மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட் டுள்ளது. எனவே, சிறுத்தையை பிடிக்கும் வரை குழந்தைகளும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் நேற்று இரவு சிறுத்தை நடமாட்டத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சிறுத்தை நடமாட்டம் உள்ள இடத்தில் இருந்து கால் தட பதிவுகளை வைத்தும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலமும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து நகர் முழுவதும் காவல்துறையினர் ஒலிபெருக்கியின் மூலம், “மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட் டுள்ளது. எனவே, சிறுத்தையை பிடிக்கும் வரை குழந்தைகளும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும்” என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சிறுத்தை தென்பட்டால் தொடர்புகொள்ள செல்போன் எண்ணையும்(9626709017) வனத்துறையினர் வழங்கியுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி, மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 20க்கும் மேலான பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்க மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் பதுங்கியுள்ள சிறுத்தையை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வனத்துறையினர் கையில் வலைகளுடன் சிறுத்தையை தேடி வருகின்றனர். நேற்று இரவு சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடந்ததையும் வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே வனப் பகுதியோ மலைப் பகுதியோ இல்லாத நிலையில், சிறுத்தை எப்படி வந்தது என்றும் மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.