உலக சுகாதார நிறுவனத்தின் சமீப அறிக்கை ஒன்று, 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி பேருக்கு காது கேட்காமல் பாதிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது. அதாவது, 2050ஆம் ஆண்டில் 10இல் ஒரு நபருக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். என்ன காரணம்?
பொதுவாக காது கேளாமை பிரச்னை ஒரு காது அல்லது இரண்டு காதுகளிலும் ஏற்படலாம். கேட்கும் திறன் குறைபாடு மிகவும் குறைவாக இருக்கலாம் அல்லது அது தீவிரமாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும் கேட்கும் திறனில் பிரச்னை உள்ளவர்கள் மற்றவர்களுடன் உரையாடுவதில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. கருவிகள் மற்றும் இதர தொழில்நுட்ப உதவிகளுடன் அவர்கள் மற்றவர்களுடன் உரையாடவும், அவர்கள் உரையாடுவதைக் கேட்கவும் இயலும்.
ஆனால், காது கேட்கும் திறனை முழுமையாக இழந்தவர்களால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க இயலாது. அவர்கள் மற்றவர்களுடன் உரையாடுவதற்கு அதிகமாக சைகை மொழியைதான் பயன்படுத்த வேண்டியதிருக்கும்.
யார் ஒருவரால் 20 டெசிபல் என்ற அளவில் எழுப்பப்படும் ஒலியைக் கேட்பதில் பிரச்னை இருக்கிறதோ அவர்களின் கேட்கும் திறன் குறைந்து வருகிறது என்று பொருள்.
உலகில் தற்போது 43 கோடி மக்கள் கேட்கும் திறனில் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 5 சதவிகிதம். காது கேட்கும் திறனில் பாதிப்பு உள்ள 43 கோடி பேர்களில் 3.4 கோடி குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
காது கேளாமை பிரச்னைகளால் பாதிக்கப்படும் நபர்களில் 80 சதவிகிதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசித்து வருகின்றனர்.
காது கேளாமைக்கு என்ன காரணம்?
மரபு ரீதியாகவோ அல்லது இளம் வயதில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாகவோ கேட்கும் திறன் குறையலாம். சத்தமான சூழலில் வாழ்வதும் கூட இந்த குறைபாடுகளுக்கு வழி வகுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.
மேலும், சில நேரங்களில் குழந்தைகள் பிறக்கும் போது ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஹைபர்பிலிரூபினேமியா எனப்படும் மஞ்சள் காமாலை நோய்த் தொற்று போன்றவற்றாலும் சிறு வயதிலேயே காது முழுமையாகக் கேட்காமல் போவது மற்றும் கேட்கும் திறனில் பிரச்னைகள் ஏற்படுவது போன்றவை நிகழும்.
காதுகளில் நோய் தொற்று ஏற்படுதல், காதுகளில் நீர் கோர்த்தல் போன்றவையும் குழந்தைப் பருவத்தில் காது கேளாமையைத் தூண்டுகிறது. புகைப்பிடித்தல், நாள்பட்ட நோய்கள் போன்றவை காரணமாகவும் காது கேளாமை ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
கேட்கும் திறன் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்வதிலும் கற்றுக் கொள்வதிலும் சிரமத்தைச் சந்திப்பார்கள். கற்றல் மட்டுமின்றி, வெவ்வேறு இடங்களுக்குச் செல்வது, மற்றவர்களுடன் உரையாடுவது போன்றவற்றிலும் அவர்களுக்குச் சிரமம் ஏற்படும். இதனை விரைவில் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் பட்சத்தில் சமூகத்தில் மற்ற நபர்களை போல அவர்களும் செயல்பட முடியும்.
கேட்டல் திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முறையாக பேசுவதிலும், தகவல் பரிமாற்றத்திலும் தடுமாறுவார்கள். அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படும். மற்றவர்களிடம் இருந்து விலகி, தனிமையிலேயே இருப்பார்கள்.
வளர்ந்து வரும் நாடுகளில் கேட்கும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைப்பதில்லை. அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு அவர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. அதையும் மீறி பணியில் அமர்த்தப்படும் பட்சத்தில் அவர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.
தவிர்க்க என்ன செய்யவேண்டும்?
இந்நிலையில் சமீப உலக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை அடுத்த 25 ஆண்டுகளில் 250 கோடி பேருக்கு காது கேளாமல் போகக்கூடும் என்று எச்சரிக்கிறது. இதை தவிர்க்க வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு டி.வி போன்றவற்றை அதிகமாக சத்தம் வைத்து பழக்கப்படுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் நபர்கள் சத்தமாகப் பேசும் பழக்கத்தையும் கைவிட வேண்டும். ஹெட்போன்கள் போன்றவற்றை குழந்தைககளுக்குக் கொடுத்துப் பழக்குவதை நிறுத்த வேண்டும். மக்கள் அதிகமாகப் புழங்கும் பகுதிகள், வெடிச் சத்தங்கள், கோவில் திருவிழாக்கள் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்ப்பது அவர்களின் வயதான காலம் வரை பயனளிக்கும் என்றும் உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.