தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘திமுக அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸை நீதிமன்றத்தில் சந்திக்க தயார்’ என்று கூறினார். மேலும், தன் மீது குற்றச்சாட்டும் திமுகவினர் தகுந்த ஆதாரங்களோடு காவல்துறையோடு வந்து தன்னை கைது செய்யலாம் என்றும், திமுகவினர் மான நஷ்ட குற்றம் சாட்ட தகுதியற்றவர்கள் என்றும் சாடினார்.
“திமுக எம்.பி வில்சன் என்னிடம் 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பி.ஜி.ஆர் நிறுவனம் ரூ.500 கோடி, ஆர்.எஸ்.பாரதி ரூ.100 கோடி, வில்சன் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.610 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனக்கு ஊரில் ஆடு, மாடுகள்தான் இருக்கிறது. என்னிடம் ரூ. 610 கோடி இல்லை. நான் ரூ.610 கோடிக்கு வொர்த் இல்லை. தொட்டம் பட்டியிலிருந்து வந்த என்னை முடிந்தால் தொட்டுப் பார்க்கட்டும்” என்றார்.
திமுக ஆட்சியில் ஊழல் குறிப்பாக மின் துறையில் ஊழல் என்ற குற்றச்சாட்டை அண்ணாமலை வைத்திருந்தார். அதற்கு திமுகவினர் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
அடையாறில் முதல்வர் திடீர் ஆய்வு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு மண்டலத்தில் ரூ. 5.84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி பிரதான சாலையில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 915 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், காந்தி தெரு, சீதாபதி நகர் 2-வது குறுக்கு தெருவில் 3 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1500 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
முதலமைச்சர் குறித்து பொய் செய்தி: பாஜக பிரமுகர் கைது
தமிழக முதல்வரின் துபாய் சுற்றுப் பயணம் குறித்தும், அவர் அணிந்திருந்த ஆடை குறித்தும் ஆதாரமில்லாத பொய் செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாக எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சேலம் மேற்கு பாஜக பொதுச் செயலாளர் அருள் பிரசாத் என்பவர் செய்தி படம் ஒன்றை ட்வீட் செய்திருந்தார். அதில், முதல்வர் ஸ்டாலின் துபாய் செல்லும் போது அணிந்திருந்த ஜாக்கெட் விலை 17 கோடி ரூபாய் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் வெளியிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இது குறித்து அவதூறு வழக்கு பதியப்பட்டு பாஜக நிர்வாகி அருள் பிரசாத் எடப்பாடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மாமன்னன் – உதயநிதி ட்வீட்!
‘மாமன்னன்’ என்ற பெயரில் தயாராகும் தனது அடுத்த படத்தின் முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஹிஜாப் விவகாரம் – தேர்வை புறக்கணித்த மாணவிகள்!
கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத சென்றனர். அவர்கள் ஹிஜாபுடன் தேர்வறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து 20,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவியர் தேர்வைப் புறக்கணித்தனர்.