சட்டம் ஒன்றே நிரந்த தீர்வு என்பதே ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ஒன் லைன்.
இந்தியில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கிய ’ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை, தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றவகையில் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
சட்டம் என்பது வழக்கறிஞர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். சட்டம் சரியானவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு சிரீயஸான கதையை, அளவுக்கு மீறாத திரைக்கதை மற்றும் சிந்திக்கத் தூண்டும் வசனங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.
படத்தின் உண்மையான ஹீரோ ‘கதை’. அந்த கதைக்கு தோள் கொடுக்கும் நாயகனாக களம் கண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். கதையின் ஓட்டத்தில் விஜயராகவன் ஐபிஎஸ் ஆக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதல், மோதல், கிண்டல், நகாசு என நடித்தே பழக்கப்பட்ட உதயநிதி, ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸான காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அரசியலில் தீவிரமாக களமாடும் தருணத்தில், ’மனிதன்’ படத்திற்கு பிறகு இப்படியொரு படத்தில் நடித்திருப்பது சமூக அக்கறையுள்ள உதயநிதி ஸ்டாலினாக அடையாளம் காட்டுவதற்கு ஒரு சரியான விசிட்டிங் கார்ட்.
தான்யா ரவிசந்திரன் 5 காட்சிகளில் வருகிறார். அதில் 4 காட்சிகளில் உதயநிதிக்கு ஃபோனில் டிப்ஸ் கொடுக்கிறார். ஐந்தாவது காட்சியில் உதயநிதியுடன் சேர்ந்து இரண்டு வரி வசனம் பேசுகிறார்.
தான்யா கதாபாத்திரம் படத்தில் இல்லாவிட்டாலும் கூட திரைக்கதையில் எந்த மாற்றமும், இழப்பும் இருக்காது என்பதை மட்டும் இயக்குநர் ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.
தான்யாவின் கதாபாத்திரம் போனில் பேசுவது போல் வாய்ஸை மட்டுமே வைத்திருந்தால், பட்ஜெட்டில் தான்யாவுக்கு சம்பளமாக கொடுத்த பத்து பதினைந்து லட்சத்தை தயாரிப்பாளருக்கு மிச்சப்படுத்தியிருக்கலாம்.
ஆரி, தாழ்த்தப்பட்ட மக்களின் கோபத்தைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் ஸ்கோர் செய்திருக்கிறார். சக்ரவர்த்தி, இளவரசு, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி தங்களது கதாபாத்திரங்களை நியாயப்படுத்தும் வகையில் நடித்திருக்கிறார்கள். ஆரி, சக்ரவர்த்தி நடித்திருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியினால் கிடைத்த மைலேஜ் இந்த வாய்ப்பு என்று இனி யாராவது க்ரெடிட் கேட்கலாம்.
காட்சிகளும், வசனங்களும் படத்தின் பலம். காவல் உதவி கண்காணிப்பாளராக பொறுப்பேற்க வரும் உதயநிதியின் ஜாதி என்ன என்பதை கண்டறிய சக்ரவர்த்தி முயலும் போது, பெரியார் ஆகஸ்ட் 15 புத்தகத்தை அவர் பார்ப்பது, ‘சட்டம் சிஸ்டத்தை காப்பாத்தும், நியாயத்தை அல்ல’ என்று ஷிவானி ராஜசேகர் கொந்தளிக்கும் காட்சி.
ஆரம்பத்தில் சாக்கடை கழிவுநீரை மனிதர்கள் நீக்குவது போன்ற காட்சிகளிலேயே ஒரு சீரியஸான படமென்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார் இயக்குநர்.
பிரேத பரிசோதனையில் உண்மையை மறைத்து ரிப்போர்ட் கொடுக்க சக்ரவர்த்தி வற்புறுத்தும் காட்சியில், உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா என்று டாக்டர் கேட்க, அதற்கு ’198 மார்க் எடுத்தவங்களுக்கு கிடைக்காத மெடிக்கல் சீட் 195 மார்க் எடுத்தவங்களுக்கு கிடைக்கும் போது, அங்கே மனசாட்சி இல்லையா’ சக்ரவர்த்தி எதிர்க்கேள்வி கேட்கும் காட்சி, ’மக்கள் எல்லோருமே சமம் என்றால், யார் தான் ராஜா’ என்ற மயில்சாமி கேட்பதற்கு, ’எல்லோருமே சமம் என்று சொல்பவன் தான் ராஜா’ என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லும் காட்சி, பெரியார் சிலையும், அம்பேத்கர் சிலையும் ஒரு இரும்புக்கூண்டுக்குள் இருப்பதை பார்த்து உதயநிதி ஒருவரிடம் கேட்கும் போது, ‘சாதிக்கலவரம் வந்தால் அம்பேத்கர் சிலையை உடைப்பாங்க. சாதி இல்லைன்னு சொன்னா பெரியார் சிலையை உடைப்பாங்க’ என்று அவர் கமெண்ட் அடிக்கும் காட்சி, ‘சட்டம் கொண்டு வந்த அம்பேத்கரையே ஒரு சாதி தலைவராகதான் பார்க்குறாங்க’, சாதி வலிக்காகதான் கட்சின்னு நினைச்சா இங்கே வலியை வைச்சுதான் கட்சியே நடத்துறாங்க’ போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் ஏகப்பட்ட வரவேற்பு.
கதையை விட்டு விலகாத ஒளிப்பதிவு, திரைக்கதைக்கு அவசியமான காட்சிகளை மட்டுமே தக்கவைத்த எடிட்டிங் என படத்தை பக்காவாக பேக்கேஜ் செய்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் என எதிலும் சமரசம் செய்யாமல், கமர்ஷியல் கலக்காமல், சிந்திக்க வேண்டிய சீரியஸான விஷயத்தை, ஒரு சிரீயஸ் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.
தாத்தாவைப் போலவே பேரனுக்கும் பெயர் சொல்ல உதவும் இந்த ’நெஞ்சுக்கு நீதி!