இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருதை மலையாளப் படமான ‘ஆட்டம்’ வென்றிருக்கிறது. ஆனந்த் ஏகர்ஷி இயக்கியுள்ள இப்படத்தில் வினய் ஃபோர்ட், கலாபவன் ஷோஜோன், ஜரின் ஷிலாப் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
12 ஆண்களையும் ஒரு பெண்ணையும் கொண்ட நாடக குழுவைச் சுற்றி இந்த படத்தின் கதை நகர்கிறது. இதில் நாடகக் குழுவில் இருக்கும் அஞ்சலியும் (ஜரின் ஷிஹாப்) அதே குழுவைச் சேர்ந்த வினய்யும் (வினய் ஃபோர்ட்) காதலர்கள். ஒரு நாள், இவர்களின் நாடகத்தை கண்டு ரசித்த வெளிநாட்டவர்கள், அவர்களுக்கு ஒரு ரிசார்ட்டில் விருந்து வைக்கிறார்கள். அந்த விருந்துக்கு பிறகு இரவு அவர்கள் அந்த ரிசார்ட்டில் தங்குகிறார்கள். அப்போது அந்த குழுவைச் சேர்ந்த ஒருவரால் அஞ்சலி பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறார். இதை தனது காதலனிடம் அவர் தெரிவிக்கிறார். அஞ்சலி ரகசியமாக தன்னிடம் சொன்ன விஷயத்தை பெரிய விஷயமாக மாற்றும் வினய், அதை நாடக குழுவினரிடம் எடுத்துச் செல்கிறார். இது தொடர்பாக குழுவில் உள்ள 12 ஆண் நடிகர்களுக்கும் இடையே நடக்கும் விவாதங்களும், அந்த விவாதத்துக்கு பிறகு பாதிக்கப்பட்ட அஞ்சலிக்கு நீதி கிடைத்ததா என்பதும்தான் படத்தின் கதை.
இந்த படத்தின் பெரும் பகுதி விவாதங்களிலேயே நகர்கிறது. 12 நாடகக் கலைஞர்களும் சேர்ந்து ஓரிடத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கும்போது, தங்களுக்குள் இருக்கும் போட்டி பொறாமைகளை வெளிப்படுத்தி விவாதத்தை தொடர்கிறார்கள். உதாரணமாக ஹரி என்ற நடிகர் நாயகனுக்கு போட்டியாக இருப்பதால், அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கலாம் என்பதுபோல் விவாதத்தை நகர்த்துகிறார். அதேபோல் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது பழியை திருப்பிவிட முயல்கிறார்கள். இப்படி சுயநலத்துடன் இந்த விவாதத்தை கொண்டு செல்கிறார்கள்.
ஒரு பெண் தன்னுடைய பாதிப்பைச் சொல்லும்போது, அப்பெண்ணின் கடந்த கால செயல்கள், அவரின் உடைகள், கருத்துகள் உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுவது இப்படத்தில் அப்பட்டமாக காட்டப்படுகிறது. பெண்ணைச் சுற்றி நின்றுகொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கான கோணங்களில் கேள்வி கேட்கும் காட்சியமைப்பு மொத்த சமூகத்தில் தன்னை நிரூபிப்பதற்கான பெண்ணின் போராட்டமாக விரிகிறது.
அதிக செலவு ஏதும் இல்லாமல் மிகக் குறைந்த லொகேஷன்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல நிமிடங்கள் நீளும் விவாத காட்சிகளைக் கொண்டதால் இப்படத்தைப் பார்க்க அதீதமான பொறுமையும் தேவைப்படுகிறது.