No menu items!

மிஸ் ரகசியா – பாஜக பக்கம் சாய்கிறதா திமுக?

மிஸ் ரகசியா – பாஜக பக்கம் சாய்கிறதா திமுக?

ரகசியா வரும்போதே ஸ்வீட் பாக்ஸுடன் உள்ளே வந்தார்.

“கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா?” என்று பெட்டியிலிருந்து ஒரு காஜு கட்லியை எடுத்துக் கொண்டோம்.

”கல்யாணம் நிச்சயம் ஆனாதான் ஸ்வீட் கொடுப்பாங்களா? ஒரு திமுக சோர்சை பார்க்க போனேன். அவங்க ஆளுக்கு ராஜ்ய சபா சீட் கிடைச்சிருச்சாம். ஸ்வீட் கொடுத்தார்”

“ ஆமா நீ சொன்ன மாதிரியே ராஜேஷ்குமாருக்கு மீண்டும் சீட் கொடுத்திருக்காங்க. சரி, 4 சீட் வச்சிருக்கிற திமுகவே சட்டுனு முடிவு எடுத்திருச்சு. ஆனா காங்கிரஸ்லயும் அதிமுகவுலயும் முடிவெடுக்காம இருக்காங்களே?”

”ஆமா. நாலுல ஒரு சீட்டை காங்கிரசுக்கு கொடுத்தும் காங்கிரசால முடிவெடுக்க முடியல. முதல்ல பி.சிதம்பரம்னு சொன்னாங்க. ஆனால் இப்ப அவர் இல்லனு சொல்றாங்க. ஜெய்ப்பூர்ல நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர் மாநாட்டுல ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி கோஷத்தையே ப.சி.க்காகதான் ராகுல் காந்தி எழுப்பினார்னு சொல்றாங்க. ஒரே குழப்பம்தான்”

“சிதம்பரத்துக்குதான் அதிக வாய்ப்புனு இன்னைக்கு கே.எஸ்.அழகிரி சொல்லியிருக்காரே?”

“ஆமா. ப.சி வீட்டுல ரெய்ட் நடக்கிறது கட்சி மேலிடத்துல அவர் மேல ஒரு அனுதாபத்தை கொடுத்திருக்கு. அவரை இந்த நேரம் கைவிட்டு விடக் கூடாதுனு சோனியா நினைக்கிறாங்களாம். ஆனா ராகுல் காந்திக்கு இதுல மாற்று கருத்து இருக்கிறது”

“ஈவிகேஸ் இளங்கோவன் பெயரும் அடிபட்டுச்சே”

“இதுபத்தி அவரோட தரப்பு ஆட்களை விசாரிச்சோம். உடல்நிலை காரணமா தனக்கு எம்.பி.பதவி கொடுத்தாலும் அதை வேணாம்னு சொல்ற மூட்லதான் ஈவிகேஎஸ் இருக்காராம்.”

“அப்ப யாருக்குதான் அந்த சீட்டை கொடுக்கப் போறாங்க?”

”உலகத்துலேயே காங்கிரஸ் எம்.பி. யாருனு தெரிஞ்சிக்க இவ்வளவு ஆர்வமா இருக்கிறது நீங்களாதான் இருக்கும். அதைவிட முக்கியமான கட்சி அதிமுக. அதைப் பத்தி கேக்க மாட்டேங்கிறிங்களே?”

”இப்ப தமிழ்நாட்டுல அதிமுக ஞாபகத்துக்கே வர மாட்டேங்குது. சரி, அங்க என்ன ஓடுது?”

“அதிமுகவைப் பொறுத்தவரை ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருத்தருக்கும், எடப்பாடி ஆதரவாளர் ஒருத்தருக்கும் சீட் கொடுக்கிறதுன்னு ஏற்கெனவே முடிவாகி இருக்கு. இதுல தனது சார்பு வேட்பாளரா சையத் கானை பரிந்துரைச்சிருக்கார். அவரை எடப்பாடி நிராகரிச்சுட்டாராம். பாஜகவுடன் நட்புடன் இருப்பதால் இஸ்லாமியரை நிறுத்தினாலும் இஸ்லாமியர் வாக்குகள் அதிமுகவுக்கு வராதுனு சொல்லியிருக்காங்க. அதனால இப்ப ஜக்கையன், இல்லாட்டி இன்பதுரை ஆகிய 2 பேர்ல யாராவது ஒருத்தருக்கு தன் சார்பா சீட் கொடுக்கணும்னு ஓபிஎஸ் பரிந்துரைச்சு இருக்கார்.”

“எடப்பாடி தரப்புல யாரு?”

“அங்கதான் ஒரு பெரிய குரூப்பே பதவிக்காக காத்திட்டு இருக்காங்க. அவங்கள்ல தனது ஆதரவாளரான செம்மலைக்கு சீட் கொடுக்கலாம்னு எடப்பாடி முடிவு செஞ்சிருக்காராம். இதனால் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, ஜேசிடி பிரபாகர் போன்ற தலைவர்கள் அப்செட்ல இருக்காங்களாம். அதுல ரொம்ப அப்செட் ஜெயக்குமார். தன் மேலயும் குடும்பத்தார் மேலேயும் கேஸ்லாம் வரும்போது எம்.பி.யா இருந்தா பாதுகாப்பா இருக்கும்னு பேசியிருக்கார். கட்சியே உங்களுக்கு பெரிய பாதுகாப்புனு அவரை சமாளிச்சிருக்காங்க”

”அதிமுகவிடமிருந்து பாஜக ஒரு சீட் கேக்குதுனு சொன்னாங்களே”

“ஆமா கேட்டது உண்மைதான். ஆனா எடப்பாடி ஸ்டிராங்கா மறுத்திட்டார். அவருக்கு பாஜக ஓபிஎஸ் பக்கம் இருக்கு என்ற கடுப்பு இருக்கு”

”பலமா இருந்தாலும் ஆளும் கட்சி தன்னுடைய திட்டங்களை நிறைவேற்ற கஷ்டப்படுதுனு ஒரு பேச்சு கிளம்பியிருக்கே. பாஜகவுக்கு பயந்து முடிவுகளை மாத்துதுனு பாஜகவினர் பேசுறாங்களே?”

“சமீபத்துல நடந்த சில விஷயங்கள் அப்படிதான் இருக்கு. பல்லக்கு விவகாரம், ஆம்பூர் பீஃப் பிரியாணி திருவிழா, திருவாரூர் சாலைக்கு கலைஞர் பெயர்னு..இந்த மாதிரி சம்பவங்கள்ல ஆளும் கட்சி கொஞ்சம் அடக்கி வாசிக்குது. அதை ஒரு வியூகமாதான் திமுகவின் தலைமை பார்க்குது”

“அறிவிச்சுட்டு பின்வாங்குறதுல என்ன வியூகம்”

“திருவாரூர்ல தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயரை வைக்கதான் போறாங்க. ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளில் அது நடக்குமாம்.”

“ஏதோ வியூகம்னு சொன்ன?”

“பெயரை சும்மா வைக்கப் போறதில்லை. திருவாரூர் மக்கள் கிட்ட வாக்கெடுப்பு நடத்தி கருணாநிதி பெயரை வைக்கப் போறாங்களாம். மக்கள் விரும்பினார்கள் வைத்தோம் என்று கூறப் போகிறார்களாம். இந்த யோசனையை முதல்வரிடம் சொல்லியிருப்பது கோட்டையிலுள்ள உயரதிகாரியாம். பாஜக மத ரீதியாக பிரச்சினைகளை கொண்டு போக முயல்கிறது. அதை எதிர்த்தால் பிரச்சினையின் தீவிரம் அதிகரித்து அது பாஜகவுக்கு சாதகமாக போய்விடும் என்று திமுக கருதுகிறது”

“திருவாரூர் தேரை ஓட வைத்தவர் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர் பெயரை தெற்கு ரத வீதிக்கு வைப்பது பொருத்தமாகதானே இருக்கும். அதுல திமுக பின் வாங்குவது பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது அல்லவா? ஓமந்தூரார் அரசு வளாகத்துல கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை வைத்து திறப்பதும் சர்ச்சையாகியிருக்கே. பாஜகவிடம் திமுக நெருங்குகிறது என்றெல்லாம் சொல்கிறார்களே?”

“சட்டப் பேரவையில் கலைஞர் படத்தை குடியரசுத் தலைவர் கோவிந்த் திறந்து வைத்தார். கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறந்து வைக்கிறார். அவரை ஏன் பாஜகவாக பார்க்க வேண்டும் என்று திமுகவினர் கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் வாதமும் சரிதானே”

“ஆமாம். ஆனால் வெங்கையா நாயுடு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதாகவும் அதற்கு திமுக ஆதரவு உண்டு என்றும் கூறுகிறார்களே”

“வெங்கயா நாயுடுதான் போட்டியிடுவார் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால் திமுக ஆதரவளிக்குமா என்பது சந்தேகம். மாநிலக் கட்சிகளும் காங்கிரசும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த இருப்பதாகதான் தகவல்கள் வருகின்றன. மாநிலக் கட்சிகள் அனைத்தும் இணைந்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ரொம்ப கஷ்டம். மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையை திமுக செய்யலாம்”

“பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க தமிழகத்துக்கு பிரதமர் வரப் போறாரே? இந்த தடவை கோ பேக் மோடினு திமுக சொல்லுமா?”

“திமுக தரப்புல எந்த எதிர்ப்பும் இருக்காது. அரசு பொறுப்புல இருக்கிறதுனால அவரை சுமுகமா திருப்பி அனுப்பனும்னு முதல்வர் நினைக்கறாராம்”
“முதல்வர் கொஞ்சம் கொஞ்சமா மத்திய அரசோட மோதல் போக்கை கைவிடறாரோ?”

“இப்படி நினைச்சுத்தான் வீரமணியும் கவலைப்படறாராம். முன்பிருந்த அதிமுக அரசைவிட திமுக அரசு, ஆன்மிகம் ஆன்மிகம்னு ரொம்பவே முழக்கமிடுதே. இது சரியில்லையேன்னு தன்னை பார்க்க வர்றவங்ககிட்ட அவர் புலம்பி இருக்காரு. தீவிர பகுத்தறிவு பேசுனா பாஜகவுக்கு வசதியா போய்டும் என்று திமுகவினர் கூறுகிறார்கள். ஜூன் 3 கருணாநிதி பிறந்த நாளன்று இன்னொரு முக்கிய சம்பவமும் நடக்க போவதாக திமுகவினர் உற்சாகமாக இருக்கிறார்கள்”
“என்னது உதயநிதி அமைச்சராகிறாரா?”

“அது அன்று நடக்குமானு தெரியல. ஆனா கலைஞர் பிறந்த நாள் அன்று மு.க.அழகிரி கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்னு மதுரை திமுகவில் பேசிக் கொள்கிறார்கள்”

“அவர் பாஜகவில் சேரப் போவதாகல செய்திகள் வந்துக்கிட்டு இருந்தது”
“அவர் சும்மா இருந்தாலும் இருப்பாரே தவிர பாஜகவில் சேர மாட்டார்னு அவர் ஆதரவாளர்கள் சொல்றாங்க. பாஜக முயற்சி செய்தது உண்மை. ஆனால் அழகிரி அசைந்துக் கொடுக்கவில்லையாம்”

“திருச்சி சிவாவின் மகன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவினு பாஜக மாற்றுக் கட்சி உறவினர்களை இழுத்துக் கொண்டிருக்கிறதே?”

அவங்களும் கட்சி நடத்தணும்ல” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...