இன்று மீண்டும் ஒரு மாணவியின் தற்கொலை முயற்சி செய்தியாகியிருக்கிறது. சென்னையில் ஒரு பள்ளியில் நடந்த தேர்வின்போது காப்பி அடித்ததாக பிடிபட்ட மாணவி இரண்டாம் மாடியிலிருந்து குதித்திருக்கிறாள். நல்வாய்ப்பாக எலும்பு முறிவுகளுடம் உயிர் பிழைத்திருக்கிறாள்.
சமீபமாய் பள்ளி பருவத்தினரின் தற்கொலைகளை அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம். படிப்பு அழுத்தம், காதல் வருத்தம், பாலியல் நெருக்கம், இண்டர்நெட் இறுக்கம் என பல காரணங்கள் தற்கொலைகளுக்கு அடிப்படைகளாக அமைகின்றன.
அக்காவின் புடவையைக் கட்டிக் கொண்டு கல்லூரி விழாவில் கலந்துக் கொண்டதற்காக அக்கா – தங்கைக்குள் பிரச்சினை ஏற்பட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறாள் தங்கை. நர்சிங் மாணவி. ஒரு புடவைக்காக தற்கொலை. வீட்டில் மொபைல் பார்க்க விடவில்லை என்பதற்காக தற்கொலை, வீடியோ கேம்ஸ் விளையாட அனுமதிக்கவில்லை என்று தற்கொலை…. என்ன நடக்கிறது?
சமீபத்தில் ஒரு மீம். ஆசிரியர் மாணவரிடம் சொல்கிறார் ‘டேய் ஏண்டா முடி இவ்வளவு நீளமா வச்சிருக்க, நாளைக்கு வரும்போது வெட்டிக்கிட்டு வரணும்”. அதற்கு மாணவன், ‘நாளைக்கு வந்தாதானே’ என்று கூறுகிறான். அந்த மீமில் போட்டிருக்கும் படத்தில் மின் விசிறியில் தூக்கு தெரிகிறது. இவர்கள் 2k kids என்ற குறிப்பும் போடப்பட்டிருக்கிறது.
இந்த 2k Kids-ல் சிறு சிக்கல்களையும் எதிர் கொள்ள இயலவில்லையா? உயிரை மாய்த்துக் கொள்வதுதான் தீர்வு என்று கருதுகிறார்களா? எதற்காக இந்த கொடுமையான முடிவைத் தேடுகிறார்கள்?
2020 பொதுமுடக்கத்துக்குப் பிறகு மாணவர்களின் நடத்தையில் மாற்றங்கள் இருப்பதாக ஆசிரியர்களும் சமூக ஆய்வாளர்களும் தெரிவிக்கிறார்கள்.
ஆசிரியர்களை கேலி செய்வது, தாக்க முற்படுவது, சக மாணவர்களை அடிப்பது, பள்ளிப் பொருட்களை உடைப்பது, கலாட்டா செய்வதெல்லாம் அதிகமாகியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒன்றரை வருடங்கள் வகுப்பறைகளுக்கே வராமல் வீட்டுக்குள் ஆன்லைன் மூலம் பாடம் படித்த மாணவர்களுக்கு மீண்டும் பள்ளி, வகுப்புகள், பாடம் என்பது சிக்கலாக தெரிகிறது. அழுத்தமாக மாறுகிறது. அந்த அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக இது போன்ற காரியங்களை செய்கிறார்கள் என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வகுப்புகள் மூலம் சிறு வயதிலேயே அவர்களுக்கு இணைய தொடர்புகள் ஏற்படுகிறது. வகுப்புகளுக்கான இண்டர்னெட் வசதி அவர்களுக்கு வேறு உலகத்தைக் காட்டுகிறது. அந்த உலகம் அவர்களுக்கு இனிமையானகாக பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. அந்த உலகத்தில் பயணிக்கும் சுகத்தில் நிஜ உலகம் அவர்களுக்கு கசக்கிறது.
இதற்கு தீர்வு பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் இருக்கிறது.
மாணவர்களைப் போலவே ஆசிரியர்களும் பொதுமுடக்கத்துக்குப் பிறகு பள்ளிக்கு வருகிறார்கள். குறுகிய காலத்தில் பாடங்களை முடிக்க வேண்டிய அவசியமும் அழுத்தமும் அவர்களுக்கு இருக்கிறது. பொதுமுடக்கத்தின் போது பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதும் ஆன்லைன் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு இருக்கும் அதே அழுத்தம் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் வயதில் மூத்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள். மாணவர்களை வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர்கள்.
இன்றைய மாணவன் உலகை தன் கைக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவன்.
இன்றைய மாணவன் அவசர வாழ்க்கை வாழ்பவன்.
இன்றைய மாணவன் கவனச் சிதறல் மிக்கவன்.
இன்றைய மாணவன் செக்ஸ் அறிந்தவன்.
இன்றைய மாணவன் தொழில்நுட்பம் தெரிந்தவன்.
இன்றைய மாணவன் சமூக ஊடகங்களில் வாழ்க்கையை நடத்துபவன்.
மிக முக்கியமாக
இன்றைய மாணவன் அதீத அழுத்தங்களில் சிக்குண்டிருப்பவன். தோல்விகளை கண்டு அச்சப்படுபவன்.
இவற்றையெல்லாம் புரிந்துக் கொண்டுதான் மாணவர்களை அணுக வேண்டிய தேவை.
வாவ் தமிழா யூடியுப் தளத்துக்கு இயக்குநர் வசந்தபாலன் கூறியிருப்பதை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. ‘நாம் ஒரு தலைமுறையை பலவீனமானவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்’ என்கிறார் அவர். அதற்கு காரணமாக மொபைல் உலகை சுட்டிக் காட்டுகிறார். உண்மைதான். இண்டர்நெட் உலகில் உழன்றுக் கொண்டிருப்பவர்களால் நிஜ உலகை எதிர்கொள்ள முடியவில்லை.
எல்லா மாணவர்களும் இப்படியா? எல்லா காலக்கட்டத்திலும் இது போன்ற மாணவர்கள் இருந்திருக்கிறார்களே? என்ற கேள்விகள் எழும்,
உண்மைதான். இதை பொதுப்படுத்த முடியாது. ஆனால் இந்த வளையத்துக்குள் வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்களையும் பிள்ளைகளையும் அணுகுவதற்கு சில எளிய வழிகள் இருக்கின்றன.
பிரச்சினைகளை பிள்ளைகளின் கோணத்திலிருந்து அணுகி தீர்வு காண முயலுங்கள்.
அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்.
மதிப்பெண் முக்கியம்தான். ஆனால், அதுவே வாழ்க்கையல்ல.
காதல், காமம் கெட்ட வார்த்தைகள் அல்ல. அவற்றை உணர்வோடு மட்டும் பார்க்காமல் அறிவோடும் பாருங்கள். பார்க்க கற்றுக் கொடுங்கள்.
பிள்ளைகளை கவனித்துக் கொண்டே இருங்கள். ஆனால் அவர்கள் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து வழி நடத்தாதீர்கள்.
பிள்ளைகள் பழக்கவழக்கங்களில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் கவனித்துப் பாருங்கள். எதனால் மாற்றம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
தீய மாற்றமாக இருந்தால் துவக்கத்திலேயே தடுக்க முயலுங்கள், அதிகாரமாய் அல்ல, நிதானமாய் அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லுங்கள்.
அவர்களுடன் இருங்கள், அவர்கள் விரும்பும் நேரத்தில்.
அன்பு செலுத்துகிறேன் என்று மூக்கை நுழைக்கிறார்கள் என்று அவர்களை உணர வைக்காதீர்கள்.
அவர்கள் பிரச்சினைகளை சொன்னால் அவர்கள் மீது தவறு இருந்தாலும் அவர்களைக் கடிந்துக் கொள்ளாதீர்கள். மென்மையாக புரிய வையுங்கள்.
இழுத்துப் பிடிக்காதீர்கள். விட்டுப் பிடியுங்கள்.