இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் யார் என்பதில் முகேஷ் அம்பானியுடன் போட்டி போடும் கவுதம் அதானிக்கு இன்று 60-வது பிறந்தநாள். அறப்பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாயை தானமாக வழங்கி யாராலும் இந்த பிறந்த நாளை மறக்க முடியாதபடி செய்திருக்கிறார் கவுதம் அதானி. இந்திய வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை கோடி ரூபாயை தானம் செய்வதாக அறிவித்த நபர் கவுதம் அதானிதான்.
யார் இந்த அதானி?… அம்பானியுடன் போட்டி போடும் அளவுக்கு அவர் எப்படி முன்னேறினார்? அவரது முன்னேற்றத்துக்கு அரசியல் எப்படி உதவியது? அவர் சந்தித்த பிரச்சினைகள் என்ன? இந்திய அரசியலில் அவரால் ஏற்பட்ட சர்ச்சைகள் என்ன? பார்ப்போம்.
பள்ளிக்காலத்தில் பலரும் சுற்றுலா சென்றிருப்போம். கல்விச் சுற்றுலா என்று அதற்கு பெயரிட்டாலும் பலருக்கும் அவை பொழுதுபோக்கு சுற்றுலாவாகத்தான் இருந்திருக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு குஜாராத்தின் காண்ட்லா துறைமுகத்துக்கு சுற்றுலா சென்ற ஒரு மாணவனுக்கு அது வெறும் பொழுதுபோக்கு சுற்றுலாவாக இல்லை. மாணவர்களுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது போன்ற விஷயங்களைக் கடந்து ஒரு மிகப்பெரிய தாக்கத்தை அந்த சுற்றுலா ஏற்படுத்தி இருந்தது.
துறைமுகத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்து நின்ற அந்தச் சிறுவன், எதிர்காலத்தில் தானும் அதுபோல ஒரு பிரம்மாண்டமான துறைமுகத்தை நிர்வகிக்க விரும்பினான். அந்த விருப்பமும், அதற்காக அவன் போட்ட உழைப்பும், இன்று இந்தியாவின் 13 துறைமுகங்களை நிர்வகிக்கும் ஆற்றலை அந்த முன்னாள் மாணவனுக்கு வழங்கியுள்ளது. அந்தச் சிறுவன்தான் கவுதம் அதானி.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்குப்படி இன்று இவரது சொத்து மதிப்பு 6.75 லட்சம் கோடி ரூபாய். அண்ணாமலை பட ரஜினிகாந்த்தைப் போல ஒரே பாடலில் பணக்காரர் ஆகவில்லை.
கவுதம் அதானியின் அப்பா ஒரு சாதாரண துணி வியாபாரி. கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத, ஆங்கிலம் சரியாக பேச வராத ஒரு சராசரி மனிதர்தான் அதானி. அப்படி இருந்தபோதிலும் தனது கடும் முயற்சியால் இத்தனை சொத்துகளையும் சேர்த்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1962-ம் ஆண்டில் பிறந்த அதானிக்கு சிறுவயதில் இருந்தே பிசினஸில் ஆர்வம் அதிகம். ஆனால், குடும்பத் தொழிலான துணி வியாபாரத்தில் அவருக்கு பெரிய ஆர்வமில்லை. அதையும் கடந்து மிகப்பெரிய தொழில் அதிபர் ஆகவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. இந்தச் சூழலில்தான் காண்ட்லா துறைமுகத்துக்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அதிலிருந்து அவரது பிசினஸ் விருப்பங்கள் விரிய, 1979-ம் ஆண்டின் தொடக்கத்தில், தனது 17 வயதில் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். ஆரம்ப கட்டத்தில் வைர வியாபார நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த அதானி, வெகு சீக்கிரத்திலேயே அதன் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.
வெறும் வேலையாளாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பதைப் புரிந்துகொண்ட அதானி, வேலைநேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் வைரங்களை வாங்கி விற்க உதவும் புரோக்கராகவும் மாறினார்.
இதன் மூலம் மிகக் குறுகிய காலத்தில், அதாவது மூன்றே ஆண்டுகளில் தனது வாழ்க்கையின் முதல் 10 லட்சம் ரூபாயை சம்பாதித்தார் அதானி. அதுதான் அவரது பிசினஸ் பயணத்தின் ஆரம்பப் புள்ளி.
1981-ல் மீண்டும் குஜராத்துக்குத் திரும்பிய அதானி, ஆரம்பக் கட்டத்தில் தனது சகோதரருடன் இணைந்து பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றை நடத்தினார். அவரது யானைப் பசிக்கு அது சோளப் பொரியாகவே இருந்தது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டால் இன்னும் வேகமாக வளரலாம் என்ற எண்ணம் மனதில் ஏற, அதற்காக 1985-ல் அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.
அப்போது அதானிக்கு 23 வயதுதான். ஆரம்பத்தில் கொஞ்சம் நொண்டியடித்தாலும் 1990-களில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம் நாலுகால் பாய்ச்சலில் பறந்தது.
இந்த வெற்றியும் அதானியை திருப்திப்படுத்தவில்லை. இளம் வயது கனவு துரத்தியது. துறைமுகத்தை கட்டுப்படுத்தும் ஆசை துளிர்விட்டது. இதைத்தொடர்ந்து 1995-ம் ஆண்டில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை ஏற்று நடத்தினார். 2000-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்கத் தொடங்கினார். 2001-ல் சமையல் எரிவாயு விநியோகத்தைத் தொடங்கினார். இப்படி நாளொரு தொழிலைத் தொடங்கி தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.
இன்றைய தினம் அதானி கைவசம் துறைமுகங்கள், மின்சார உற்பத்தி, மின் பகிர்மானம், ரியல் எஸ்டேட், விமான நிலையங்கள் என பல தொழில்கள் அபார வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.
அதானியின் இந்த அசுரவேக வளர்ச்சிக்கு பாஜகவுடனான அவரது அரசியல் தொடர்புகளும் முக்கிய காரணம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் எப்படி தங்கள் அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி வளர்ந்ததோ, அதேபோல் தற்போது தனது பாஜக தொடர்புகளை வைத்து வேகமாக வளர்ந்து வருகிறார் அதானி.
2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்றபோது குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு சாதாரண தொழிலதிபராகத்தான் அதானி இருந்தார். அதன் பிறகு நரேந்திர மோடி அரசியலில் வளர வளர, அதானியின் தொழில்களும் வளர்ந்தன. இன்று இந்திய துறைமுகங்களில் கையாளப்படும் சரக்குகளில் 25 சதவீத சரக்குகளை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கையாள்கிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் நிலக்கரி விற்பனை நிறுவனமாகவும் அதானி நிறுவனம் வளர்ந்து நிற்கிறது. அத்துடன் உலகின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமான நிலையத்திலும் 74 சதவீத பங்குகளை வைத்துள்ளார் அதானி.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதானியின் பிசினஸ் சாம்ராஜ்யம் பரந்து விரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள அதானியின் நிலக்கரிச் சுரங்கம், உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கங்களில் ஒன்றாக உள்ளது.
இப்படி வர்த்தகத்தில் ஏகபோகச் சக்ரவர்த்தியாக இருக்கும் அதானியைச் சுற்றி சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. பாஜகவைக் கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் ஆதரவுடன் தனது பிசினஸ் சாம்ராஜ்யத்தை அதானி வளர்த்து வருகிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.
பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் பலவற்றில் அதானியும் உடன் செல்வதும், அந்நாடுகளில் அதானியின் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்படுவதும் இந்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.
2020-ம் ஆண்டில், ஜார்க்கண்டில் உள்ள கோடா என்ற ஊரில் மின் நிலையத்தைக் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகளை அவர்களின் இடத்தில் இருந்து அரசின் உதவியுடன் அப்புறப்படுத்தியதாக அதானி மீது புகார் எழுந்தது. அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 4 நிலக்கரி நிறுவனங்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் 106.8 மில்லியல் டாலர்களை அபராதமாக செலுத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்தில் பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததால்தான், மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் அதானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்டது என்ற பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் இலங்கையின் மின்வாரியத் தலைவர் ஃபெர்டினாண்டோ. இந்த குற்றச்சாட்டை வைத்த 2 நாட்களிலேயே அவர் பதவி விலகியது அதானி பற்றிய சர்ச்சையை அதிகப்படுத்தியது.
இப்படி தன்னைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் அதானி கவலைப்படுபவராக இல்லை. மாறாக இந்த சர்ச்சைகளை சவால்களாக பார்ப்பதாக கூறுகிறார்.
சர்ச்சைகள் ஆயிரம் இருந்தாலும் அம்பானி குழுமம் போல் அதானி குழுமமும் இந்திய தொழில் சாம்ராஜ்ய வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது என்பதை மறுக்க முடியாது.