No menu items!

உலகக் கோப்பை 2023 – இந்திய அணி சர்ச்சைகள்!

உலகக் கோப்பை 2023 – இந்திய அணி சர்ச்சைகள்!

இந்தியாவில் உள்ள சிக்கலான பதவிகளில் ஒன்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவி. ஒவ்வொரு முறை அணியை தேர்ந்தெடுக்கும்போதும், குறிப்பிட்ட சில வீர்ர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்ற கேள்வி வரும். அதேபோல் சில வீர்ர்களை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்ப்புகள் வரும். உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதிலும் சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. அந்த சர்ச்சைகளைப் பார்ப்போம்…

ஷர்துல் தாக்குர் எதற்காக?

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஷர்துல் தாக்குரை சேர்த்துள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவருமான ஸ்ரீகாந்த், “கடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு ஒரு சர்வதேச போட்டியில்கூட ஷர்துல் தாக்குர் 25 ரன்களுக்கு மேல் அடித்ததில்லை. கடந்த 12 இன்னிங்ஸ்களில் மொத்தமே 130 ரன்களைத்தான் அவர் அடித்துள்ளார். அதுபோல் ஒரு ஒருநாள் போட்டியில்கூட அவர் 10 ஓவர்களை வீசுவதில்லை. கடந்த 24 ஒருநாள் போட்டிகளில் 2 முறை மட்டுமே அவர் தனது முழு கோட்டாவான 10 ஓவர்களை வீசியிருக்கிறார். அப்படி இருக்கும்போது ஆல்ரவுண்டர் என்ற கோட்டாவில் அவரை எப்படி அணிக்குள் சேர்த்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்களிடம் இருந்தும் இதே கேள்விகள் வருகின்றன.

ஷர்துல் தாக்குருக்கு பதில் ஹர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளரையோ அல்லது சாஹல், அஸ்வின் போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளரையோ அணியில் சேர்த்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக உள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி:

ஐபிஎல், ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடும் சஞ்சு சாம்சனை தேர்வுக்குழு தொடர்ந்து புறக்கணிப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள். இந்தியாவுக்காக ஆட வெறும் 13 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் சில இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட்டிங் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக பேட்டிங் செய்துள்ள சஞ்சு சாம்சன், 55.7 ரன்களை தனது சராசரியாக வைத்துள்ளார். அதேநேரத்தில் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் அடித்துள்ள சராசரி ரன்கள் 24.33. அப்படி இருந்தும் சஞ்சு சாம்சனுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

“காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாமல் இருக்கும் கே.எல்.ராகுலையும், குறைந்த சராசரி கொண்ட சூர்யகுமார் யாதவையும் அணியில் சேர்த்து, தொடர்ந்து சரியாக ஆடிவரும் சாம்சனை தேர்வுக் குழு புறக்கணித்தது வேதனை அளிக்கிறது. சஞ்சு சாம்சன் இன்னும் இந்தியாவுக்காக தனது நாட்களை வீணடிக்கக் கூடாது. வேறு நாட்டில் குடியேறி அந்த நாட்டு அணியில் இடம் பிடிக்க வேண்டும்” என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் குமுறியுள்ளனர்.

புறக்கணிக்கப்பட்டாரா சாஹல்?

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக சாஹல் இருந்து வருகிறார். இந்தியாவுக்காக 72 ஒருநாள் போட்டிகளில் ஆடிய சாஹல், 121 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சராசரியாக ஒரு ஓவருக்கு 6 ரன்களுக்கும் குறைவாகத்தான் ரன்களைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அப்படி இருந்தும் அவருக்கு பதிலாக அக்‌ஷர் படேலை அணியில் சேர்த்திருப்பதும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
ஐபிஎல் பாலிடிக்ஸ்

உலகக் கோப்பை நடக்கும் இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை. ஆனால் இந்திய அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர்கூட இல்லாதது ரசிகர்களை குழப்பியுள்ளது. இத்தனைக்கும் உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களில் ஒருவரான அஸ்வின் இருந்தும், கடந்த 2011-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் அவர் சிறப்பாக ஆடியும் அவரை அணியில் தேர்ந்தெடுக்காதது கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்திய அணியின் தேர்வில் புறக்கணிக்கப்பட்ட அஸ்வின், சாஹல், சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்தவர்கள். ஆனால் மூவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்குள் ஐபிஎல் பாலிடிக்ஸ் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் இந்த சர்ச்சைகள் அடங்கிவிடும். ஆனால் கோப்பையை வெல்லாமல் போனால் நிச்சயம் இது மிகப்பெரிய விவாதமாக மாறிவிடும். தேர்வாளர்கள் தலை உருளும். உலகக் கோப்பையை வென்று தங்களை தேர்ந்தெடுத்த தேர்வாளர்களின் கவுரவத்தை இந்த அணி காக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...