ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாட்டு மருத்துவத் துறை. 2020 – 2022 காலக் கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6 சதவீதத்தினர் 2023ல் இறந்துவிட்டார்கள்.
2020 – 2022 ஆண்டுகளின் போது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 1220 பேர் தமிழ்நாட்டு மருத்துவத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள். சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறை (Institute of Community Medicine, Madras Medical College)மருத்துவர்கள் இந்தக் கண்காணிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டிருந்தனர். இந்த ஆய்வில்தான் இந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது. சென்னை நோயாளிகள் இந்த கண்காணிப்பில் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
2020 மார்ச் மாதம் முதல் 2021 டிசம்பர் மாதம் வரை இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடியது. அதன் மிச்சங்கள் 2022லும் தொடர்ந்தது. 2021ல் வந்த முதல் அலை கொரோனாவில் பாதிக்கப்படாதவர்கள் கூட 2021ல் வந்த கடுமையான இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டார்கள்.
இந்த 1220 நோயாளிகளில் 60 சதவீத பேர் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள். 40 சதவீதத்தினர் முதல் அலையில் சிக்கியவர்கள்.
இவர்களில் 73 பேர் அதாவது 6 சதவீதத்தினர் 2023 ஜூலைக்குள் இறந்துவிட்டார்கள். இவர்களில் 20 சதவீதத்தினர் 61 வயதிலிருந்து 80 வயதுக்குட்பட்டவர்கள். 40 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு சதவீதத்தினர்தாம். கொரோனா தாக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மட்டுமில்லாமல் வயது மூப்பில் இறந்தவர்கள், வேறு நோய்களால் இறந்தவர்களும் இந்த இறப்புகளில் அடக்கம்.