பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று 3-வது பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னைல் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் இந்த ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் 3-வது பதக்கமாகும் இது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டி இன்று மதியம் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னைல் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.
இவர்களுக்கு இடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னைல் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ஸ்வப்னைல் குசாலே 451.4 புள்ளிகள் பெற்றார்.
சீன வீரர் யுகுன் லியு 463.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 461.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 3-வது பதக்கம் இது. ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று மனு பாகர் சாதனை படைத்தார். இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. மனு பாகர் சரபோஜித் சிங் இணை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும், வெண்கலம் வென்றிருந்தது.
யார் இந்த ஸ்வப்னைல்?
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ராதாநகரி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வப்னைல். அவரது அப்பா சுரேஷ் குசாலே ஒரு ஆசிரியர். ஸ்வப்னிலின் தாயார் அனிதா, கம்பல்வாடி கிராமத்தின் தலைவராக உள்ளார்.
சிறு வயதிலேயே ஸ்வப்னைலுக்கு துப்பாக்கி சுடும் போட்டியில் உள்ள ஆர்வத்தை தெரிந்துகொண்ட அவரது அப்பா, நாசிக்கில் உள்ள கிரிடா பிரபோதினி பயிற்சி மையத்தில் அவரை சேர்த்துள்ளார். அங்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்ட ஸ்வப்னைல், கடந்த 2022-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.