பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா, இன்று போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேங்கடம் என்ற ஒரு குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, சீசிங் ராஜா ஆந்திராவில் இருப்பது தெரிந்தது. சில நாட்களுக்கு முன்பு சீசிங் ராஜாவை போலீசார் ஆந்திராவில் சுற்றி வளைத்தனர். ஆனால் போலீஸ் பிடியில் இருந்து சீசிங் ராஜா நூலிழையில் தப்பினார். இருப்பினும் போலீசார் ஆந்திராவிலேயே முகாமிட்டு அவனது நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தனர். இதற்கிடையே வேளச்சேரி பகுதியில் மதுபான பார் ஊழியர் ஆனந்தன் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் சீசிங் ராஜா மீது வழக்குப்பதிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வேளச்சேரி போலீசார் அவரை தேடிவந்தனர்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து சீசிங் ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29-வது குற்றவாளியாக அவன் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நீலாங்கரை பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சீசிங் ராஜா போலீசாரிடம் தெரிவித்தார். அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக இன்று (திங்கள்கிழமை) அதிகாலையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் சீசிங் ராஜாவை அழைத்து சென்றனர்.
போலீஸ் வேனில் இருந்து இறங்கி ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தை அடையாளம் காட்டிய சீசிங் ராஜா அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென்று போலீசாரை நோக்கி சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சாதுர்யமாக விலகிக் கொண்டனர். இதனால் யார் மீதும் துப்பாக்கி குண்டு பாயவில்லை. போலீசாரின் வாகனம் மட்டும் சேதம் அடைந்தது. சீசிங் ராஜா தொடர்ந்து சுட்டதால் இன்ஸ்பெக்டர் விமல் தற்காப்புக்காக சீசிங் ராஜாவை நோக்கி 2 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் சீசிங் ராஜாவின் மார்பு மற்றும் வயிற்றின் மேல் பகுதியில் குண்டுகள் பாய்ந்தன. சீசிங் ராஜா அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார்.
சென்னை மாநகர கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 மாதங்களில் நடந்த 3-வது என்கவுன்டராகும் இது.
யார் இந்த சீசிங் ராஜா?
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் பிறந்த சீசிங் ராஜா, சிறுவயதில் இருந்தே வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். வட்டி கட்டாத வாகனங்களை தனியார் நிறுவனங்களுக்காக சீசிங் செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த்தால் இவரது பெயருடன் சீசிங் என்ற அடைமொழி சேர்ந்துள்ளது.
பின்னாளில் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுப்பட்டள்ளார். இது தொடர்பாக சீசிங் ராஜா மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.