற தன்னார்வ அமைப்பு நடத்தியுள்ள ஆய்வின் முடிவுகள் The India Discrimination Report 2022 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் அளிக்கப்பட்டுள்ள சில தரவுகளைப் படித்தால் இந்தியாவில் பெண்களும், பின்தங்கிய ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
நகரங்களைப் பொறுத்தவரை ஓரளவாவது தொழிலாளியின் உழைப்பு, படிப்பு போன்ற விஷயங்களுக்கு ஏற்ற வகையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் ஒருவரின் சம்பளத்தை நிர்ணயிப்பதில் ஜாதி தொடங்கி பல்வேறு விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. உதாரணமாக விவசாயம் தொடர்பான வேலையில் ஈடுபடும் ஆணுக்கு ரூ.400 சம்பளமாக வழங்கப்பட, அதே வேலையில் ஈடுபடும் பெண்களுக்கு 300 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
சம்பளத்தில் மட்டும் இல்லாமல் வேறு விஷயங்களிலும் இந்த ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. உதாரணமாக ஆண்களுக்கு புகை பிடிக்கவும், டீ குடிக்கவும் நிறைய நேரம் வழங்கப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு அவ்வாறு நேரம் வழங்கப்படுவதில்லை. பெண்களைவிட ஆண்கள் வலிமையானவர்கள். அவர்களால் அதிக வேலையைச் செய்ய முடியும் என்று சம்பளம் வழங்குபவர்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம்.
ஆக்ஸ்பாம் இந்தியா அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ள சில ஊதிய வித்தியாசங்களைப் பார்ப்போம்…
சாதாரண கூலித் தொழிலில் ஈடுபடும் ஆண்கள், பெண்களைவிட 58 சதவீதம் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். இதன்படி ஆண்களுக்கு மாத வருமானமாக சராசரியாக 9,017 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அதேநேரத்தில் அதே வேலையில் ஈடுபடும் பெண்களுக்கு ரூ.5,709வரைதான் சம்பளமாக கிடைக்கிறது.
இந்த ஆய்வறிக்கையின் தலைமை எடிட்டரான அமிதாப் குண்டு இதுபற்றி பேசும்போது, “பெண் தொழிலாளர்கள் முதலாளிகளின் நிராகரிப்பு, ஆண் பெண் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, வீட்டில் “சமூக பாரபட்சத்தினாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” என்கிறார்.
இதற்கு உதாரணமாக, “ஆண்களைப் போல் பெண்களால் பல சமயம் தொடர்ச்சியாக வேலை செய்ய முடிவதில்லை. வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுபோன்ற நிர்ப்பந்தங்களால் அவர்கள் பாதியிலேயே வேலையை விட்டுவிட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்” என்கிறார்.
தலித் சமூகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நகரப்பகுதிகளில் மாதம் ரூ.15,312 வரை சம்பாதித்த நிலையில், அவர்கள் செய்யும் அதே வேலையைப் பார்க்கும் உயர் சாதி தொழிலாளர்கள் ரூ.20,346 வரை சம்பாதிக்கின்றனர்.