அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் மகன் டாக்டர் வினித் நந்தனின் திருமணம் சென்னை ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. விழாவிலிருந்து:
வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருச்சி என்றால் கே.என்.நேரு… நேரு என்றால் திருச்சி. அதுபோல் மாநாடு என்றாலும் நேருதான்” என்று புகழாரம் சூட்டினார்.
நிகழ்ச்சியின்போது ராமஜெயத்தை நினைவுபடுத்தி அமைச்சர் துரைமுருகன் பேச, மேடையிலேயே அழுதார் நேரு. அதற்கு மருந்திடுவதுபோல் ‘ராமஜெயம் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்” என்று ஸ்டாலின் கூறியபோது ஒட்டுமொத்த அரங்கமும் உணர்ச்சிவசப்பட்டது.
வரவேற்பு அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் குட்டிக் குட்டி மசால்வடைகள், பன்னீர் டிக்கா, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டன.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ராவின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. கச்சேரியில் திரைப்பட பாடல்களை அவர்கள் பாடவில்லை. இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு, “தென்றல் உறங்கிய பின்னும்” பாடலைப் பாடுமாறு ரசிகர் ஒருவர் கேட்க, உன்னிகிருஷ்ணனின் மகள் பாடினார். பலத்த கைத்தட்டு கிடைத்தது.
ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் வீட்டு நிகழ்ச்சியைப் போன்று சுழன்று சுழன்று விருந்தினர்களை வரவேற்கும் பணியில் ஈடுபட்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த உதயநிதி ஸ்டாலின், மறுநாள் திருமண நிகழ்விலும் கலந்துக் கொண்டு வரவேற்புரை நிகழ்த்தினார். விழா நிகழ்ச்சிகளை ஆ.ராசா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
திருமண வரவேற்பில் மாலை 5 மணிக்கு டைனிங் ஹாலில் மிளகாய், வாழைக்காய், உருளைக்கிழங்கு பஜ்ஜிகளை தட்டில் போட்டு அனைவருக்கும் பரிமாறினார்கள். இந்த பஜ்ஜிகளை அதிக எண்ணெய் இல்லாமல் செய்திருந்தனர். அத்துடன் பாதாம் அல்வா உள்ளிட்ட பலகார வகைகளும், கும்பகோணம் டிகிரி காபி, மலை வாழைப்பழம் ஆகியவையும் வழங்கப்பட்டன.
திராவிடர் கழகத்தின் கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன், டி.கே.ரங்கராஜன் என தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
படங்கள் – ஆர் கோபால்