No menu items!

‘சாட்டை’ துரைமுருகன் யார்? ஏன் மீண்டும் மீண்டும் கைது?

‘சாட்டை’ துரைமுருகன் யார்? ஏன் மீண்டும் மீண்டும் கைது?

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக நேற்று கைது செய்யப்பட்ட, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தன்னை கொல்ல அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். யார் இந்த சாட்டை துரை முருகன்?

யார் இந்த ‘சாட்டை’ துரைமுருகன்?

`சாட்டை’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர். சீமானின் நெருக்கமான தம்பிகளில் ஒருவராக அறியப்படுபவர். இடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சாட்டை துரைமுருகன் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டவர். தற்போது நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளராக இருக்கிறார்.

சாட்டை துரைமுருகனுக்கு கைது என்பது புதியதல்ல. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியை மிக மோசமாகச் சித்திரித்து வீடியோ வெளியிட்ட குற்றத்துக்காக முன்னரே ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார் சாட்டை துரைமுருகன். கருணாநிதி குறித்தும் நடிகை குஷ்பு குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தஞ்சாவூர் போலீஸாரால் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இனிமேல் யார் குறித்தும் அவதூறு பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அதிலிருந்தும் ஜாமீன் பெற்றார்.

பின்னர், ‘திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி’ என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினைக் கேலியாகச் சித்திரித்து ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இந்தநிலையில், இவரது செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். அப்போது பிரபாகரன், சீமானை விமர்சனம் செய்ததாக வினோத் என்பவரை மிரட்டியதாக இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது மிரட்டியதற்காக நடந்த வழக்கு பதிவா… இல்லை தி.மு.க-வினரைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதால், தி.மு.க தலைமை கொடுத்த அழுத்தமா என்று நாம் தமிழர் கட்சியினர் கொந்தளித்தனர். பின்னர் அந்த வழக்கிலும் ஜாமின் பெற்றார். இதனிடையே இவர் மீது குண்டாஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குண்டாஸ்… மீண்டும் மீண்டும் கைது

இந்நிலையில்தான், தற்போது மீண்டும் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யபப்ட்டுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது திமுக தலைவர்கள் குறித்து, குறிப்பாக மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன்படி, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர்.

சாட்டை துரை முருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. சாட்டை முருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாட்டை துரை முருகன் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனிடம் 3 மணி நேரத்துக்கு மேல்  போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க அவசியமில்லை என்று கூறி விடுவித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகன், “திமுக அரசு என் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு என்னை முடக்க நினைத்தது. நீதிமன்றத்தில் எங்களுடைய வாதங்களை முன்வைத்தோம். இது அப்பட்டமான பொய் வழக்கு. நான் வெளியிட்ட காணொலிகளில் 800க்கும் மேற்பட்ட காணொலிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசியவைதான். குறிப்பாக வேங்கைவயல், மேல்பாதி, நாங்குநேரி உள்ளிட்ட சாதிய பிரச்சினைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றிருக்கிறேன்.

ஆனால், என்னை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து இந்த அரசு முடக்க முயல்கிறது. நான் பாடிய அந்த குறிப்பிட்ட பாடல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்களில் பாடப்படும் ஒரு பாடல். நான் அப்பாடலை மேற்கோள் காட்டித்தான் பேசினேன். நான் எந்த சமூகத்தையும் இழிவுப்படுத்தவில்லை. அந்த குறிப்பிட்ட வார்த்தை சாதியச் சொல் என்பதே சத்தியமாக எனக்கு தெரியாது. அதனை இன்றுதான் நான் புரிந்துகொண்டேன். நீதிபதி நேர்மையாக விசாரித்து, இந்த வழக்கு செல்லாது என்று என்னை விடுதலை செய்திருக்கிறார்.

யாருமே பேசக்கூடாது என்று நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை. பாஜகவை பார்த்து பாசிச கட்சி என்று சொல்லும் நீங்கள், இன்று எனக்கு செய்திருப்பதற்கு பெயர் என்ன? நான் குற்றாலத்தில் இருந்த நிலையில், நான் தலைமுறைவாகியிருந்ததாக சொல்லி என்னை அங்கு வைத்து கைது செய்து என்னுடைய காரிலேயே அழைத்து வந்தனர். அந்த ஓட்டுநர் முழு போதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வரும்போது வேண்டுமென்றே என் வாகனத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றனர்.

என்னை திட்டமிட்டு இந்த அரசு கொலை செய்யப் பார்க்கிறது. மதுரை அருகே விளாங்குளம் சுங்கச்சாவடி பக்கத்தில் பின்னால் நின்று கொண்டிருந்த லாரி என் கார் மீது மோதி என் முதுகில் அடிப்பட்டது. என்னுடைய ஓட்டுநருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது. அந்த அரசிடம் என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்றம் எனக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று சாட்டை துரைமுருகன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...