2024ஆம் ஆண்டு மே மாதம்! இந்தியாவில் புதிய அரசு ஒன்று, மத்தியில் ஜம்மென்று பதவியேற்கப் போகிறது. அது காங்கிரசா அல்லது பாரதிய ஜனதாவா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
இந்தநிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னால் வரும் அரையிறுதிப் போட்டி போல, நாட்டை இப்போது எதிர்கொண்டு இருக்கிறது ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான். தெலங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்கள், சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன. நவம்பர் 7ஆம்தேதி மிசோரமும், நவம்பர் 17ல் மத்தியபிரதேசமும், நவம்பர் 25ல் ராஜஸ்தானும், நவம்பர் 30ல் தெலங்கானாவும் தேர்தலைச் சந்திக்கின்றன. சத்தீஷ்கர் மட்டும் நவம்பர் 7, நவம்பர் 17 தேதிகளில், இரு கட்டங்களாகத் தேர்தலைச் சந்திக்கிறது. டிசம்பர் 3ஆம் தேதி முடிவு தெரிந்துவிடும்.
5 மாநிலங்களிலும் மொத்தம் 679 தொகுதிகள், 16.14 கோடி வாக்காளர்கள் என அமர்க்களப்பட இருக்கிறது இந்தத் தேர்தல். தேர்தலை எதிர்கொள்ளும் ஐந்து மாநிலங்களில் மத்திய பிரதேசம் பெரிய மாநிலம். மொத்தம் 230 தொகுதிகள். ரொம்ப சிறிய மாநிலம் மிசோரம். வெறும் 40 தொகுதிகள்.
‘ஐந்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கப் போகிறது’ என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.
‘அப்படி எல்லாம் இல்லை. இந்த ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு, பாரதிய ஜனதா வுக்கான பிரியாவிடை அறிவிப்பு. பாரதிய ஜனதாவை மக்கள் இந்தமுறை வழியனுப்பி வைக்கப் போகிறார்கள்’ என்றிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.
காங்கிரஸ் கட்சி, 26 கட்சிகளுடன் கைகோத்து ‘இந்தியா’ கூட்டணியை ஏற்படுத்தி யிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி எதிர்கொள்ளும் முதல் பெரிய தேர்தலும் இதுதான். அதனால், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
சரி. இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை, மக்களவைத் தேர்தலுக்குரிய ஒரு முன்னோட்டமாக கருதலாமா? இப்படிக் கேட்டால், ‘கருத முடியாது’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பொதுவாக மாநில சட்டமன்றத் தேர்தல்கள் என்பது வேறு. மக்களவைத் தேர்தல் என்பது வேறு. இரண்டும் வேறு வேறு ரகம்.
எடுத்துக்காட்டாக 2018ல் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதற்கு 6 மாதம் கழித்து நடந்த மக்களவைத் தேர்தலில், 25 எம்.பி. தொகுதிகளில் 24 தொகுதிகளை பாரதிய ஜனதா அள்ளியது. ஆக, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை, மக்களவைத் தேர்தலுக்குரிய முன்னோட்டமாக கருத முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தெலங்கானாவில், பாரத ராஷ்ட்டிரிய சமிதி கட்சி ஆட்சியில் இருக்கிறது. கே. சந்திர சேகர்ராவ் முதல்வராக இருக்கிறார். 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் 115 வேட்பாளர்களின் பெயர்களை கடந்த ஆகஸ்ட் 21ஆம்தேதியே சந்திரசேகர் ராவ் அறிவித்து விட்டார். 95 முதல் 105 இடங்களில் பாரத ராஷ்ட்டிரிய சமிதி வெற்றி பெறும் என்ற அபார நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
ஆனால், இந்தமுறை தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகத்துடன் இருக்கிறது. முதல்வராகும் வாய்ப்பில், சந்திரசேகர் ராவுக்குப் போட்டியாக கிட்டத் தட்ட அதே செல்வாக்குடன் காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி இருப்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.
தெலங்கானாவில், பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை அந்தக் கட்சி, பிரதமர் மோடி அண்மையில் அறிவித்த 21 ஆயிரம் கோட மதிப்பிலான நலத்திட்டங்கள் வாக்காக மாறும் என்று நம்பிக் கொண்டிருக்கிறது.
200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். கிழக்கு ராஜஸ்தான் கால்வாய்த்திட்டம் உள்பட பல நலத்திட்டங்கள் அவருக்கு பலம் சேர்க்கின்றன. எதிர்த்தரப்பான பாரதிய ஜனதா தரப்பில் இதுவரை முதல்வர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்படவில்லை. ‘
இருமுறை முதல்வராக இருந்த, 70 வயதான வசுந்தரா ராஜே சிந்தியா இந்தமுறை பாரதிய ஜனதாவால் புறக்கணிப்பட்டிருக்கிறார். பாரதிய ஜனதா வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் வசுந்தரா ராஜே சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், ராஜஸ்தானைப் பொறுத்தவரை அசோக் கெலாட்டின் கை ஓங்கி நிற்கிறது.
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய செல்வாக்கில் இல்லை. காங்கிரஸ் கட்சியின் கமல்நாத், சௌகானை கிட்டத்தட்ட எட்டிப்பிடிக்கும் தொலைவில்தான் இருக்கிறார்.
90 தொகுதிகள் கொண்ட சத்தீஷ்கரில் கடந்த 2018 தேர்தலில் 68 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்தமுறை காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல், கருத்துக்கணிப்பில் 45 சதவிகிதத்துடன் முன்னணியில் இருக்கிறார். இந்தமுறையும் அவர் வெற்றிக்கனி பறிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மிசோரம் மாநிலத்தில், சோரம்தாங்காவின் மிசோரம் தேசிய முன்னணி அரசு ஆட்சியில் இருக்கிறது. இந்த முறை அதை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற சோரம் மக்கள் அமைப்பு முழுமூச்சுடன் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரைபல கட்சிகள் களத்தில் நின்றா லும், இது பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே நடக்கும் இரு முனைப் போட்டிதான்.
பொருளாதாரம், விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, ஆகிய 3 முக்கியப் புள்ளிகள், ஐந்து மாநில தேர்தல் வெற்றியை முடிவு செய்யப் போகும் மிகப்பெரிய காரணிகளாக இருக்கப் போகின்றன.
தலைவர்களின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரங்களில் அதிக கவனம் செலுத்திய பாரதிய ஜனதா, உள்ளூர் வேட்பாளர்கள் தேர்வில் கோட்டை விட்டு கர்நாடகம், இமாச்சல் தேர்தல்களில் கையைச் சுட்டுக் கொண்டது.
அதுபோல கர்நாடகம், இமாச்சல் தேர்தல்களில் மத்திய அரசின் திட்டங்களை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் எளிதாக வீழ்த்திவிட்டன. இந்தமுறை அந்த தவறுகளை பாரதிய ஜனதா சரி செய்து கொள்ளுமா என்பது தெரியவில்லை.
அதுபோல, இந்த ஐந்து மாநில தேர்தலில், வரலாறு காணாத அளவுக்கு ஆட்சிகளுக்கு எதிரான அளவு கடந்த அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வாக்காளர்கள் அதிக அளவில் அதிருப்தியுடன் இருப்பது கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது.
அதுபோல பாரதிய ஜனதாவின் சனாதன, இந்துத்துவ கொள்கையை இந்தமுறை சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்றுத்தரும் என காங்கிரஸ் நம்புகிறது.
மாறாக, மத்திய அரசின் திட்டங்கள், உயர்வகுப்பினரின் ஆதரவு வெற்றி தேடி தரும் என பாரதிய ஜனதா நம்புகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு, ஐந்து மாநில தேர்தலில் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சத்தீஷ்கர், மிசோரம் மாநிலங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம். தெலங்கானாவில் ஆண் வாக்காளர்களுக்கு சமமான அளவில் பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஐந்து மாநிலத் தேர்தலில் இந்த பெண் வாக்காளர்கள் கணிசமான அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறார்கள்.
பொதுவாக, 25 முதல் 30 சதவிகித வாக்காளர்கள் கடைசி கட்டத்தில்தான் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்வார்கள். அதிலும், 12 முதல் 15 சதவிகித வாக்காளர்கள், வாக்குப்பதிவுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னால் முடிவு செய்பவர்கள். இன்னொரு 12 முதல் 15 சதவிகித வாக்காளர்கள், வாக்குப்பதிவு நாளன்று யாருக்கு தங்கள் வாக்கு என்பதை முடிவு செய்பவர்கள்.
ஐந்து மாநில தேர்தல் வெற்றி, இந்த அரிய வகை வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.