No menu items!

தினேஷ் கார்த்திக் – எப்படி சாதித்தார்?

தினேஷ் கார்த்திக் – எப்படி சாதித்தார்?

இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக அளவிலான ஏற்றங்களையும், வீழ்ச்சிகளையும் சந்தித்த வீரர் என்று தினேஷ் கார்த்திக்கைச் சொல்லலாம். 2004 -ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தடம் பதித்த நாளில் இருந்து ஒரு ரோலர் கோஸ்டர் வாழ்க்கையாக அவரது கிரிக்கெட் பயணம் இருந்துள்ளது.

தினேஷ் கார்த்திக்கின் அப்பா கிருஷ்ணகுமார், ஓஎன்ஜிசியில் பணியாற்றினார். சிறுவயது முதலே தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் ஆசைகளுக்கு அவர் துணையாக இருந்துள்ளார். அவரும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது இதற்கு முக்கிய காரணம்.

சிறுவயதில் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக கிருஷ்ண குமார் இருந்துள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் அவரால் கிரிக்கெட்டைத் தொடர முடியவில்லை. தனக்கு நேர்ந்தது, தனது மகனுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் கிருஷ்ணகுமார். அதற்காகவே தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் கனவுகள் நனவாக அவரது ஒவ்வொரு முயற்சியிலும் உடன் நின்றார்.

தினேஷ் கார்த்திக் பயிற்சி பெறுவதற்காகவே, தன் வீட்டை ஒட்டியுள்ள நிலத்தை பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி, அதில் பேட்டிங் பயிற்சிக்காக நெட் அமைத்துக் கொடுத்தார் கிருஷ்ணகுமார். இது அவரது கிரிக்கெட் திறமைகள் ஒளிர்விட மிகவும் உதவிகரமாக இருந்தது. சிறு வயதிலேயே சென்னையில் நடக்கும் பள்ளி கிரிக்கெட் போட்டிகளில் தன் முத்திரையைப் பதித்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் உலகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மாவட்ட அணி, மாநில அணிகளைக் கடந்து இந்திய அணியில் இடம் பிடித்தார். 2004-ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் சீரிஸ்தான் அவரது முதல் தொடர்.

பேட்டிங்கில் திறமைவாய்ந்த விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இருப்பதால், இந்திய அணியில் அவர் நிலைத்து நிற்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தோனி எனும் கிரிக்கெட் சூறாவளி இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாக தினேஷ் கார்த்திக்கின் பயணத்துக்கு தடை வந்தது.

ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக தோனி உருவெடுக்க, எப்போதாவது அவர் காயம் அடைந்தாலோ, அல்லது முன்னணி பேட்ஸ்மேன்கள் யாராவது ஆட முடியாமல் போனாலோதான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு என்ற நிலை உருவானது.

ஆனால் இதற்கெல்லாம் தினேஷ் கார்த்திக் தளரவில்லை. தன்னால் இயன்றவரை போராடினார். அணியில் இருந்து தன்னை ஒதுக்கி வைக்கும்போதெல்லாம் ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி, இந்திய அணியில் தனது இடத்தை மீட்டெடுத்தார். தோனிக்கு பிறகாவது தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் ரிஷப் பந்த் வந்ததால் மீண்டும் வாய்ப்புகள் மங்கின.

இடையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் ஏற்பட தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் கிராஃப் இறங்கியது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் வீரர்கள் செய்வதுபோல், ஒருகட்டத்தில் வர்ணனையாளராக உருவெடுத்தார் தினேஷ் கார்த்திக். கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத, இப்போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றினார் தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் பயணம் அவ்வளவுதான். இனி அவர் வர்ணனையாளராகத்தான் கிரிக்கெட் பயணத்தை தொடர வேண்டும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, ஒரு ஃப்னிஷராக இந்த ஐபிஎல் தொடரில் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் தினேஷ் கார்த்திக்.

5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல்லில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக உருவெடுத்துள்ளார். இந்த தொடரில் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே பொதுவாக ஆடி வரும் தினேஷ் கார்த்திக், இந்த தொடரில் எடுத்த மொத்த ரன்கள் என்னவோ 274-தான். ஆனால், இந்த ரன்களை 200 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் அடித்துள்ளார் என்பதுதான் மிரளவைக்கும் விஷயம்.

தினேஷ் கார்த்திக்கின் இப்போதைய ஆசை இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவேண்டும் என்பதுதான். இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கவேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும்கூட கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி செல்லும் விமானத்தில் தானும் ஒரு பயணியாக இருக்க வேண்டும் என்பது தினேஷ் கார்த்திக்கின் ஆசை. ஆனால், 23 பந்துகளில் 44, 34 பந்துகளில் 55, 8 பந்துகளில் 30 ரன்கள் என்ற தினேஷ் கார்த்திக்கின் ஆவேச ஆட்டங்களைப் பார்க்கும்போது அந்த விமானத்தில் பைலட்டாகவே செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவராக தினேஷ் கார்த்திக் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...