சொமோட்டோ நிறுவனத்தின் 10 நிமிட டெலிவரி அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சொமோட்டோவிடம் சென்னை மாநகர காவல்துறை விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறைக்கு விளக்கம் அளித்துள்ள சொமோட்டோ, ‘10 நிமிட டெலிவரி செய்யும் பணியாட்களுக்கு ஊக்கத் தொகை இல்லை; அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அளிக்கப்படும். ஆயுள் காப்பீடும் வழங்கப்படும். இந்த டெலிவரியை சொமோட்டோ இன்ஸ்டெண்ட் என்ற பெயரில் டீ, காபி, ரொட்டி போன்ற துரித உணவுகள் டெலிவரி செய்ய உருவாக்குகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு
தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக இந்த கூட்டத் தொடரில், நகை கடன் தள்ளுபடி, அரசு கல்லூரி மேம்பாடு, உழவர் வாழ்வில் முன்னேற்றம் என 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சபாநாயகர் அப்பாவு, தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
கோவில் நுழைவு வாயில்களில் சேவை விவரங்கள்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவில்களின் தல வரலாறு, கோவிலின் சிறப்பம்சங்கள், கட்டிடக் கலை சிறப்புகள், முக்கிய விழாக்கள் போன்ற விவரங்களைப் பக்தர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் கோவிலின் நுழைவு வாயில்களில் விளக்கக் காட்சி மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடை திறப்பு, நடை சாத்தும் நேரம், கோவில் தொலைப்பேசி எண்கள், விடுதி வசதி போன்றவற்றிற்கான தொடர்புடைய நபர்களின் கைபேசி, தொலைப்பேசி விவரம், மக்கள் தொடர்பு அலுவலர் இருப்பின் அவரின் கைபேசி விவரங்களும் இந்த விளக்க ஒளிக்காட்சியில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3-வது நாளாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த 21-ந் தேதி 1,549 ஆக இருந்த பாதிப்பு மறுநாள் 1,581 ஆகவும் நேற்று 1,778 ஆகவும் உயர்ந்தது. 3-வது நாளாக இன்றும் பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு முன்பான 24 மணி நேரத்தில் புதிதாக 1,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 67 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,16,672 ஆக உயர்ந்துள்ளது.