நானே வருவேன் – தமிழ் (அமேசான் ப்ரைம்)
‘மயக்கம் என்ன’ படத்திற்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் – தனுஷ் ஜோடி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘நானே வருவேன்’.
ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் இருக்கும் இரட்டையர்கள். இவர்களில் அண்ணன் தனுஷை தம்பி தனுஷ் கொல்லவேண்டும் என்ற அதிரிபுதிரியான கண்டிஷனை போடுகிறது ஒரு குட்டிப் பயலின் ஆவி. இதை நிறைவேற்றாவிட்டால் தம்பியின் மகளை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறது. ஆவியின் பிடியில் இருந்து மகளை மீட்க, அண்ணனை கொல்லச் செல்கிறார் தம்பி. ஆவி சொன்னபடி அண்ணனை கொன்று மகளை மீட்டாரா என்பதுதான் படத்தின் கதை.
சைக்கோபாத் அண்ணன், அமைதியே உருவான தம்பி என்று வெவ்வேறு குணத்தைக் கொண்ட இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் தனுஷ். இந்த 2 பாத்திரங்களில் மனதில் அதிகமாக பதிவது சைக்கோபாத் பாத்திரம்தான்.
இரட்டையர்களில் அண்ணன் கதிர். ஒரு சைக்கோபாத். தம்பி பிரபு. எதற்கும் பயப்படுகிற பிஸிபெலாபாத். இப்படி இரண்டு எதிரெதிர் குணாதிசயங்களை கொண்ட கதாப்பாத்திரங்களை களமாட தனுஷூக்கு ஆடுகளம் அமைத்து கொடுத்திருக்கிறார் செல்வராகவன்.
பொன்னியின் செல்வனுடன் சேர்ந்து கடந்த மாதம் திரைக்கு வந்த ‘நானே வருவேன்’ இப்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. த்ரில்லர் படத்துடன் வீக் எண்டைக் கழிக்க நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த சாய்ஸாக இருக்கும்.
கணம் – தெலுங்கு/தமிழ் (சோனி லைவ்)
டைம் மிஷினை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. இதில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும் படம் ‘கணம்’.
20 வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் உயிரிழந்த அம்மாவை, அந்த விபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக டைம் மிஷின் மூலம் 20 ஆண்டுகள் பின்னே செல்கிறார் ஹீரோ. அவருடன் 2 நண்பர்களும் இந்த டைம் மிஷினில் செல்கிறார்கள்.
டைம் மிஷின் மூலம் இப்படி 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற ஹீரோ, தனது அம்மாவை விபத்தில் இருந்து காப்பாற்றினாரா? நிகழ்காலத்துக்கு வெற்றியுடன் திரும்பினாரா என்பதுதான் படத்தின் கதை. அம்மாவாக அமலாவும், மகனாக சர்வானந்தும், டைம் மிஷினை கண்டுபிடித்த விஞ்ஞானியாக நாசரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சோனி லைவ் ஓடிடியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படத்தை பார்க்கலாம்.
Thirteen lives (தர்ட்டீன் லைவ்ஸ்) – ஆங்கிலம் – (அமேசான் பிரைம்)
சில ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரு சுரங்கத்தில் சிக்கிய 12 சிறுவர்களும், அவர்களின் பயிற்சியாளரும் பல நாட்கள் நடந்த கடுமையான போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டனர். சர்வதேச அளவில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அந்த 13 பேரும் எப்படி மீட்கப்பட்டனர் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் தர்ட்டீன் லைவ்ஸ்.
அப்போலோ 13, எவரெஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய ரான் ஹோவர்ட் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
ரக்ஷா பந்தன் – இந்தி (ஜீ 5)
பாக்யராஜ் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘தாவணிக் கனவுகள்’ படத்தின் சாயலில் பாலிவுட்டில் எடுக்கட்டுள்ள படம் ரக்ஷா பந்தன். இதில் 4 தங்கைகளுக்கு திருமணம் செய்துவைக்க முயலும் அண்ணனாக நடித்துள்ளார் அக்ஷய் குமார். அவருக்கு ஜோடியாக பூமி பட்நேகர் நடித்துள்ளார்.
சகோதர பாசம், செண்டிமெண்ட் என வாரக் கடைசியை கழிக்க விரும்பினால் ஜீ 5 ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.