No menu items!

ஒரே நாளில் 2 சறுக்கல் – Hardik Pandya வாழ்க்கையில் சோகம்

ஒரே நாளில் 2 சறுக்கல் – Hardik Pandya வாழ்க்கையில் சோகம்

சொந்த வாழ்க்கை, மனதுக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டு ஆகிய 2 விஷயங்களிலும் ஒரே நாளில் சறுக்கலைச் சந்தித்திருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா. மனைவி நடாஷாவும், தானும் பிரிந்துவிட்டதாக அவர் அறிவித்த அதே நேரத்தில், டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்தும் அவர் கழற்றி விடப்பட்டுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்புவரை சக கிரிக்கெட் வீர்ர்கள் அனைவரும் பார்த்து பொறாமைப்படும் வாழ்க்கையை வாழ்ந்தவர் ஹர்த்திக் பாண்டியா. சிறுவயதில் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஹர்த்திக் பாண்டியா, சிறுவயதில் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார். பயிற்சிக்கும் செல்லும் நாட்களில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் மேகி பேக்கட்தான் ஹர்த்திக் பாண்டியாவுக்கும், அவரது சகோதரர் குர்னால் பாண்டியாவுக்கும் மதிய உணவாக இருந்திருக்கிறது. மைதானத்தை பராமரிக்கும் கிரவுண்ட்ஸ்மேனிடம் அந்த பேக்கட்டை கொடுத்து அதை வேகவைத்து இருவரும் சாப்பிட்டுள்ளனர்.

ஆடம்பர வாழ்க்கை:

ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டவர் என்பதாலேயே, பிற்காலத்தில் உல்லாசமான வாழ்க்கையின்மீது ஹர்திக் பாண்டியாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள இந்திய கிரிக்கெட் வீர்ர்களிலேயே மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்பவர் ஹர்த்திக் பாண்டியாதான். இந்திய வீர்ர்களிலேயே விலைமதிப்புள்ள கடிகாரங்களை ஹர்த்திக் பாண்டியாதான் வைத்துள்ளார். Patek Philippe Nautilus Platinum 5711 வகையைச் சார்ந்த 2 கைக்கடிகாரங்களை அவர் வைத்துள்ளார். அந்த கைக்கடிகாரங்களின் விலை ரூ.5 கோடி.

ஹர்த்திக் பாண்டியாவும், அவரது சகோதரர் குருணால் பாண்டியாவும் மும்பையில் வசிக்கும் அபார்ட்மெண்டின் விலை 30 கோடி ரூபாய். ஹர்த்திக் வைத்துள்ள ஒரு பைஜாமாவின் விலை 1.6 லட்சம். 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள வேறு பல சட்டைகளையும் அவர் வைத்துள்ளார். சட்டையைப் போலவே ஹர்த்திக் பாண்டியா வைத்துள்ள வெள்ளை நிற ஷூவும் மிகவும் காஸ்ட்லி. அதன் விலை 1.5 லட்ச ரூபாய்.

மற்றொரு புறம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்றுகொடுத்த பாண்டியா, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். அதற்கு ஏற்றார்போல் ரோஹித் சர்மா இல்லாத சில தொடர்களிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மனைவியுடன் விவாகரத்து:

இப்படி மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் வாழ்க்கையை வாழ்ந்த பாண்டியாவுக்கு, இந்த ஆண்டு ஐபிஎல் முதலே நேரம் சரியில்லை. குஜராத்தை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பாண்டியாவை, அந்த அணியின் வீர்ர்களும், ரசிகர்களும் ஏற்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் ஆடிய போட்டிகளில் மும்பை மைதானத்திலேயே பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் போடும் நிலை உருவானது. ஐபிஎல் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நேரம் பார்த்து பாண்டியாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த சூழலில்தான் மனைவி நடாஷாவை விவாகரத்து செய்வதாக இப்போது அறிவித்துள்ளார் ஹர்த்திக் பாண்டியா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஹர்த்திக் பாண்டியா, “நடாஷாவும் நானும் 4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது பரஸ்பரம் பிரிவது என முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரது வாழ்க்கைக்கும் இது தான் நல்லது என நம்புகிறோம். பரஸ்பர மரியாதை, தோழமையுடன் மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது. எங்களது மகன் அகஸ்தியா, எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவருக்கான மகிழ்ச்சிக்காக பெற்றோர்களான எங்களால் முடிந்த அனைத்தையும் அவருக்கு வழங்குவதை உறுதி செய்வோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் பதவி பறிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே ரோஹித் சர்மா இல்லாத டி20 தொடர்களில் ஹர்த்திக் பாண்டியாதான் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இப்போது ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த டி20 கேப்டனாக ஹர்த்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஹர்த்திக் பாண்டியா நீக்கப்பட்டு, சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கவுதம் காம்பீர் காரணமா?

இந்திய அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்டியா நியமிக்கப்படாததற்கு கவுதம் காம்பீர் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. காயங்களால் தொடர்ந்து அவதிப்படும் ஹர்த்திக் பாண்டியா, சில தொடர்களை ஆடாமல் தவிர்த்து வருகிறார்.

இதுபற்றி தேர்வுக்குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்த கவுதம் காம்பீர், ஒரு தொடரில்கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஆடும் வீரரைத்தான் கேப்டனாக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதனாலேயே ஹர்த்திக்கின் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறப்படுகிறது. தன்னிச்சையாக முடிவு எடுக்கும் ஹர்த்திக்கைவிட, தான் சொன்னதைக் கேட்கும் சூர்யகுமாரையும், சுப்மான் கில்லையும் கவுதம் காம்பீர் விரும்புவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...